தோழர்களே!
எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யவில்லை.
தோழர்களே!
நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது!
_ தந்தை பெரியார்
இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாடு தேவகோட்டையில் 9.7.1961இல் நடைபெற்றபோது பேசியது.
(விடுதலை, 18.7.1961)