தாது மணல் கொள்ளை தந்திடும் கேடுகள்

ஆகஸ்ட் 16-31

– சிகரம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.

உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாதுமணலில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.

எஞ்சியுள்ள தாதுக்கள் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு, கடலில் வந்து சேர்வதால் கடற்கரையை ஒட்டி ஏராளமான கனிமங்கள் பல கன அடியளவு படிகின்றது.

கடலைத் தொடர்ந்து போய் வந்து மோதுவதால் கடலின் ஓரம் படிந்துள்ள கனிமங்கள் (இலுமனைட், ரூட்டைல்) கடற்கரையோரம் ஏராளமாய்ப் படிகின்றன. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து  நிகழ்வதால் கடற்கரை கனிமவளம் நிறைந்துக் காணப்படுகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓடிவரும் தாமிரபரணி ஆறுகடலில் கலக்கும் பகுதியில் தாது வளங்கள் அதிகம் உள்ளன.

கனிம வளங்களின் அளவு: புவியியல் ஆய்வுத் துறையினர் (ஜி.எஸ்.அய்) ஆய்வின்படி (இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்ட ஆய்வு) தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம் வரை இக்கனிமங்கள் உள்ளன.

அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மோனசைட், தொழில்துறையில் பயன்படும் கார்னெட், சிலுமினேட், சிர்க்கான் போன்ற கனிமங்கள் இப்பகுதிகளில் அதிகம் கிடைக்கின்றன.

தென் கடற்கரைப் பகுதியில் சுமார் 9.8 கோடி டன் இலுமனைட்டும் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக ஆய்வறிக்கைக் கூறுகிறது.
தாது மணலின் வகைகள்:

கார்னெட்: மாசற்ற தூய தாது இது.

இதன் பயன்: உப்புக் காற்றால் சேதமான கப்பல், கட்டடங்கள், சிலைகளைத் தூய்மை செய்யவும், கண்ணாடி, செயற்கைக் கரிகள், அலுமினியம், டைட்டானியம் போன்றவற்றைத் துண்டிக்கவும், நீரைச் சுத்தப்படுத்தவும், கணினித்திரை, வால்வுகள், மூக்குக் கண்ணாடி போன்றவற்றை மெருகேற்றவும் இது பயன்படுகிறது.

இலுமனைட்: வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங்ராடு, டைட்டானியம், விளையாட்டுப் பொருட்கள், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகிறது. இது ரஷ்யாவில் இல்மன் மலை மற்றும் ஏரிப் பகுதியில் முதன்முதலில் எடுத்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டதால் இலுமனைட் என்று பெயர் பெற்றது.

சிர்கான்: இது 18,000 சென்டிகிரேடு வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.

உருக்கு, வார்ப்பு தொழிற்சாலைகளிலும், செராமிக் டைல்ஸ், இரும்பு, உருக்கு ஆலைக் கற்றைகள் தயார் செய்யவும் பயன்படுகிறது. மேலும், மருந்து, சமையல் பாத்திரங்கள், குளியலறை, கழிவறைப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

ரூடைல்: இது டைட்டானியத்தின் மூலப் பொருள், வர்ணங்கள், பிளாஸ்டிக், வெல்டிங் ராடு, நகை, விண்வெளிக் கருவிகள், ஜவுளிப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

மோனசைட்: தோரியத்தை உள்ளடக்கிய தாதுப் பொருள் இது. அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. தோரியத்தைப் பகுத்து கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாதுமணலின் மதிப்பு: உலகச் சந்தையில் தாதுக்களின் தேவையும் அதிகம். அதன் விலையும் அதிகம்.

ஒரு டன் கார்னெட் ரூ.5,600.
ஒரு டன் ரூஸ்டைல் ரூ. 80,000.
ஒரு டன் சிர்கான் ரூ.75,000
ஒரு டன் மோனோசைட் 5 லட்சம் ரூபாய்.

உலகத் தாதுமணல் இருப்பில் பாதியளவு இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவும், மகாராட்டிரா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து குறைவான அளவும் கிடைக்கின்றன.

இத்தகு மதிப்பும் பயனும் வாய்ந்த தாதுமணல் கொள்ளையடிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

1.    பொருளாதார இழப்பு: அதன் மதிப்பைப் பார்த்தோம். இவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்டால், பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்படத்தானே செய்யும்.

2. மற்ற நிலங்களை ஆக்கிரமித்தல்: ஏலம் அல்லது குத்தகை எடுத்தப் பகுதியைச் சார்ந்துள்ள புறம்போக்கு, கோயில் நிலங்களும் கொள்ளையர்களால் அபகரிக்கப்படுகின்றன.

3. கழிவு: மணலைச் சுத்தம் செய்ய ஏராளமான நீர் வீணடிக்கப்படுகிறது. 1 டன் மணலைப் பிரித்தெடுக்க 100 டன் நீர் பயன்படுத்தப்படுகிறது.

4. கடல் அரிப்பு: கடல் அரிப்பைத் தடுக்க மணல் குன்றுகள் பயன்படுகின்றன. மணல் அள்ளப்படுவதால் கடல் அரிப்பு அதிகமாகிறது. மணல் அள்ளுவது ஓரிடம், அரிப்பு ஏற்படுவது இன்னொரு இடம் என்பது இதில் கொடுமை.

5. கடல் ஆமைகள் அழிவு: தாதுமணல் கொள்ளையில் தாதுமணல் வெகுவாக அள்ளப்படுவதால், ஆமைகள் கரை ஒதுங்கி முட்டையிட்டு இனம் பெருக்க இயலாமல் போய் அந்த இனம் அழியும் கேடு உள்ளது.

கதிரியக்கம்: கடற்கரை மணலில் உள்ள கதிரியக்கம் கடலோர மக்களுக்குப் புற்றுநோயைத் தருகிறது. தோண்டும் போதும், பிரிக்கும்போதும், கழிவுகளை அகற்றும்போதும் ஏற்படும் கதிரியக்கங்கள் அதிகம்.

பேரிடர் தாக்குதல்: கடற்கரைத் தோண்டப்படுவதால், இயற்கைச் சீற்றங்கள் எழும்போது, கடல் நீர் எளிதில் உட்புகுந்து மக்களைப் பெரிதும் பாதிக்கிறது.

விளைநிலப் பாதிப்பு: மணல் பெருமளவில் அள்ளப்படுவதால், கடல் நீர் வெகுதூரம் உட்புகுந்து, நிலத்தடிநீர் உப்புநீராகி வேளாண்மை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விளைநிலங்களைப் பெரிதும் பாதிக்கின்றது.

இயற்கை வளங்கள் என்பவை அளவோடும், உலகம் உள்ளளவும் பயன்படுத்தப்பட வேண்டியவை. அப்படியிருக்க ஒரு நூற்றாண்டிலே எல்லாவற்றையும் சுரண்டிவிட்டோம் என்றால், எதிர்கால தலைமுறை என்ன செய்யும். இதையுணர்ந்து இயற்கை வளங்களைக் காத்து அளவோடு வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும். காக்க வேண்டிய அரசே கொள்ளையில் ஈடுபடுவது துரோகம் மட்டுமல்ல அயோக்கியத்தனமுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *