Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

யாரும் சாதிக்காததை அண்ணா சாதித்தார்!

வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.

அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்தவராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை.

ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனையாகும்.

நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னாபின்னப்படுத்தி அமைப்புசாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன் வரவில்லையே!

இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்றவர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே.

அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், சாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை – பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?

தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும், காந்தி ஒழியவேண்டும் என்பதுதானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல்லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண்டாக்கி காட்டி விட்டாரே!

பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று அதற்குப் பொருள் என்ன?

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை – அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திருமணங்களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.

இது எதைக் காட்டுகிறது கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!

கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று?

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது.

மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.