– மஞ்சை வசந்தன்
இணையதளமும், செல்பேசியும் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சாதனைகளைப் புரிந்து வருகின்றன. அதன் பயன்பாடுகள் என்பவை அளப்பறியவை! இணையமும் செல்பேசியும் இல்லை யென்றால் எதுவும் இல்லை என்ற நிலை தற்போது. ஆனால், மானுட வளர்ச்சிக்கும், வசதிக்கும், உலகச் சுருக்கத்திற்கும் தொடர்பிற்கும், உயர்விற்கும் இவற்றின் பங்கு மகத்தானது. இன்னும் சொல்லப்போனால் புரட்சிகரமான, முற்போக்கான அனைத்து செயல்பாடுகளும் இவற்றின் மூலம் ஏற்றம் பெற்றுள்ளன.
பேதம் ஒழிக்க, சாதி ஒழிக்க, உலகில் எங்கெங்கோ பிறந்து வாழ்ந்தோர் இணையராக இவற்றின் பங்கு, வஉதவி சிறப்பானது.
எடுத்துக்காட்டாக கோழிக்கோடு கலெக்டர் பிரசாந்த் என்பவர், கலெக்டர் கோழிக்கோடு என்ற பெயரில் முகநூல் தொடங்கி, அதை 77 ஆயிரம் பேர் தொடர மக்கள் குறைகளை இதன்மூலம் உடனுக்குடன் தீர்க்கிறார். அதேபோல் மொபைல் ஆப் உண்டாக்கி, பிரச்சினைகளைக் களைகிறார்.
இவ்வளவு பயனுள்ள இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை, சமுதாய எதிரிகள், மோசடிப் பேர்வழிகள், அற்ப உணர்வாளர்கள் தங்கள் சுயநலனுக்கு, உயர்வுக்கு, சுரண்டுவதற்கு கேவலமாக, கீழ்த்தரமாக, மோசடியாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
எனவே, பல்லாற்றானும் பயன்தரும் இவற்றைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு பெரியவர்கள், வல்லுநர்கள் இவற்றில் வரும் கேடுகளையும், மோசடிகளையும் எடுத்துக் கூறி விழிப்போடிருக்கச் செய்ய வேண்டும்.
காரணம், இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என்று பலரும் ஏமாற்றப்படுகிறார்கள்; கெட்டுப் போகிறார்கள். இதோ ஒரு இளம் பெண் கண்கலங்கியபடி தன் பாதிப்பைக் கூறுகிறார் படியுங்கள்.
நான் நல்லாத்தான் படிச்சுட்டு இருந்தேன். என் ஃபிரன்ட் ஒருத்தி நெட் சென்ட்டருக்குப் போகலாம்னு கூப்பிட்டுப் போனா. அங்கேஅவ ஒரு வெப்சைட்டுக்குள் போனா. அதிலே கண்டதெல்லாம் அசிங்கசிங்கமாய் இருந்திச்சி. அப்படிப்பட்ட காட்சியெல்லாம் நான் பார்த்ததேயில்லை. முதல்முறையா பயத்தோட பார்த்தேன். அப்புறம் அடிக்கடி அவ கூடப் போய் பார்த்ததால் பயம் போயிடுச்சு.
என் கூடப் படிக்கும் செயச்சந்திரன் என் மீது அதிகக் காதலோடு அலைஞ்சான். அந்த ஆபாச வெப்சைட் பார்ப்பதற்கு முன் அவனை நான் தொட்டதே இல்லை. ஆனா, இவற்றையெல்லாம் பார்த்தபின் என் உடல் முழுக்க தீண்ட அவனை அனுமதித்து விட்டேன். அதனால், இப்ப நான் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.
அவன்கிட்டே இப்படி ஆயிட்டுதேன்னு அழுதபடிச் சொன்னேன். கலைச்சிட்டு போன்னு ஈஸியா சொல்லிட்டுப் போயிட்டான். செத்துத் தொலையலாம்னு பார்க்கிறேன்! என்றபடி கதறினாள்.
இன்னொரு பெண். அவள் சொல்கிறாள்….
என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள். என் கையில் காபி கொடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்கச் சொன்னார்கள். நான் காபி கொடுக்கும்போத அவன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் முகம் மாறியது. இந்தக் கல்யாணம் வேண்டாம்! என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான்.
இவ்வளவு அழகானப் பெண்ணை ஏன் வேண்டாம் என்கிறான்! எல்லோருக்கும் குழப்பம். அவமானத்தால என் குடும்பம் நிலை குலைஞ்சிப் போச்சி. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தனர்.
நான் சென்னையில் படிச்சபோது செல்போன்ல வந்த ஒரு எஸ்எம்எஸ், ஆபாச படம் பார்க்க இந்த வெப்சைட்டிற்குள் போங்கன்னு இருந்தது. நான் அந்த வெப் சைட்டிற்குள் போனேன். தொடர்ந்து பார்க்கப் பார்க்க, என்னுள் தப்பான உணர்வுகள் தலைதூக்கின. அப்போது கோயம்புத்தூர் பையன் என்னிடம் ரிக்வெஸ்ட் கேட்டிருந்தான். அதன் பின் அவனோடு பழகினேன். இன்டர்நெட் ஆபாச வெப்சைட்டில் என்னென்ன பார்த்தோமோ அதையெல்லாம் செஞ்சித் தொலைச் சிட்டோம். அன்றைக்கு போனவன்தான். எந்த வழியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு வருஷமா கிடைக்காதவன் இப்ப எதிர்பாராது மாப்பிள்ளையா வந்திருந்தான்.
அவனை நெருக்கிக் கேட்டபோது, இரண்டு வருஷத்தில் இவ எத்தனை பையன்களோட… என்று இழுத்தான்.
அவமானம் தாங்காம எங்க குடும்பமே ஊரைக் காலி செய்து வேறு ஊருக்கு வந்துவிட்டது.
இங்கிலாந்திலிருந்து கோவைக்கு வந்திருக்கும் ரெஸ்க்யூ தன்னார்வ தொண்டமைப்பைச் சேர்ந்த அபிஷேக் கிளிப்போர்ட் தன் ஆய்வில் கண்டவற்றில் இரு எடுத்துக்காட்டுகளே மேலே சொன்னவை.
இவரின் ஆய்வுப்படி, மதுப்பழக்கம், ஆபாச இணையதளம், செல்பேசி என்று ஆண்களும் பெண்களும் அதிக அளவில் அடிமையாகி கெட்டுப்போவது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
இப்படிப்பட்ட வெப்சைட்டுகளை சீனாவும், சவுதி அரேபியாவும் தடை செய்ததுபோல இந்தியாவிலும் உடனே தடை செய்ய வேண்டும் என்றார்.
சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தலைவிக்கு தெரியாத எண்ணிலிருந்து செல்பேசி அழைப்பு. நீங்க கட்டியிருக்கும் இந்த ரெட் கலர் சேரியில் சூப்பர்; நீங்கள் போட்டிருக்கும் ஊதாபூ சுடிதாரில் அசத்துரீங்க என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கமன்ட்.
அப்பெண் கணவனிடம் சொல்ல, காவல் நிலையம் செல்ல, கடைசியில் அவர்கள் குழந்தை படிக்கும் பள்ளி அட்டன்டர்தான் இந்த வேலை செய்தவன் என்பது தெரிந்தது.
நேஷனல் சைபர் சேப்டி அன்ட் செக்யூரிட்டி ஸ்டான்டர்ட்ஸ் என்ற தனியார் நிறுவன கூடுதல் பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி இத்தகவல்களை பத்திரிகையாளர்களுக்குக் கூறினார்.
எங்கே தப்பு செய்கிறோம்?
நம் எண்ணிலிருந்து இன்னொரு எண்ணுக்குப் பேசும் அழைப்போ, குறுஞ்செய்தியோ, புகைப்படமோ செல்லும்போது இந்த இரண்டிற்கும் இடையே மட்டும் தகவல் தொடர்பு நடைபெறுகிறது என்று எண்ணினால் அது தவறு.
நாம் நம் எண்ணிலிருந்து மற்றொரு எண்ணுக்குத் தொடர்புகொள்ளும்போது அச்செய்தி முதலில் சம்பந்தப்பட்ட நெட்ஒர்க்கின் தரவு தளத்திற்குச் செல்கிறது. அங்கிருந்துதான் அந்த எண்ணிற்குச் செல்கிறது. அந்த நெட்ஒர்க்கில் வேலை செய்யும் நபர் நினைத்தால், அதை எல்லோருக்கும் தெரியச் செய்யலாம். நெட்ஒர்க் நிறுவனம் அப்படிச் செய்யக் கூடாது என்ற விதியிருந்தும், இப்பொது விதிகளெல்லாம் விற்பனையாகிவிடுகின்றனவே!
மேலும், இப்போது புதிதாக வந்துள்ள கருவிகள் மூலம் இரு மொபைல் எண்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு, அந்த மொபைலில் உள்ள தகவல் என்று எல்லாவற்றையும் திருட முடியும்.
எனவே, தொழில்நுட்பக் கருவிகளை நல்லவற்றிற்குப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, தப்பானவற்றிற்குச் சென்றால் அதன் விளைவு படுமோசமாக இருக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் ஆழமாக மனதில் கொள்ள வேண்டும்.
பாலுறவு செயல்பாடுகள் மட்டுமல்லாமல், நிறுவனம்சார் மோசடிகளும் இன்றைக்கு பெருமளவில் மிக நுட்பமாக நடைபெறுகின்றன. கீ_லாக்கர் எனப்படும் மிகச்சிறிய வைஃபை டிவைஸ் ஒன்றை, ஒரு தனியார் நிறுவனம் துப்புறவு பணியாளர் மூலம், சி.இ.ஓ. கணினியின் கீ_போர்டில் பொருத்திவிட்டது.
மறுநாள் காலை சி.இ.ஓ. தன் கணினியை ஆன் செய்ய, அந்த அலுவலகத்திற்கு வெளியே காருக்குள் இருந்தபடி, அங்கு டைப் செய்யப்படும் ஒவ்வொன்றையும் மோசடிப் பேர்வழிகள் தெரிந்து கொண்டார்கள்.
அதன்பின் அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, சார் உங்க நெட்பேங்கிங் பாஸ் வேர்டை உடனே மாத்திடுங்க! பாதுகாப்பு வசதிக்குத்தான் சொல்கிறோம் என்று கூறி போனை வைத்துவிட்டார்கள்.
அந்த சி.இ.ஓ. இந்த அறிவுரைப்படி பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து மாற்றினார். அங்கு டைப் செய்வது காருக்குள் இருப்பவர்க்குத் தெரிய, அடுத்த சில நிமிடங்களில் அந்த நிறுவன வங்கிக் கணக்கில் இருந்த அவ்வளவு தொகையையும் சுருட்டிக் கொண்டு தப்பிவிட்டார்கள். ஒரு நிறுவனமே ஏமாற்றப்படும் நிலையில் தனி நபர்கள் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான வலைதளங்களைப் பயன்படுத்தி குடும்ப விவரங்கள், தொழில் விவரங்கள் அறிவதோடு குழந்தைக் கடத்தலையும் செய்கிறார்கள்.
எனவே, தொழில்நுட்பம் பெருகும், வளரும் அதே அளவிற்கு அது சார்ந்த மோசடிகளும் வளருகின்ற காலம் இது. எனவே, இவற்றைப் பயன்படுத்துவோர் இதுபோன்றவற்றில் விழிப்போடிருந்து காத்துக் கொள்வதோடு, பிள்ளைகள் ஆபாசங்களில் சிக்கி அழியாது அவர்களை நெறிப்படுத்தி விழிப்பூட்டி கண்காணிப்பில் வளர்க்க வேண்டும்.
சிறு வயதிலிருந்தே பாலியல் சீண்டல், வன்கொடுமை, மோசடி, ஏமாற்று போன்றவைபற்றி பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப நயமாக, சம்பவங்களை விளக்கும் சாக்கில், உதாரணம் கூறும் பாங்கில், செய்திகளைச் சொல்லும் போக்கில் சொல்லி வளர்க்க வேண்டும். கூச்சநாச்சம் பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி விடக் கூடாது.
மதிப்பெண் மட்டுமே குறியென கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் செயல்பட்டால், முதலுக்கே மோசம் வரும்போது மதிப்பெண் எதற்கு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிவிடும். எச்சரிக்கை!
Leave a Reply