காக்கும் கடவுளின் யோக்கியதை இதுதானா?

செப்டம்பர் 01-15

– மஞ்சை வசந்தன்


நாள்தோறும் நாளேடுகளைப் புரட்டினாலும், தொலைக்காட்சியை நோக்கினாலும் கோயில், கடவுள், தரிசனம் சார்ந்த விபத்துகள், மரணங்கள், பலிகள் ஏராளம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறான்! எது நடந்தாலும் அது இறைவன் செயலே என்கிறான்!

அப்படியானால் கோயில் கூட்ட நெரிசலில் கும்பலாகச் சாகிறானே அதுவும் கடவுள் செயல்தானே! தன்னை வணங்க வந்த பக்தர்களைத் தன் முன்னே சாகடிப்பவன்தான் கடவுளா?

 

நன்மை கிடைக்கும் என்றுதானே நடையாய் நடந்து வருகிறான். அவனுக்கு நன்மை தராவிட்டாலும் உயிரோடாவது அவனைத் திருப்பி வீட்டிற்கு அனுப்ப வேண்டுமல்லவா? மாறாக, கடவுளை நம்பி வந்தவர்கள் நெரிசலில் சிக்கியும், நீரில் மூழ்கியும், விபத்தில் நசுங்கியும் சாகிறார்கள். அதுவும் தினம் இவை நிகழ்கின்றன என்றால், கடவுள் இல்லை என்பதற்கு இவையே பெரும் ஆதாரங்கள் அல்லவா?

இதோ கடந்த காலங்களில் நிகழ்ந்த கோயில் சாவுகளைப் பாருங்கள்!

1.    3 பிப்ரவரி 1954  அலகாபாத் உத்திரப்பிரதேசத்தில் நடந்த கும்ப மேளாவிழாவில் ஆயிரத்திற்குமேற்பட்டோர் மரண மடைந்தனர்.

2.    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவில், 1992இல் நடைபெற்ற மகாமகத் திருவிழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில்  மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 60 நபர்கள் பலியானார்கள்.

3.    30 மார்ச் 2002 ஜம்மு ரகுநாத் கோவிலில் நடந்த விபத்து 40 பேர் மரணம்

4.    27 ஆகஸ்ட்  2003 நாசிக் நகரில் நடந்த கும்பமேளாவின் போது நடந்த விபத்தின் போது 40 பேர் மரணமடைந்தனர். 100 பேர் காயம்

5.    25 ஜனவரி  2005  மகராஷ்டிர மாநிலம் மந்திரா தேவி கோவிலில் நடந்த விபத்தில் 380 பேர் மரணமடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

6.    12 ஜூலை 2005 ஒரிசா பூரி தேர்த்திருவிழாவில் 13 பேர் மரணம்

7.    30 செப்டம்பர் 2006 ராஜஸ்தான் சாமூண்டீ தேவி கோவிலில் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 220 பேர் மரணமடைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

8.    7 மார்ச்  2008 மத்தியப்பிரதேசம் இந்தூர் கர்லியா பகுதி கோவில் விபத்து 30 பேர் மரணம்

9.    3 ஆகஸ்ட்  2008 ஹிமாச்சலப்பிரதேசம் நைனா தேவி கோவிலில் நடந்த விபத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 40 பேர் குழந்தைகள் 88 பேர் பெண்கள்.

10.    14 ஜனவரி 2010 கங்காசாகர் மகர சங்கராந்தி விழா விபத்து 20 பேர் மரணம்

11.    4 மார்ச் 2010 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் பிரதாப்கரில் உள்ள மடம் ஒன்றில் இலவச உடை கொடுப்பதாகக் கூறி நடந்த கூட்டம் ஒன்றில் குறுகிய கதவுகளில் நடந்த நெரிசலில் 60 பெண்கள் மரணமடைந்தனர்.

12.    16 அக்டோபர் 2010 பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம் தேவி கோவில் விழாவில் நடந்த விபத்து 20 பேர் மரணம்.

13.    14  ஜனவரி  2011,சபரிமலையில் மகரஜோதியின் போது ஏற்பட்ட நெரிசலில் 120 பேர் மரணம், 200 பேர் படுகாயம்.

14.    8  நவம்பர் 2011 ஹரித்துவாரில் நடந்த கங்கை ஆராத்தியின் போது பாலம் உடைந்து விட்டதாகக் கிளம்பிய வதந்தியால் ஏறப்ட்ட நெரிசலில் 22 பேர் மரணமடைந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.

15.    26 செப்டம்பர் 2012 ஜார்கண்ட் கோவில் விபத்து 13 பேர் மரணம்

16.    10 பிப்ரவரி 2013 அலகாபாத்தில் நடந்த கும்பமேளா விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

17.    ஜூன் 2013 கேதார்நாத் உத்தரகண்ட் பகுதியில் யாத்திரையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் நடந்த விபத்தில் 7000 பக்தர்கள் பலி, 1713 பக்தர்களைக் காணவில்லை, 10000 மேற்பட்டோர் காயம்.

18.    14 அக்டோபர்  2013 நவராத்திரி திருவிழா கொண்டாடியபோது குறுகலான பாதையில் கனரக வாகனம் கட்டுப்பாடிழந்து வருவதாகப் பரவிய வதந்தியால் 115 பக்தர்கள் மரணம் 200 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.

19.    10 பிப்ரவரி 2012 ஜூனாகட் (குஜராத்) பாவ்னாத் கோவில் விபத்து 10 பேர் மரணம்

20.    25 ஆகஸ்ட் 2014  மத்தியபிரதேசம் சத்னா மாவட்டம் உள்ள  சோமாவதேஷ்வர் கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி  25 பேர் மரணம்

21.    3 அக்டோபர் 2014 பீகார் மாநிலம் பாட்னா நகரில் தசரா விழாவின் இறுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

22.    1980-முதல் இறுதியாக 2014 பீகார் மாநிலம் பாட்னா நகரில் தசராவிழாவின் போது நடந்த விபத்து என இந்தியா முழுவதும் நடந்த கோவில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  30,000 ஆயிரத்தை தாண்டும். சுமார் அரை லட்சம் பேர் நிரந்தரமாக உடல் ஊனமுற்றனர். இவ்விபத்துக்களால் அரசுக்கு 70 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.

கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக பல்டல் மலையடிவார முகாமில் இருந்து குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக யாத்ரீகர்கள் குழு சென்று கொண்டிருந்த போது, பின்னிரவு நேரத்தில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டது.

சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் முகிற்பேழ் மழை கொட்டத் தொடங்கியது. அசுர வேகத்தில் பெய்த பெருமழையில் இருந்து தப்பிக்க வழியில்லாத பக்தர்கள் நடுவழியில் திண்டாடிப்போய் நின்றனர். இதிலும் பலர் பலியாயினர்.

புனித யாத்திரை இதுதானா? 42 பேர் பலி

சிம்லா, ஜூலை 25_ பஞ்சாப் மாநிலம் மான்சா, பர்னாலா மற்றும் பட் டின்டா மாவட்டங்களைச் சேர்ந்த 65 பேர், இமாச்சல பிரதேசத்தின் மனிகாரனில் உள்ள சீக்கிய புனித தலத்துக்கு ஒரு பேருந்தில் சென்றனர். இந்த பேருந்து நேற்று முன்தினம் மாலையில் இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்துக்கு உட்பட்ட சர்சாரி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பார்வதி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து முழுவதுமாக உருக்குலைந்ததுடன், பயணிகள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர்.

விபத்து நடந்து ஒரு நாள் கடந்ததால் மீதமுள்ள 42 பேரும் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. இதில் 9 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்ற பயணிகளின் உடல்கள் ஆற்றில் உள்ள பாறைகள் மற்றும் சேற்றில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவற்றையும் மீட்கும் பணிகளை குல்லு மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று (14.7.2014) கோதாவரி புஷ்கரம் விழா தொடங்கியது. ராஜமுந்திரியில் ஆந்திர அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோதாவரி புஷ்கரம் விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் இன்று காலை புனித நீராடி தொடங்கி வைத்தாராம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் புனித நீராடினாராம். அவரைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினார்களாம். பக்தர்கள் குளிப்பதற்காக தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ராஜமுந்திரியிலுள்ள கோட்டக்கும்மம் என்ற இடத்தில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் அவர்கள் ஆற்றில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி பலர் மயங்கி கீழே விழுந்தனர். கூட்டத்தில் மிதிபட்டு 27 பேர் பலியானார்கள். மேலும் 10-_க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கோயில் விழாவில் கூட்ட நெரிசலில்  சிக்கி 11 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம், டியோகர் மாவட்டத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் 9.8.2015 அன்று அதிகாலை நிகழ்ந்த தள்ளுமுள்ளுவினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்தனர்.

தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் பேலாபகளில் உள்ள இந்தக் கோயிலில் அம்மன் சிலையை கங்கை நீரால் குளிப்பாட்டும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்க நேற்றிரவில் இருந்தே சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் குவிந்திருந்தனர். கிலோ மீட்டர் கணக்கில் நீண்டிருந்த வரிசையில் காத்திருந்த பக்தர்கள், குறுகலான பாதை வழியாக ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றதால் திடீரென அங்கு தள்ளுமல்லு ஏற்பட்டது.

வரிசை கலைந்ததும் அனைவரும் கோயிலின் முன்பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர். இதில் சிலர் கால் தடுக்கி கீழே விழுந்தனர். பின்னால் ஓடிவந்தவர்கள் அவர்கள் மீது தடுக்கி விழுந்தனர். அடுத்தடுத்து, ஆவேசமாக ஓடி வந்தவர்களும் ஒருவர்பின் ஒருவராக கீழே விழுந்து மிதிபட்டனர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் 11 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடவுள் காக்கும், வளம் தரும், நலம் தரும் என்று விரதமிருந்து, உடலை வருத்தி பணத்தைச் செலவு செய்து, நேரத்தைச் செலவிட்டு கடவுளைக் காண பக்தர்கள் செல்கிறார்கள். அப்படி தன்னை நம்பி வரும் பக்தனையே காக்க முடியாதது எப்படி கடவுளாகும்?

கடவுள் என்று ஒன்று இல்லை. அது காப்பதும் இல்லை, இயக்குவதும் இல்லை.

பக்தன் நம்பிச் சென்று மடிவதுபோல மடத்தனமும், முட்டாள்தனமும் வேறு இல்லை.

பலன் கிடைக்கும் _ புண்ணியம் கிடைக்கும் என்றவுடன் போட்டியிட்டு முட்டி மோதுவது அறிவீனம் என்பவைதானே மேற்படி நிகழ்வுகளின் மூலம் தெளிவாகிறது.

ஒருமுறையல்ல, பலமுறை இப்படி நிகழ்ந்ததும் கடவுளை நம்பிச் செல்கின்றவனை காட்டுமிராண்டி என்று சொன்னால் தப்பென்ன? சொல்லுங்கள்! இன்னமும் நம்புகிறீர்களா கடவுளை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *