மறுப்பு :
இந்துத்வாவாதிகளே!
எது உங்கள் விஞ்ஞானம்?
– மஞ்சை வசந்தன்
பிற்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட இந்துமதம் நகராட்சிக் குப்பை வண்டிபோல், இந்த நாட்டில் இருந்த எல்லாவற்றையும் தன்னிடம் வாரிப்போட்டுக் கொண்டு, இந்துமதம், இந்து கலாச்சாரம், இந்துப் பண்பாடு என்று வீராப்புடன் முழங்கப்படுகிறது.
இந்திய நாட்டில் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த காலத்தில் எல்லாம் அறிவுக்கு உகந்ததாகவே இருந்தன. அவர்களிடையே மூடச் செயல்கள், ஜாதி வேறுபாடுகள் ஏதும் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பன போன்ற உயரிய நெறியில் வாழ்ந்தனர்.உலகிற்கு மொழி, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றைக் கொடுத்து தாங்களே அவற்றிற்குப் பிறப்பிடமாக இருந்தனர்.
இந்தியாவிற்குள் ஆரியர்கள் பிச்சையெடுக்க நுழைந்து, பின், சூழ்ச்சியால் ஆதிக்கம் செலுத்த முயன்றபோது, சிறுபான்மையினரான அவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களை வீழ்த்த மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர்.
அப்படிப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதிதான் புராணங்கள். புராணங்கள் அனைத்தும் நடப்பிற்கும் அறிவிற்கும் ஒவ்வாத கற்பனைக் கதைகள்.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்களான இந்துத்வாவாதிகள் தங்களுக்கென்று எச்சிறப்பும் இல்லாத நிலையில் பொய்யான பெருமைகளைச் சொல்லி போலியான உயர்வு தேட முயலுகின்றனர்.
வேதங்களில் எதுவுமே இல்லை. ஆனால் அதில் உலகிற்குத் தேவையான எல்லாம் இருப்பதாகச் சொல்வர்.
தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கிக் கொண்டு, சமஸ்கிருதந்தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்பர்.
பசுமாட்டை நெருப்பில் சுட்டு அதன் நிணத்தைச் சுவைத்துச் சாப்பிட்ட ஆரியர்கள், புத்தமும் சமணமும் கொல்லாமையைப் போதித்துப் பெருமை பெற்றதால், புலால் உண்ணாமையை தங்கள் கொள்கையாக மாற்றிக் கொண்டனர். இப்படி பிறர் சிறப்பையெல்லாம் தனதாக்கும் பித்தலாட்டம் செய்து பெருமை தேடியதுபோல், தற்போது, அறிவிற்கு ஒவ்வா புராணக் குப்பைகளையெல்லாம் அறிவியலுக்கு அடிப்படையாகக் காட்ட முற்படுகின்றனர்.
உறுப்பு மாற்று அறுவைக்கு வினாயகர் முன்னோடியா?
மருத்துவ விஞ்ஞானத்தின் உச்ச வளர்ச்சியாக உறுப்புகளை ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு மாற்றுவது தற்போது சாதிக்கப்படுகிறது. இதைப் பார்த்து இந்துத்வாவாதிகள், நமது புராணங்களிலே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அறிவியல் முறைச் சொல்லப்பட்டுள்ளது என்கின்றனர். நமது பிரதமர் நரேந்திர மோடியே இதைச் சொல்லியுள்ளார்.
வினாயகர் பிறப்புப் பற்றி புராணம் சொல்வதென்ன?
அழுக்குருண்டைப் பிள்ளையார்!
1. ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தையாகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து -_ நான் குளித்து விட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே விடாதே! என்று சொல்லி அதை வீட்டு வாயிலில் காவலாக உட்கார வைத்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயிற்காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டுத் தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி பரமசிவனைப் பார்த்து, காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலையே காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப் படுகின்றது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும்_பார்வதியும் கண்டு கலவி நினைவு ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கிக் குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற் காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானை யின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப் பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
இதுதான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும், அறிவியல் சிந்தனைக்கும் ஆதாரமாக அவர்களால் காட்டப்படும் புராணம் ஆகும்.
அறிவியலுக்கு எதிராக, முட்டாள்தனமாக, கற்பனையாக நினைத்ததையெல்லாம் எழுதி யுள்ள இச்செய்திகள்தான் அறிவியலுக்கு அடிப்படை யென்பது பைத்தியக்காரச் செயல் அல்லவா?
வினாயகர் பிறப்பு பற்றி பலவிதமாய் சொல்வதே அது பொய், கற்பனையாகக் கூறப்பட்டது என்பதற்கு ஆதாரம். உண்மையென்றால் ஒன்றுபோல் இருக்கும். கற்பனைதான் பலவிதமாய் இருக்கும்.
இதில் மூன்று கதைகள் யானைத் தலை வெட்டி வைக்கப்பட்டது என்றும், ஒரு கதையில் யானைத் தலையுடனே வினாயகர் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, பிறப்பிலே பித்தலாட்டம். அதிலே அறிவியல் என்பது அபத்தம் அல்லவா?
இந்த புராணக் கதையின் மூலம் பெறப்படும் செய்திகள் என்ன?
1. யானையை நினைத்துக்கொண்டு புணர்ந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது.
2. அழுக்கு உருண்டை குழந்தையாக மாறியது.
3. தலை வெட்டப்பட்ட குழந்தைக்கு பலமணி நேரம் கழித்து யானைத் தலையை வெட்டி வைத்தால் யானைத் தலையுடன் குழந்தை பிழைத்துக்கொள்ளும்.
4. கருப்பைக்குள் காற்று வடிவில் அசுரன் நுழைந்தான். குழந்தை தலையை வெட்டிவந்தான்.
இந்த நான்கு கருத்துகளும் அறிவியல் உள்ள கருத்துகளா? அறிவியல் என்றால் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த நான்கையும் நடைமுறையில் உறுதி செய்ய முடியுமா?
1. அழுக்குருண்டை பிள்ளையாக மாறுமா?
2. கருப்பையுள் அசுரன் காற்றாக உள்ளே நுழைய முடியுமா?
3. கருப்பையில் உள்ள குழந்தையின் தலையை வெட்டினான் என்றால் கத்திஎப்படி கருப்பையுள் வந்தது? கத்தியும் காற்றாக மாறி வந்ததா?
4. கருப்பையுள் காற்று புகமுடியுமா?
5. தலை வெட்டப்பட்ட குழந்தை இறந்து போகும். செத்தக் குழந்தைக்கு யானைத் தலையை வெட்டி வைத்தால் அக்குழந்தைக்கு உயிர் எப்படி வரும்? தலை எப்படி பொருந்தும்?
நரேந்திர மோடி உட்பட யாராவது இக்கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்ல முடியுமா? அறிவியல் வளராத காலத்தில் கற்பனையாக, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி புராணம் எழுதி வைத்தார்கள்; ஏய்த்தார்கள்.
ஆனால், இந்த அறிவியல் உலகத்தில் ஒரு நாட்டின் பிரதமர் இந்த முட்டாள் கருத்துக்கள்தான் அறிவியலுக்கு மூலம் என்று முழங்குகிறார் என்றால், இவர்கள் கையில் நாடு ஆளும் பொறுப்பு என்றால் நகைப்பிற்குரியதல்லவா?
உறுப்பு மாற்ற வேண்டும் என்றால் எடுக்கப்பட்ட உறுப்பும் மாற்றப்பட்ட உறுப்பும் உடனடியாகப் பொருத்தப்பட வேண்டும். அதற்கு பல்வேறு மருத்துவ நுணுக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும். உண்மை இப்படியிருக்க வெட்டப்பட்டு பல மணி நேரம் ஆனபின் யானைத் தலையைக் கொண்டுவந்து வைத்தால் பொருந்திக் கொள்ளுமா?
மனித உடலுக்கு யானைத் தலை பொருந்துமா? அறிவியல்படியே மனித உறுப்புக்கு மாற்றாக மனித உறுப்புதானே பொருந்தும்.
அழுக்கு உருண்டையை குழந்தையாக்க முடிந்தவர்க்கு வெட்டிய தலையைப் பொருத்தி உயிர் உண்டாக்க முடியாதா?
பார்வதி உருவாக்கிய பிள்ளை என்று கடவுள் சிவனுக்குத் தெரியாமல் போகுமா? எல்லாமே பொய். எல்லாமே மூடத்தனம். ஆனால், இவைதான் அறிவியலுக்கு அடிப்படை என்கின்றனர். மோ(ச)டிகளுக்கு மூடத்தனம்தானே மூலதனம்? ஆனால், மக்களுக்குத்தான் அறிவும், சிந்தனையும் வேண்டும்!
அணுபற்றிய அறிவு?
அணு என்ற சொல் அக்காலத்தில் இந்தியப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதால், அணுபற்றிய நுட்பம் இந்தியர்களுக்கு இருந்தது என்று கூறும் மடமையும் மதவாதிகளிடம் உள்ளது.
அறிவியல் அணு வேறு, ஆன்மீக அணு வேறு. பொருளில் மிக நுண்ணிய கண்ணுக்குத் தெரியும் பகுதி அணு என்பது சமுதாய மக்களின் கருத்து.
ஆனால், அறிவியல் அணு என்பது அதுவல்ல. சூரிய ஒளி கூறையின் வழியே வரும்போது அவ்வொளியில் சிறுசிறு துகள் தெரியும். (மிதக்கும்) அதைத்தான் அணு என்று மக்கள் கருதினர். அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி என்றதுகூட இதன் அடிப்படையில்தான். ஆனால், அறிவியல் அணு அதுவல்ல. எனவே, அணு என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அணுவைப் பற்றிய அறிவு இங்கு இருந்தது என்று பொருள் அல்ல.
அஸ்திரமும் வானூர்தியும்: அஸ்திரங்கள், வானூர்தி பற்றி இதிகாசங்களில் புராணங்களில் பேசப்பட்டவையெல்லாம் கற்பனைகளே. வீரத்தை, ஆற்றலை விளக்க கற்பனைகளாக ஊகிக்கப்பட்டவை. (இக்காலத்திய சக்திமான் போல்) அனுமன் மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தான் என்பது அவனது ஆற்றலைக் காட்டவேயன்றி, அது உண்மையில் தூக்கப்பட்டதல்ல.
குளோனிங்: உயிரணுவைக் கொண்டு ஓர் உயிரியை உருவாக்கும் குளோனிங் முறை அறிவியலின் இன்றைய உச்சம். ஒரு ஆட்டையே உருவாக்கினார்கள்.
இந்த அறிவும் எங்கள் பாரதத்தில் இருந்தது. மகாபாரதத்தில் உதிரத்தை 100 கலசத்தில் பிடித்துவைத்து 100 பேர் பிறந்தார்கள் என்கின்றனர்.