இவற்றைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆனால், முறைதவறிப் பயன்படுத்தினால் அதனால் விளையும் கேடுகள் மிகவும் அதிகம்.
நாம் ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கும்போது, வங்கிப் புத்தகமும், ஏ.டி.எம். கார்டு எனப்படும் டெபிட் கார்டையும் கொடுப்பார்கள்.
வெளியிடங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது இக்கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்திவிடலாம். இதனால் கையில் பணம் எடுத்துச் சென்று தொலைக்கும் நிலை ஏற்படாது. பணத்தைப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டிய பதட்டமும் இருக்காது.
ஆனால், டெபிட் கார்டுமூலம் பணம் செலத்தும்போது, செலுத்தப்பட்ட பணத்திற்கான பில்லை நம்மிடம் காட்டிக் கையொப்பம் பெறுவர். அப்போது பில்லைப் பார்க்காமலே பலரும் கையொப்பம் இடுவர். இது தப்பு. 1,000 ரூபாய்குப் பதிலாக ரூ.10,000 அல்லது ரூ.1,00,000 எடுக்கப்பட்டிருக்கலாம். ஏமாற்றும் நோக்கம் இல்லாமல் கைத்தவறுதலாகக் கூட கடைக்காரர் செய்திருக்கலாம். எனவே, தொகையைச் சரிபார்த்தப் பின்புதான் கையொப்பம் இடவேண்டும்.
வங்கியில் நமது செல்பேசி எண்ணைக் கொடுத்துவைத்து, பணம் எடுத்தால் அச்செய்தி நமக்குக் குறுஞ்செய்தியாக வர ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் பணம் பறிபோகாமல் தடுக்கலாம், தவிர்க்கலாம்.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி 15 ஆயிரம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை நம்முடைய வருவாயின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட நாள் அவகாசத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் பெற முடியும்.
பொருளாக வாங்கினால் முழுத் தொகையும், பணமாகப் பெற நினைத்தால் 50% தொகை 18% வட்டியுடன் பெறலாம்.
கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம்! நாம் வாங்கும் பொருளுக்கு 30 முதல் 50 நாள்களுக்குள் பணம் செலுத்தினால் இக்கார்டைப் பயன்படுத்துவது பயனுள்ளதாய் அமையும். இல்லாவிட்டால் இது கடன் சுமையில் தங்கும்.
திடீர் மருத்துவச் செலவு, உறவினர், நண்பரின் திருமணச் செலவு, எதிர்பாரா செலவு ஏற்படும்போது, கையில் பணமில்லா நிலையில் இது மிகவும் பயன்படும்.
நாம் செலுத்தவேண்டிய இன்சூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், வங்கிக் கடன், எரிவாயுக் கட்டணம் போன்றவற்றைக் கிரெடிட் கார்டு மூலம் கட்டலாம். நாம் மறந்தாலும் தானாக கிரெடிட் கார்டுமூலம் எடுத்துக்கொள்ளும்.
நமக்கு அலைச்சல் இல்லை, நேர வீணடிப்பு வராது.
ஆனால், கிரெட் கார்டைப் பயன்படுத்தி பெறப்பட்டக் கடனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாவிட்டால் வட்டிமேல் வட்டி போட்டு, அபராதத் தொகை, காலதாமதக் கட்டணம் என்றுப் பல சேர்ந்து அழுத்தும்.
கிரெடிட் கார்டுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என்று சொல்லி அதை ஏற்றால் அதற்குப் பிரிமியம் கட்டவேண்டும். எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
– ஒளிமதி