-சிகரம்
அய்.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற ஏழைக் குடும்பத்துப் பெண் சத்தியமங்கலம் வான்மதி. இவர், ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசிய பேச்சு எல்லோரையும் குறிப்பாக பெண்களை எழுச்சி கொள்ளச் செய்தது.
ஆணியடித்தாற் போன்ற அந்த அற்புதப் பேச்சைப் படியுங்கள்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று யார் ஒருவர் கூறுகிறாரோ அவர் உண்மையில் ஒரு முட்டாளாகத்தானிருப்பார். கண்டிப்பாக நான் முட்டாள் இல்லை. காரணம், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது.
இன்டர்நேஷனல் பள்ளி, சி.பி.எஸ்.இ.பள்ளி, பப்ளிக் ஸ்கூல், பள்ளியில் ஏ.சி.வகுப்பறை ஒருபுறம், மற்றொருபுறம் அரசு பள்ளி, பழைய டேபிள் சேர், சாதாரண வகுப்பறை, நான் அரசு பள்ளியில் படித்தவள். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இந்த பாகுபாடு எப்படி வந்தது? எல்லாம் சமூகத்தின் குற்றம்தான். என்னைப் பொறுத்தவரை ஆர்வம்தான் சிறந்த ஆசான். நான் மாணவியாகவே இருக்க விரும்புகிறேன்.
என்னோட ஆசிரியர்களிலேயே எனக்கு அதிகம் யாரைப் பிடிக்குதுனு கேட்டா தமிழ் ஆசிரியர்கள்தான். ஏன்னா… எனக்கு தன்னம்பிக்கை, தைரியம், வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது தமிழ்தான். எனக்கு ஆங்கிலம் வரவே வராது. தெரியாததை தெரியாதுனு வெளிப்படையா சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. வாழ்க்கை முழுக்க தேடிக்கிட்டே இருக்கணும்.
எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நான்தான் அவுங்களுக்கு கையெழுத்து பழக்கிவிட்டேன். எங்கம்மாவால் முடிந்தது, என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது, இனி நான் எத்தனை பேரை உருவாக்கப் போறேன் என்ற கேள்வி என்னுள்ளே இருந்துகிட்டே இருக்கும்.
எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க. இரண்டும் பெண்ணாக பிறந்துவிட்டீர்கள். எனக்கு கடைசில கொள்ளி வைக்க ஒரு பையன் இல்லையேனு… அதைக் கேட்டா எனக்கு பத்திக்கிட்டு வரும். ஏம்மா நான் தீ வெச்சா நீ எரியமாட்டீயா… செத்த பிறகு கொள்ளி வைக்க எதுக்குப் பையன்? இங்கு பிறந்து வேலை வாய்ப்புக்காக லண்டன், அமெரிக்காவுல இருக்கிற எத்தனை பேர் அவுங்க தாய், தகப்பன் இறதிச் சடங்குக்கு வர்றாங்க? அது ஒரு சடங்கு, சம்பிரதாயம்தான். அதை ஒரு பொண்ணு செய்யக்கூடாதா? எங்கப்பாவுக்கு இப்போது உடம்பு சரியில்லை நான்தான் உடனிருந்து பார்த்துக்கிட்டேன்.
இப்போ எங்கம்மா என்னைப் பார்த்து ஒரு பையன் இருந்திருந்தாக்கூட இந்தளவுக்கு பார்க்க மாட்டான்னு சொல்றாங்க. பசங்க, பொண்ணுனு ஏன் பிரிச்சி பார்க்க வேண்டும்? என் மனதில் உள்ள கோபம், இப்போது வரை அணையலை. அந்தக் கோபம் எனக்குள் அணைய வேண்டுமென்றால் இந்த சமூகம் உருவாக்கி வைத்துள்ள ஏற்றத்தாழ்வுகளில் உள்ள பார்வை மறைய வேண்டும்.
நான் இரண்டாவது மகள். நான் பிறக்கிறதுக்கு முன்னாடி எங்கம்மா அப்போ அரசமரத்தைச் சுற்றி வந்தாங்களாம். ஏன்னா நான் பையனா பொறக்க வேண்டும்னு. என் உறவினர்கள், சுற்றத்தார் பொறக்கப் போறது பையன்தான்னு சொன்னாங்களாம். எங்கம்மாவின் நம்பிக்கை, இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு பெண்ணாகப் பிறந்தேன். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இன்றுவரை ஒரு சதவீதம்கூட நான் பெண்ணாக பிறந்ததுக்கு வருத்தப்பட்டது கிடையாது. அதற்கானத் தேவையும் இல்லை. இன்று எனக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்னும் இன்னும்னு தேடலில் உள்ளேன்.
அய்.ஏ.எஸ். என்பது ஒரு போட்டித் தேர்வு அவ்வளவுதான். படிச்சா எல்லோராலயும் ஜெயிக்க முடியும். தூரத்துல இருந்து பார்த்தா மலைப்பாத்தான் தெரியும். அருகே போய் ஒவ்வொரு கல்லா எடுத்துப் போட்டா மலைகூட ஒன்றும் கிடையாது.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நமக்கு நல்ல டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், ஆசிரியர்கள், லாரி டிரைவர்கள், கார் டிரைவர்கள் வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை வறுமை என்பது பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது. ஏராளமானபேருக்கு மனசுல நிறைய வறுமை இருக்குது. அந்த வறுமையைப் போக்கச் சிறிது கல்வியும், அதிக வாசிப்பும் சமூக சிந்தனையும் தேவை.
இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்திருந்தால் நான் இப்போது ஒரு விவசாயியாகத்தான் இருந்திருப்பேன். என் குடும்பத்தில் நிலம் இல்லை. என்னோட மூலதனம் கல்விதான்.
தேடல் என்பது என்கிட்டே இருந்தது. அந்த மூலதனத்தை வைத்துதான் நான் முன்னேறியிருக்கிறேன். உங்ககிட்டே எது மூலதனமோ அதை வைத்து முன்னேறுங்கள்…. என ஓயாத கைதட்டல்களுக்கிடையே பேசினார் வான்மதி அய்.ஏ.எஸ்.