திருப்பதியில் உள்ள கடவுளான வெங்கடாஜலபதிதான் நாட்டில் உள்ள கோயில்களிலேயே அதிகமான சொத்துடைய கடவுள். உண்டியல் வசூல் மற்றும் தரிசனங்களில் பல்வகை வசூல்கள் _ அவரைப் பார்த்து சேவிக்க அதற்கென பிரத்தியேகத் தனிக் கட்டணம் _ இவைகளைத் தாண்டிக் குவியும் தனி நன்கொடைகள் _ தங்க வசூல்கள் தனி.
அண்மையில் செய்தித் தாள்களில் வெளிவந்துள்ள ஒரு புள்ளி விவரம்:
ஏழுமலையானுக்கு ஷேர்களை காணிக்கையாக செலுத்தும் வசதி தொடக்கம்: 950 வங்கி கணக்குகளில் பல கோடி ரொக்கம், நகைகள்
திருப்பதி ஏழுமலையான் பெயரில் ஏற்கெனவே 950 வங்கி கணக்குகள் உள்ளன. இந்நிலையில், பக்தர்கள் நிறுவன பங்குகளை (ஷேர்) காணிக்கையாக வழங்குவதற்கு ஏதுவாக ஏழுமலையான் பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பணம், நகை, வீடு மற்றும் நில பத்திரங்கள், விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இதனால் ஏழுமலையானின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருவாய் ஆண்டில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.905 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழுமலையான் பெயரில் பல்வேறு தேசிய வங்கிக் கிளைகளில் 950 வங்கிக் கணக்குகள் உள்ளன.
வட்டி வருமானம் ரூ.745 கோடி
இவைகளில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் மட்டும் ரூ.6,200 கோடி உள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.744.91 கோடி வட்டி கிடைத்துள்ளது. மற்ற சேவா டிக்கெட்டுகள் விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ.660 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உண்டியலில் தங்க நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு டன் தங்க நகைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. இவற்றை மும்பையில் உள்ள மிண்ட்டுக்கு அனுப்பி பிஸ்கெட்டுகளாக மாற்றி அதை தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.
இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் தங்கத்துக்கு ஆண்டுதோறும் 1 சதவீதம் தங்கம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இவை மீண்டும் டெபாசிட் செய்யப்படுகிறது.
சில பக்தர்கள் தங்களுடைய ஷேர் சான்றிதழ்களையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 1.8 லட்சம் ஷேர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்துள்ளன. இவற்றை ஏழுமலையான் பெயரில் மாற்றுவதற்கு சிரமமாக இருந்தது.
இந்நிலையில், ஷேர்களை காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (எஸ்எச்சிஐஎல்) மூலம் ஏழுமலையான் பெயரில் (எண்:1601010000384828) கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
– தமிழ் இந்து, 5.8.2015
திருப்பதி கடவுள் பெயரால் கம்பெனி ஷேர்களும், முதலீடுகளும், அதையொட்டிய லாபப் பெருக்கும் எப்படி வருமான வரித்துறையினரால் பார்க்கப்படுகிறது என்பது நமக்குப் புரியாத ஒன்று.
உண்டியலில் போடப்படும் பெருந் தொகைகள் – சிறுதொகை அனைத்தும் _ செக்காகவோ, காசோலையாகவோ – வரைவோலை (Demand Drafts)மூலமாகவோத்தான் போடப்படல் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டால், இவ்வளவு தொகை திருப்பதி உண்டியல் காணிக்கை வருமா? வந்தால் வருமான வரித்துறையினர் மற்ற துறையினருக்கும் தனியாருக்கும் முதலீடுகள், நன்கொடை வரவுகள் பற்றி துளைத்து எடுத்து தகவல்களைச் சேகரிக்கின்றனர்களோ அதுபோல செய்ய அதுவே உதவியதாக (Clue தந்ததாக) ஆகக் கூடும்.
கறுப்புப் பணவேட்டை என்பது ஏதோ, வெளிநாட்டு வங்கிகளிலிருந்து தகவல்களைத் திரட்டுதல் என்று மாத்திரம் நினைக்காமல், நம் நாட்டு பிரபல கோயில்களான திருப்பதி, குருவாயூர், அய்யப்பன் கோயில், சாய்பாபா கோயில்களை, (சென்னை உட்பட இந்த பெயரில்சிறு அறைகள் கோயிலாக்கப்பட்டு தனியார் வசூல் கொள்ளைகள் தாராளமாக தங்குதடையின்றி நடைபெறுகின்றன.)
கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம்தான் திருப்பதி உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது என்பதை எவரே மறுக்க முடியும்? கல்விக் கூடங்கள், மருத்துவமனைகளுக்கு எல்லாம் சர்வீஸ் டாக்ஸ் (Servicw Tax) வசூலிக்கும்போது, இந்த பண வசூலுக்கும் ஏன் குறைந்தபட்சம் சேவை வரி விதிக்கப்படக் கூடாது; பல கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் அதன்மூலம் அதிகம் கிடைக்குமே!
திருப்பதி லட்டு விற்பனை மூலம் பல கோடி வருமானம் வருகிறதே. அதற்கு ஏதாவது சேவை வரி உண்டா தெரியவில்லை. வரி வசூலில் இரட்டை அணுகுமுறை ஒருபோதும் கறுப்புப் பண பெருக்கத்தைத் தடுக்காது!
கி.வீரமணி,
ஆசிரியர்