காவிகளின் மிரட்டலுக்குப் பணியலாமா?

ஜூன் 16-30

ஊழலை ஒழிக்கிறோம் என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா – மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டில்லியில் அரங் கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக் களும், காவிகளும் ஆண்டவன் அவதாரங் களும், தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக்கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!

 

இந்தி வந்து குதித்தது ஏன்?

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பது போல பாபா ராம்தேவ் உண்ணாவிரத கோரிக்கைகளில் ஒன்று தற்போது ஆட்சியில் உள்ள ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு, இந்தியையே நாட்டு நிருவாகத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தவும் வேண்டுமாம்! அது ஒரு முக்கிய பாபா திட்டம்! புரிந்துகொண்டீர்களா?

இது முழுக்க காவிமயமாக்கும் மத்திய ஆட்சிக்கு எதிரான திட்டமிட்ட மறைமுக முயற்சி.  இதற்குப் போய் மயிலே மயிலே இறகு போடு என்று கூறி அவர்களுக்குப் பின் ஓடலாமா? காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு திக் விஜய் சிங்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் என்பது சற்று ஆருதல்!

 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு யாதவர் திடீரென – யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளிநாட்டுப் பணக்காரர்களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை,  பாலியல் வன்முறை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தைக் கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தைப் பயமுறுத்திட இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர் – பாபா ராமதேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி –  குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு, திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அனுமதிக்கப் படமாட்டார்களாம்! மாறாக கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்

2. சாத்வி ரிதம்பரா

3. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்

4. இந்து அமைப்புகள்

இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் என்ற அறிக் கையை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத்  உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்கத் தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும்  – அமைச்சர்களைத் தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இத னைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.

அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட – ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?

பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வருணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?

ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை – ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத் தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதைப் புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *