இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்
இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கொள்கையிலும் சரி தோற்றத்திலும் சரி நிமிர்ந்து நிற்கக் கூடியவர். உள்ளத்திற்கு ஏற்பவே உடல் செயல்படும். அவர் உள்ளம் என்றும் உறுதியானது நேரானது. அதற்கேற்பவே அவர் உடலின் தோற்றமும், மிடுக்கும் இருக்கும்.
கொள்கையில் உறுதி, தலைமையை மதித்தல், நல்லொழுக்கம், குற்றம் குற்றமே எனல், மாற்றாரை மதிக்கும் மாண்பு, செருக்கின்மை, சான்றாண்மை, ஆய்வு நுட்பம், சொல்வன்மை என்று பல்வேறு சிறப்புக்களின் நிலைக்கலன் அவர்.
அவர் வாழ்வு என்பது ஒரு வாழ்க்கை நெறி. எனவே, அவர் வாழ்வையும் தொண்டையும் விளக்கும் இந்நூல் ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகும். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர்.
அய்யாவையும், அண்ணாவையும் வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டவர். வாழ்வு எப்படியிருக்கும் என்பதற்கு இனமானப் பேராசிரியரின் வாழ்வே ஓர் எடுத்துக்காட்டு.
மாணவப் பருவத்தில் இனமானப் பேராசிரியர் பேசிய பேச்சைக் கேட்ட பாரதிதாசன் அவர்கள்,
இதுவல்லவா பேச்சு. அந்தக் கால ஞான சம்பந்தனுக்கு ஞானப்பால் அன்னை ஊட்டி அதனால் பாட முடிந்தது என்பர். இந்த மாணவன் பகுத்தறிவுப் பால் பருகியே பேசினான் என்பேன். மற்றவர்கள் எல்லாம் பிறந்து _ வளர்ந்து _ பேசிப் பழகுகின்றனர். இவர் பேசிக்கொண்டே பிறந்திருப்பார் போலும். என்றார். இதைவிட அவர் பேச்சாற்றலுக்கு என்ன சான்று வேண்டும்?
சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்; பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்; மூடநம்பிக்கை ஒழிப்பாளர்; மொழிப்பற்றாளர்; இனமானக் காப்பாளர், எதிரியும் மதிக்கும் மாண்பாளர். சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என்ற முதன்மைத் துறைகளின் அமைச்சராய் திறம்பட பணியாற்றிய திறமையாளர்; குறைகாண இயலா நேர்மையாளர் இவர்.
முத்தமிழ் அறிஞர் அவர்களின் சித்தம் கவர்ந்த நண்பர். ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பாசமிகு அண்ணன். தமிழினத்திற்கோ தகுதிவாய்ந்த தலைமகன்.
இவரது பேச்சு, எழுத்து, வாழ்க்கை எல்லாம் ஒருசேர இந்நூலில் தொகுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தால் அழகுற வெளியிடப்பட்டுள்ளது. நல்ல கட்டமைப்பு.
ஒவ்வொரு தமிழர் கையிலும் தவறாது இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு நூலகத்திற்கும் வாங்கப்பட வேண்டிய நூல்.
இளைய தலைமுறை தவறாது படித்து தங்களையும், தங்கள் வாழ்வையும் செப்பம் செய்துகொள்ள வேண்டும்.
படிக்க மட்டுமல்ல பரப்பப்பட வேண்டிய நூலும் இதுவாகும். இந்நூலைத் தொகுத்த பேராசிரியர் ஜனகன் அவர்களும் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களும் தமிழர்களின் நன்றிக்குரியவர்கள்.