லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல் நாட்டில் வைத்து சிகிச்சை தரப்படவுள்ளதாம். இதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்புகிறார் லலித் மோடி. இதற்காக அவர் சுஷ்மாவின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. இதையடுத்து இங்கிலாந்து எம்.பி. கீத் வெய்ஸுடன் பேசிய சுஷ்மா, லலித் மோடி இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்பினால் அதை இங்கிலாந்து அரசு தாராளமாக அனுமதிக்கலாம். அதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் வெளியாகி தற்போது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சுஷ்மா. அதில், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் என்னிடம் பேசினார் லலித் மோடி. அப்போது தனது மனைவிக்கு புற்றுநோய் தொடர்பாக போர்ச்சுகல் நாட்டில் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே தான் அவருடன் இருக்க விரும்புவதாகவும், இதற்கு தனக்கு அனுமதி தேவை என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து அவருக்கு சுற்றுலா அனுமதியை வழங்க விதிமுறைப்படி இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நான் மனிதாபிமான அடிப்படையில் பரிந்துரைத்தேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.