அழகர்சாமியின் குதிரை
பகுத்தறிவுக் கருத்துகளை திரையில் இன்றைய சூழலில் மக்களிடம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கொரு நல்ல எடுத்துக் காட்டு அழகர்சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக் குழுவின் வெற்றிக்குப்பின் நான் மகான் அல்ல திரைப்படம் மூலம் தன்னையொரு கமர்ஷியல் இயக்குநராக அடையாளம் காணும் அளவிற்குப் புகழ்பெற்ற சுசீந்திரன், துணிச்சலாக எடுத்திருக்கும் திரைப்படம்தான் இது. இன்னும் என் கனவுப்படத்தை எடுக்க முடியவில்லை, நான் கமர்ஷியல் வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன், என் ரசிகர்கள் என்னிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பீலா விடும் இயக்குநர்கள்தான் இங்கு அதிகம்.
நல்ல படம் வரவேண்டும் என்று பேசிக்கொண்டே, அதை நோக்கிய ஒரு அடியைக்கூட அவர்கள் எடுத்துவைக்க மாட்டார்கள். அவர்களிடமிருந்து வேறுபட்டு, எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்வதே சமூகப் பொறுப்புள்ள இயக்குநரின் கடமை என்பதை நிறுவியுள்ளார் சுசீந்திரன். அதற்காக, அவருக்கு முதல் பாராட்டு.
தமிழில் இலக்கியத்துக்கும் திரைத்துறைக்குமான இணைப்பு என்பது மிக அரிதான ஒன்றாகிவிட்ட நிலையில் (இலக்கிய வாதிகளுக்கும், திரைத்துறையினருக்கும் இருக்கும் இணைப்பு வேறு), ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதையைப் படமாக்கிய சசியைத் தொடர்ந்து, பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதே பெயரில் படமாக்கியிருக்கும் சுசிக்கு நமது இரண்டாவது பாராட்டு.
நல்லதொரு சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கிய சுசீந்திரனுக்கு பக்கபலமாக நின்று திரைக்கதைக்கேற்ற வசனத்தைக் கவர்ந்திழுக்கும் வகையில் இயல்பாக எழுதி படத்திலும் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் பாஸ்கர் சக்திக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இனி, அழகர்சாமியின் குதிரையைப் பார்ப்போம்.
தேனி மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் 1980 களில் நடக்கிறது கதை. ஊர் மக்கள் வழிபடும் கடவுளான அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழைத்தண்ணி இல்லாமல் இருக்கும் கிராமம், இந்த ஆண்டு திருவிழாவை நடத்த நினைக்கையில் குதிரையைக் காணவில்லை. பலரின் சந்தேகம் ஊரில் பகுத்தறிவு பேசித்திரியும் இளைஞர்களை நோக்கிப்போகிறது. அதில் ஒருவனான ராமகிருஷ்ணன் பஞ்சாயத்துத் தலைவரின் மகன் என்பதால் வெளிப்படையாகப் பேசப் பலருக்குத் தயக்கம். ஆசாரியோ புதிதாய் ஒரு குதிரை செய்துடுவோம் எனக் கூற, அது சாமி குதிரையாகுமா? என்ற கேள்வியில் அடங்கிப் போகிறார். ஒரு பக்கம் காவல் துறையிடம் புகார் கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் மலையாள மந்திரவாதியை அழைத்து வருகிறார்கள். உள்ளூர் கோடாங்கி கோவித்துக் கொண்டு அவிழ்ந்த கூந்தலோடு வீட்டுக்குப் போய்விடுகிறார்… வேட்டி அவிழ்ந்தது தெரியாமலேயே! மலையாள மந்திரவாதியோ மப்டியில் வந்த போலீசின் மீதே ஆத்தாவை இறக்கி, 3 நாளில் குதிரை மேற்குப் பக்கத்தில் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறான். இரவில் முயல்வேட்டைக்குப் போனவர்களுக்கு உயிருள்ள வெள்ளைக் குதிரை கிடைக்க அதுதான் சாமிக் குதிரையென்று மந்திரவாதியும் சொல்லிவிடுகிறான். உயிருள்ள குதிரையைவைத்தே திருவிழாவை நடத்திவிட ஊர் தயாராகும் வேளையில் வந்து சேர்கிறான் உயிருள்ள குதிரைக்குச் சொந்தக்காரனான உயிருள்ள அழகர்சாமி.
தனது குதிரையை வைத்துக்கொண்டு தரமறுக்கும் ஊர்க்காரர்களுடன் சண்டைக்குப்போக, குதிரையைப் போலவே அழகர்சாமியையும் கட்டி வைத்துவிடுகிறார்கள் ஊர்க்காரர்கள். பஞ்சாயத்துத் தலைவர் மகன் ராமகிருஷ்ணனுக்கும், உள்ளூர் கோடாங்கி மகள் தேவிக்கும் காதல் ஒருபக்கம் என்றால், குதிரையுடன் போனால்தான் திருமணம் என்ற நிலையில் தன்னை விரும்பும் ராணியைக் கரம்பிடிக்க எப்படியாவது குதிரையுடன் மலைக்கிராமமான வட்டப்பாறைக்குச் செல்லும் பதைப்பில் குதிரைக்கார அழகர்சாமி. மரக்குதிரை எப்படிக் கிடைத்தது, அழகர்சாமி எப்படி தன் குதிரையைக் கூட்டிக் கொண்டுபோனான் என்று சுவாரசியமாகக் கதையை முடிக்கின்றனர்.
ஏற்கெனவே வெளிவந்த சிறுகதையை திரைப்படத்துக்கேற்ப மெருகேற்றி மூலக் கதையைச் சிதைக்காமல் அழகான திரைக்கதை அமைத்து, நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். பாரபட்சமில்லாமல் பெரும் பங்காற்றியிருக்கிறது பாஸ்கர் சக்தியின் உரையாடல். கதையையும் களத்தையும் மீறாத வசனங்களில் தெறிக்கிறது கூரிய சிந்தனை. ஏழூரு சனத்தையும் அந்த சாமிதான் காப்பாத்துதுன்னு சொல்றீங்க… இப்ப சாமியோட குதிரையையே காணோம்? என்று கேட்கும் நாத்திக இளந்தாரிகளின் குரலானாலும், ஊறுகாய்க்கு வைத்திருந்த எலுமிச்சையில் குங்குமம் தடவி காட்டேரி பூசகட்டப்போவதாகச் சொல்லும் கோடாங்கியிடம் நீ காட்டேரி பூசைதான் கட்டு; இல்ல இன்னொரு பொண்டாட்டியத்தான் கட்டு; என் தாலியை அறுக்காத என்று சீறும் கோடாங்கி மனைவியின் குரலானாலும் எள்ளலும் எதார்த்தமும் பின்னிஇழையோடு கின்றன. மலையாள மந்திரவாதிக் காட்சிகள், குறிசொல்லுதல், இவர்களின் மடத்தனத்தை நொந்துகொள்ளும் இன்ஸ்பெக்டர் கவலை என ஆங்காங்கே காட்சிகளில் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரவிவிடுகின்றனர்.
படத்தின் நாயகனான அழகர்சாமி பாதித்திரைப்படம் முடியும் நிலையில்தான் அறிமுகமாகிறான். பரட்டைத்தலையும், பம்பைமுடியும், குள்ளமும் தொப்பையும் கருப்பு நிறமும் என, கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற (உயர்சமூக) இலக்கணத்தை உடைத்தெறிந்து வரும் அப்புக்குட்டியின் அறிமுகக் காட்சிக்கு திரையரங்கில் கரவொலி பிளக்கிறது. கதையின் நாயகன்தான் கதாநாயகனே ஒழிய, இவர்கள் கட்டிய கட்டுப்படி இருப்பவனல்ல என்பதைக் காணமுடிகிறது. கதாநாயகன் ஏன் பரட்டைத் தலையோடு வருகிறான். அவனுக்குச் சீவிவிடக்கூடாதா யாரும்? எனக் கேட்டுள்ள நடிகை சுஹாசினி இது நல்லபடம்தான் Brilliant என்று சொல்ல முடியாது என்று விமர்சனமும் (கொடுமைடா) வேறு சொல்லியுள்ளார். மேட்டுக்குடி மக்களுக்கு, மேட்டுப்பாதைகளில் குதிரையைப் பொதி சுமக்க வைத்து பிழைப்புநடத்தும் அழகர்சாமியைப் பற்றி என்ன தெரியும்? இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னைவிட வேறு ஆள் உண்டா என்று சவால்விடும் அளவுக்குப் பொருந்தி நடித்துள்ளார் அப்புக்குட்டி சிவபாலன். படத்தின் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களும் அவர்கள் நடிகர்களல்ல… அந்தக் கிராமத்து மனிதர்களேதான் எனும் அளவிற்கு இயல்பாக நடித்துள்ளனர். ஆடைவடிவமைப்பு முதல் பின்புலங்கள் வரை 1980 களில் கதை நடக்கிறது என்பதை பின்னணியில் வருத்தாமல் காட்டிக்கொண்டே வருகிறார்கள்.
படத்திற்குப் பெரிய பலம் இளையராஜாவின் பின்னணி இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும். கிராமத்துக் கதைதான் என்றாலும் இசைக்கருவிகள் அப்படியில்லை. காட்சியைப் பார்க்கையில் நம் மூளையில் இனம்புரியாமல் தோன்றும் இசையை எப்படித்தான் இளையராஜாவால் மட்டும் வசப்படுத்தமுடிகிறதோ? மேற்கத்திய இசைக்கருவிகள்தான். மேற்கத்திய இசைதான். ஆனால் எப்படிப் பொருந்திப் போகிறதோ தெரியவில்லை. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையைக் கேட்ட நிறைவு. மூன்றே பாடல்கள்தான் தேவைக்கேற்ப.
அழகான காட்சிகள் என்றால் அயல்நாட்டுக்கு பிளைட்டு பிடிக்கும் ஒளிப்பதிவாளர்களும் இயக்குநர்களும் நிச்சயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் இத்தனை அழகான இடங்களா? மலைகளின் முகடுகளில் மாலைநேரச் சூரியனின் ஒளி மின்னுகையில் கண்களுக்குக் குளிர்ச்சி.
நாத்திகம், பகுத்தறிவு என்றாலே வறட்டுவாதம் என்று பேசுவோருக்கு, மனிதநேயத்துக்கான கருவிகளே இவை என்பதை படத்தின் இறுதியில் இளைஞர்கள் எடுக்கும் முடிவு மூலம் உணர்த்தியிருக்கிறது திரைப்படம். ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்துவிட்டு தன் மகனையும், கோடாங்கி மகளையும் நொந்து கொண்டு. கலிமுத்திப்போச்சு… பஞ்சம் வந்து ஊரே அழிஞ்சிடுமே என்று புலம்பிக் கத்தும் போதே ஜாதிமறுப்புத் திருமணத்துக்குக் கிடைத்த வரவேற்பு போல பெருத்த இடிச் சத்தத்தோடு பெய்யும் மழையோடு நிறைவடைகிறது திரைப்படம். உலகப் படங்களைப் பார்த்துவிட்டு அதன் எளிமையும் இனிமையும் இங்கு கிடைக்காதா என ஏங்குவோருக்கு இப்படம் விருந்து! அறிவியலின் வளர்ச்சியை பகுத்தறிவுக்குப் பயன்படுத்திய விதத்தில் அறியாமை நோயாளிகளுக்கு இனிப்பு தடவிய மருந்து!! அழகர்சாமியின் குதிரை பகுத்தறிவுப்பாதையில் பயணிக்கிறது! வழித்துணையாய் செல்ல வேண்டியது நம் கடமை!
– சமா.இளவரசன்