மே 22 காலை ஒரு பத்திரிகை நண்பரிடம் அந்தத் தகவலைச் சொன்னபோது மிகுந்த துயரப்பட்ட அவர் உடனே சொல்லிய வார்த்தை நாம் யாருக்கு ஆறுதல் சொல்வது? என்றதுதான். நாம் சொன்னோம், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நாமே ஆறுதலைச் சொல்லிக் கொள்ளும் நிலையில்தான் விடுதலை குழுமம் தனது வேதனைக் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறது என்று சொன்னோம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கத்தின் கருத்துகளை பத்திரிகைகளில் எழுதி வந்தவர்; தந்தை பெரியாரைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டு முழங்கி வந்தவர்; அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் அரசியல் பணிகளுக்கு உறுதுணையாய் இருந்தவர்; திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் மாறாத அன்பு கொண்டவர், தனது இறுதிக் காலம் வரை முரசொலியில் எழுதியவர்; நமது உண்மை இதழில், சிறிது காலம் நக்கீரனில் மற்றும் பிற ஏடுகளிலும் எழுதியவர் என்ற பெருமைக்குரிய சின்னக்குத்தூசி (இயற்பெயர்:தியாகராஜன்) 77ஆவது அகவையில் சென்னையில் மறைந்தார். இயக்கம் சார்ந்த எழுத்துப் பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்று கவலைப்பட்டவர் இல்லை. மாறாக, கொள்கை யாளர்களையே உறவுக்காரர்களாகப் பெற்றார். அவரது திருவல்லிக்கேணி வல்லப அக்ரகாரம் மாதாந்திர வாடகை அறையில் உறங்கும் நேரம் போக மீத நேரங்களில் பேச்சுக் கச்சேரி நடந்துகொண்டே இருக்கும். அதில் பங்கேற்பவர் கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்; வந்து வந்து சென்று கொண்டே இருப்பார்கள்; ஆனால், தொடர்ந்து பேசுபவராக சின்னக்குத்தூசி இருப்பார். பேச்சில் கடந்த நூற்றாண்டின் சமூக, அரசியல் தகவல்கள் வண்டி வண்டியாகக் கொட்டும். சிலரிடம் விவாதங்கள் வலுக்கும். அந்த அறை பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கல்.
சின்னக்குத்தூசியிடம் பத்திரிகை பாடம் படித்தவர்களே தற்போது தமிழ்நாட்டின் முன்னணிப் பத்திரிகைகள் பலவற்றில் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு சமயம் நக்கீரன் கோபால் அவர்களின் மீதான வழக்கு தொடர்பாக சின்னக்குத்தூசியையும் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அறையில் சோதனைகளையும் மேற்கொண்டனர். என்ன சார்..குண்டு வச்சிருக்கேனானு தேடுறீங்களா?ஆமா… சார்..பெரிய குண்டே வச்சிருக்கேன் சார்… என்று சொல்லியவாறே அங்கே பாருங்க..அதான் என்றார்.அவர் காட்டிய இடத்தில் தந்தை பெரியாரின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அறையில் பெரியார் படத்தை மட்டுமே அவர் மாட்டிவைத்திருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக தன் பொறுப்பில் ஏற்று சின்னக்குத்தூசி அவர்களைத் தாங்கிப் பிடித்த நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் திராவிட இயக்கமும், தமிழக பத்திரிகை உலகமும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது. மறைந்த நாளன்று சின்னக்குத்தூசியின் உடல் நக்கீரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தி.மு.க.தலைவர் கலைஞர்,பேராசிரியர் க.அன்பழகன், தி.க.தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர். சின்னக்குத்தூசி விரும்பியபடியே எந்தவித சடங்குகளும் இல்லாமல் அவரது இறுதிப் பயணம் அமைந்தது. அவர் இன்று இல்லை. ஆனால், அவர் தேடித் தொகுத்து அளித்த வரலாற்றுச் செய்திகள்தான் இனி வருங்காலத்திலும் பயன்படப்போகிறது.
– மணிமகன்