எல்லோரும் விரும்பும் உல்லாசக் கப்பல்!

ஆகஸ்ட் 16-31

– மருத்துவர்கள் சோம&சரோஇளங்கோவன்


ஒரு விமானத்தில் 200,- 300 பேரை ஏற்றுவதற்குள் என்ன பாடுபடுகின்றார்கள்!

2000,- 3000 பேரைக் கப்பலில் ஏற்ற வேண்டும். மிகவும் அமைதியாக உண்மையிலேயே ஆச்சரியப் படும்படிச் செய்கின்றார்கள்.

 

பயணிகளின் அறைகள் முன்னரே ஒதுக்கப்பட்டு விடுகின்றன. சிலர் ஓராண்டிற்கு முன்னரேயும் சிலர் ஒரு வாரத்திற்கு முன்னரும் பதிவு செய்திருப்பார்கள். மேல் தளங்களில் உள்ள அறைகள், கடலைப் பார்த்தவண்ணம் உள்ள அறைகள், சன்னல் தளங்களில் வெளியே அமரும் வசதி கொண்ட அறைகள் விலை அதிகம். உட்பக்கம் உள்ள அறைகள், கடலைப் பார்க்க முடியாத அறைகள், கீழ் தளங்களில் உள்ள அறைகள் விலை குறைவு. அனைவர்க்கும் சாப்பாடு மற்ற இடங்கள் பொதுவானவை. சில சாப்பாட்டுக் கூடங்கள் தனியே பணங்கட்டிச் சாப்பிடலாம்.

பயணிகள் விமான நிலையங்களிலிருந்து தனிப் பேருந்துகளிலும், மற்றும் தனி மகிழ்வுந்துகளிலும் வந்து இறங்கும் போதே அவர்களின் அறை எண்ணுடன்  கூடிய அட்டைகள் மூட்டை முடிச்சூகளில், (இத்தனை வண்ணங்களில், இத்தனை விதமானப் பெட்டிகள் தயாரிக்கின்றனரா என்று வியக்க வைக்கும் மூட்டை முடிச்சுகள்) கட்டி வாங்கி விடுவார்கள். பின்னர் கையில் உள்ளவற்றுடன் உள்ளே வரிசையாகச் செல்ல வேண்டும். அங்கே பயணக் கடவுச்சீட்டுகள் சரிபார்க்கப்பட்டு படமும் கணினியில் பதிவு செய்து ஒரு வங்கி அட்டை மாதிரிக் கொடுத்து விடுவார்கள். பலர் அதைக் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள். அனைத்திற்கும் அது தான் பயன்படுத்தப்படும். எத்தனை மணிக்குக் கப்பலில் ஏற வேண்டும் என்று கூறி ஒரு இடத்தில் அமரச் செய்து விடுவார்கள். அங்கே என்னென்ன நடக்கப் போகின்றது எங்கே என்ன செய்யலாம் என்ற விளம்பரம் ஆரம்பித்து விடும். இருபதிலிருந்து  முப்பது மணித்துளிகளில் கப்பலேறும் நேரம் வந்து விடும். அந்த நேரத்திற்குறிய 50 பேர் கப்பலில் ஏறித் தங்கள் அறைக்குச் செல்வார்கள். வழி நெடுக வரவேற்பு தான். புன்னகை பூத்த பன்னாட்டு முகங்களின் வரவேற்பு!

அறைக்குள் சென்றதும் வியப்பு! இவ்வளவு சின்ன இடத்திலே இவ்வளவு வசதிகளா? அவ்வளவு சுத்தமான படுக்கை, விரிப்பு, துண்டுகள். ஆங்காங்கே கண்ணாடிகள் இடத்தைப் பெரிது படுத்திக் காட்டும். படுக்கையின் மேலே ஒரு தோல் விரிப்பு மாதிரி இருக்கும். அதில் தயை செய்து பெட்டிகளை இதன் மீது வைத்து உள்ளே இருப்பதை எடுத்து வையுங்கள் என்றிருக்கும். பெட்டியை வைத்துப் படுக்கையை வீணாக்கிவிடக்  கூடாது என்பதால்.

வந்தவுடன் அறையைப் பார்த்ததும் கப்பலைப் பார்க்க ஆவல் வருவது இயற்கை தானே! வெளியே வந்தால் ஆங்காங்கே படங்கள் எங்கே என்னென்ன இருக்கின்றது என்பதைக் காண்பிக்க. மேல் மாடிக்குச் சென்றால்  அங்கே கையில் கொண்டுவந்து குடிக்கப் பழச்சாறு, சாம்பெயின், மற்ற பல. முன்பெல்லாம் மது வகைகள் கொடுப்பார்கள் இப்போது அதற்குத் தனிக் கட்டணம். உண்பதற்கு ஆம்! நூற்றிற்கும் மேற்பட்ட கொரிக்கும் தீனியிலிருந்து, மாடு, கோழி, மீன்கள் வரை வா, வா வென்று அழைக்கும். நாம் வேண்டியதை எடுத்துக் கொண்டு அங்கே நீச்சல் குளத்தின் அருகேயோ, அமைதியான இடத்திலோ, இசை எனும் இன்ப வெள்ளம் மூழ்கிய இடத்திலோ அமர்ந்து கொள்ளலாம்.

வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆடல் பாடல், மற்ற நிகழ்ச்சிகள் என்று பல திருமணங்கள், பிறந்த நாட்கள் ஒரே இடத்தில் நடந்தால் எப்படியிருக்கும், அப்படித்தான். இளசுகள் ஆட்டங்கள், கூடைப் பந்து என்றும் முதியோர் நீச்சல் குளத்தின் அருகே நீண்ட படுக்கும் பலகைக் கட்டில்களிலும் என்று ஆங்காங்கே  இருப்பார்கள். பயணம் ஆரம்பிக்க ஒரு மணி நேரத்திற்கு முன் பெரிய அறிவிப்பு வரும். கொடுக்கப்பட்ட அட்டையிலே ஆபத்து நேரத்திலே கூட வேண்டிய அடையாளமுள்ள அய்ந்தாவது மாடிக்கு அனைவரையும் செல்லச் சொல்வார்கள். ஆங்காங்கே உதவியாளர்கள் நின்று கொண்டு எப்படிச் செல்ல வேண்டும் என்று காண்பிப்பார்கள். அங்கே பல படகுகள் தொங்கும். ஒவ்வொரு குழுவிலும் 100 பேர் போல இருப்பார்கள். அங்கே கப்பலுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும், நீர் மிதப்பியை எப்படி அணிய வேண்டும். இதே இடத்திற்கு எப்படி வர வேண்டும் என்பதை விவரமாகச் சொல்வார்கள்.

அதை முடித்ததும் அனைவரும் மேல் மாடிக்குக் கப்பல் கிளம்புவதைப் பார்க்கவும், நகர வாழ்க்கைக்கு விடை கொடுக்கவும் உற்சாகமாகச் செல்வார்கள். கப்பலும் ஊ ஊ என்று பெரிதாக ஊதி விட்டுக் கிளம்பி விடும், சரியாக மாலை 4 மணிக்கு! அவரவர் அறைக்குத் திரும்பினால் அங்கே பெட்டிகள் காத்திருக்கும். அதில் உள்ளவற்றை எடுத்து அங்கே அழகான வேலைப் பாட்டுடன் உள்ள அடுக்குகளில் அடுக்கி வைத்தால் பெட்டிகள் காலியாகி விடும். பெட்டிகளைக் கட்டிலின் அடியே தள்ளி விடலாம். இடம் மிஞ்சும். பெட்டிகளின் மேல் தடுக்கி விழ வேண்டாம்! அவரவர் விருப்பப் படி இரவு உணவிற்கு 6 அல்லது 7 1/2 மணிப் பந்திக்கு உணவு விடுதிக்குச் செல்லலாம். அங்கே ஒதுக்கிய இடத்தில் அமர்ந்து வேண்டிய உணவை வரவழைத்து உண்ணலாம்.

நாங்கள் இருந்த மேசையில் 10 பேர். இரண்டு மூன்று மேசைகளுக்கு என்று மூன்று பேர் எங்களைக் கவனிக்க. ஒரு பிலிப்பினோ காரர், ஒரு பெரு நாட்டு பெண், மூன்றாமவர் ஆம்! சென்னைத் தமிழர் விஜய்!

நமது மருத்துவர் உடனே,

என்ன, விஜய்? தயிர் சாதமெல்லாம் கிடைக்குமா?

சார்! உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க!

அப்புறம் என்ன வாங்க சாப்பிடலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *