திராவிட மாணவர்களே, பெரியாரை
சுவாசியுங்கள்!
தஞ்சை வல்லத்தில் வளர்ந்தோங்கி வரும் பெரியார் – மணியம்மை பல்கலைக்கழகத்தின், ஆராய்ச்சி மய்யத் துறைகளில் ஒன்றான, பெரியார் உயர் ஆய்வு மய்யத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக, மாணவ சமுதாயத்தினரும் தந்தை பெரியாரின் வாழ்வு, வாக்குகள், கருத்துரைகளை எல்லாம் எளிதில் விளங்கிக்கொண்டு, உள்வாங்கி உயர்தலுக்காக, பெரியார் ஆயிரம் _ வினா விடை என்ற அரிய நூல் ஒன்றை பல்லாயிரக்கணக்கில் பரப்பி, உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படுவதற்காக, வினா_விடை மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பெறுகின்றன.
அந்தப் பள்ளி மாணவர்களில், ஈடுபடுவோர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, ஆறுதல் சிறப்புப் பரிசுகள் என்றெல்லாம் தந்து ஊக்கப்படுத்தி, அவர்களது பொது அறிவையும், எதையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் வகையில் படிப்பறிவோடு பகுத்தறிவையும் வளர்க்கின்ற அருமையான முயற்சி இது; மாணவ சமுதாயத்திற்குப் பொன்னான வாய்ப்பு இது!
ஒரு காலத்தில் படிப்பு _ கல்வி என்பது உயர்ஜாதியினருக்கே என்ற குலதர்ம அடிப்படைத் தத்துவம் கோலோச்சிய நாட்டில், அனைவருக்கும் கல்வி _ நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை என்று இன்று எங்கெங்கு காணிணும் பள்ளியடா அதன் மூலம் இளைஞர்கள் ஏழு கடல் தாண்டும் சக்தியடா என்று புதுப் பள்ளு பாடிடும் நிலை உருவாகி உள்ளது. ஒரு காலத்தில் படிக்க ஆள் தேடிய காலம் _ பருவம் முடிந்து, இடங்கள் காலி என்று அறிவிக்கும் வண்ணம் கல்வி வாய்ப்புகள் பரந்துபட்டு ஏற்பட்டுள்ள நிலைமை யாரால் வந்தது?
தந்தை பெரியாரால் வந்தது?
திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சி முதல் இன்றுவரை – வந்தது!
கல்வி வள்ளல் காமராசர் ஆட்சியால் வந்தது!
சோறு போட்டுப் படிப்பு,
உடை கொடுத்துப் படிப்பு,
சம்பளம் இல்லாது (ஒடுக்கப்பட்டோருக்கு) படிப்பு,
பேருந்துகளில் இலவச பஸ் பாஸ்,
சைக்கிள் இலவசம் பள்ளி வருவதற்கு
இலவசம் என்று மலைவாழையாகக் கல்வி அனைத்து இருபால் இளைய சமூகத்தினருக்கும் எப்படி சாத்தியமாயிற்று.
மூலகாரணம்
பெரியார்! பெரியார்! பெரியார்!
அவரைப் பற்றி வாசித்தால் மாத்திரம் போதாது. மாணவர்கள் சுவாசிக்க வேண்டும்.
1953இல் ஆச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் நீடித்து நிலைத்திருந்திருக்குமானால், கிராமத்துக் குப்பனும், விவசாயி முத்தன் மகன் முனியனும் இன்று பொறியாளர்களாக, ஸ்வீடனிலும், சுவிட்சர்லாந்திலும் கை நிறையச் சம்பளம் வாங்கி மகிழ்கின்றனரே அது முடிந்திருக்குமா?
ஏன் படிக்கவில்லை?
அது என் தலையெழுத்து!
(ஏனய்யா பிள்ளையைப் படிக்க வைக்கவில்லை?
எங்களுக்கெல்லாம் படிப்பு வராது.
மாடு கண்ணு மேய்ச்சாப் போதும்.
யார் யாருக்கு எது கொடுப்பனையோ அதுதானே சாமி தங்கும்)
இப்படிப் பேசி ஆண்டாண்டுகளான அடிமைப் புத்தியை மாற்றிய மாபெரும் புரட்சியாளர்தான் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன்.
அவர்பற்றி அறியாத படிப்பு என்ன படிப்பு.
வகுப்பறையில் அதிகம் பெறமுடியாத பாடங்கள் _ இத்தேர்வின் மூலம் _ அறிவுக் கருவூலமாக மாணவர்களை ஆக்க வாய்ப்புத் தருகிறது.
ஆசிரியர்களே, பெற்றோர்களே, மாணவச் செல்வங்களே, அள்ளி அள்ளி அருந்துங்கள்!
இந்திய அரசியல் சட்டத்தின் 51கி பிரிவின்கீழ் உள்ள அடிப்படைக் கடமையாக ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டியது, அறிவியல் மனப்பான்மைப் பரப்புதல், மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேட்டு ஆராய்தல், சீர்திருத்தம் _ இவைகளைப் பரப்புவதற்கு இம்முயற்சி ஒரு அருமையான ஏற்பாடு. மாணவர்கள் உள்ளங்களில் இதை விதைக்கும் சீரிய ஏற்பாடு.
– கி.வீரமணி,
ஆசிரியர்