வன்புணர்ச்சிக்கு தண்டனையா? சமரசமா? எது சரி?

ஜூலை 16-31

பாலியல் கொடுமைக்குள்ளான பெண்ணை சமரச மையத்திற்கு அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை, சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது தவறு என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரானது என கண்டித்துள்ளது.

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கடலூர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைதண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மோகன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து டி.என்.ஏ. பரிசோதனையில் மோகன்தான் தந்தை என்று நிரூபணமானது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவுகொண்டேன் என மோகன் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மோகன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றபடி சமரச மையத்துக்கு பரிந்துரைத்திருப்பதோடு, அவருக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கி தீர்ப்பளித்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை, சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது தவறு என்றும், இது பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், குற்றவாளியுடன் சமரசம் என்பது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த மென்மையான போக்கு என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணின் உடல் அவளது கோயிலாகும். எனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் சமரசம் என்பதே கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இத்தீர்ப்புக்கு எதிராகக் கருத்து கூறியுள்ள பணி நிறைவு பெற்ற நீதியரசர் பொ.நடராசன் அவர்கள், பாலியல் வழக்கில் சமரசம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது அல்ல. குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 320-ல் 56 குற்றங்களுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் 43 குற்றங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்றும்

13 குற்றங்கள் நீதிமன்ற அனுமதியுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தில் மேலும் இரண்டு குற்றங்களும், மத்தியப் பிரதேசத்தில் மேலும் நான்கு குற்றங்களும் சமரசம் செய்துகொள்ளலாம் என்று அந்த மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளன. இவற்றில் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்ற குற்றங்கள் பட்டியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 497(பிறன்மனை புணர்தல்), 498 (திருமணமான பெண்ணைக் கடத்திச் செல்லுதல்) ஆகிய குற்றங்கள் அடங்கியுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரிவு 497 குற்றத்துக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் குற்றவாளியுடன் சமரசத்துக்குத் தகுதியானவன் என்று கூறப்பட்டிருக்கிறது.

பிரிவு 498 குற்றத்துக்கு அந்தப் பெண்ணின் கணவனும் அந்தப் பெண்ணும் குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ளலாம். இந்த விஷயங்களில் எல்லாம் பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது எனக் கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பது வியப்பாக உள்ளது. உச்ச நீதிமன்றங்கள் தத்துவார்த்த சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, யதார்த்த நடைமுறைபற்றிச் சிந்தித்தால் நல்லது. மேலும், சமரசம் கட்டாயப்படுத்தப் படவில்லை என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்ததே என்பதையும் மறந்துவிடக் கூடாது! என்கிறார்.

இது ஓர் ஆய்வுக்குரிய சிக்கல். உச்சநீதிமன்றம் சட்டப்படியான தனது பார்வையின்படி முடிவை, இச்சிக்கலில் வழங்கியுள்ளது. எனவே, அதுதான் ஏற்கப்பட வேண்டியது. என்றாலும், அதை மறுத்து ஒரு நீதியரசர் தன் கருத்தை வைத்துள்ளது, இச்சிக்கலில் இன்னும் ஆழமாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டியது கட்டாயத்தை வெளிப்படுத்துகிறது.

சமரச முயற்சிக்கு தொண்டு அமைப்புகளும் பெண்ணுரிமைப் போராளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் பெரிதும் கவனத்தில் கொண்டு, சேர்ந்து வாழ விரும்புவோர் வழக்கில் மனிதநேயத்தோடும், பெண்ணுரிமை காக்கப்படும் வகையிலும் தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *