செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்!

ஜூலை 16-31

காலை கடலூர் முத்தையா டாக்கீஸ் திரைப்பட அரங்கில் மாநாடு தொடங்கி நடக்கிறது.- -வழக்கம் போல காங்கிரஸ் எதிர்ப்புக்கிடையில் அய்யா பேசிக் கொண்டிருக்கிறார்; திடீரென்று கதர்ச்சட்டை இளைஞர் ஒருவர்- கூட்டத்தின் நடுவே எழுந்து ராமசாமி நாயக்கா, பேசாதே! திரும்பிப்போ! என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டார். கூடியிருந்த இயக்கப் பிரமுகர்கள், தோழர்களுக்கு ஆத்திரம், கோபம் எல்லாம் பொங்கி அவரைத் தாக்கச் சூழ்ந்துவிட்டனர்!

அய்யா அவர்கள்- அந்தக் கூச்சல், எதிர்ப்பு கண்டு கொஞ்சமும் சலிக்காமல், கலங்காமல் மேலும் தீவிரமாக, தோழர்களைச் சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துவிட்டு, வெண்கலநாதக் குரலில், சிலிர்த்த சிங்கமாகி கர்ச்சித்தார்!

நான் சொல்வதை அப்படியே நம்புங்கள்; ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இங்கு வரவில்லை; உங்களுக்கு அறிவு, பகுத்தறிவு இருக்கிறது. அதனைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் விட்டுத் தள்ளுங்கள். எனது கருத்தை மறுக்க எவருக்கும் உரிமை உண்டு; அதனால்தான் அதை எடுத்துச் சொல்லும் உரிமை எனக்கும் உண்டு என்று சொல்லி, காரணகாரிய விளக்கங்களை அடுக்கடுக்காக ஆணித்தரமாகக் கூறியது கண்டு பலரும் அய்யா வழி நிற்கும் அளவுக்கு மனமாற்றம் அடைந்தனர்!

அன்று மாலை மஞ்சை நகர் திடலில் (மைதானத்தில்) பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம்!

அய்யா அவர்கள் பேசத் தொடங்கியவுடன் பெருமழை — அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது. அய்யாவின் கருத்து மழையோடு, அது போட்டி போட்டது; இறுதியில் அய்யாவே வென்றார்- வழக்கம் போல! அம்மா புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு அங்கிருந்து திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்தினை நோக்கித் தோழர்களுடன் நடந்து செல்லுகிறார்.

அய்யா அவர்கள் தமது கைப்பெட்டியோடு ஆள் இழுக்கும் ரிக்ஷாவில் அமர்த்தப்படுகிறார். (அப்போது சைக்கிள் ரிக்ஷாவே கிடையாது) தோழர்கள் புடை சூழ புகைவண்டி நிலையம் நோக்கி, அடுத்த நாள் சென்னை மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் செல்கிறார்.

கெடிலம் நதி பழைய பாலம் அருகில் வந்து கொண்டிருக்கும்போது- நான் அய்யாவின் ரிக்ஷா அருகில் நடந்து வருகிறேன்- தோழர்களோடு!

உடனே பாம்பு பாம்பு என்று கூச்சல் கிளம்பியது. அதனை ஒரு தோழர் விளக்கு (டார்ச்) மூலம் பார்த்துக் கையால் பிடித்துத் தூக்கிவிட்டார். தண்ணீர்ப் பாம்பை வேண்டுமென்றே வீசியுள்ளனர் என்பது ஓரளவு புரிந்தது!

சற்று தூரம் வந்தவுடன், அய்யா அவர்கள், ரிக்ஷாவை வந்த திசை நோக்கி திருப்பி ஓட்டச் சொன்னார். யாருக்கும் ஏன் என்பது புரியவில்லை. அதுபோலவே திரும்பியது ரிக்ஷா. கொஞ்ச நேரம் சென்றவுடன், மறுபடியும் செல்ல வேண்டிய இலக்கு உள்ள திசை நோக்கி திருப்பி ஓட்டச் சொன்னார். எதற்காக இந்த மாற்றம்-? யாருக்கும் புரியவில்லை. தோழர்கள் புடை சூழ நின்று கொண்டுள்ளனர்- அய்யாவை வழியனுப்ப, ஆசிரியர் திராவிடமணி, திருப்பாதிரிப்புலியூரின் கொள்கை வீரரான மா.பீட்டர் பி.ஏ., விருத்தாசலம் தோழர் சி.முனுசாமி, வி.கே.எஸ்.சண்முகசுந்தர நாடார்- இப்படிப் பலர். அவர்களிடம் அய்யா,

நான் ஏன் ரிக்ஷாவை இடையில் திருப்பச் சொன்னேன் என்று யாரும் கேட்கவில்லையே? நான் அங்கு வரும்போது, பாம்பு விழுந்த சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு செருப்பு என் மீது விழுந்தது! அதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்ட பிறகே திருப்பச் சொன்னேன். போட்டவர் மற்றொரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? திரும்பிச் சென்றால் அதையும் எறிந்து விடுவார் என் மீது-,- அதனால் அவருக்கும் நிம்மதி; எனக்கும் இரண்டு செருப்பு ஜோடியாகக் கிடைத்த பயன் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, அதைக் காட்டிவிட்டுக் கைப்பெட்டியில் வைத்துக் கொண்டார்கள்! எந்த இடத்தில் அய்யா மீது செருப்பு வீசப்பட்டதோ அதே இடத்தில்தான், கடலூரில் அவருக்கு முழுவுருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, அது அந்தச் சரித்திரக் குறிப்புகளோடு கம்பீரமாக நின்று கொண்டுள்ளது (13.8.1972)

பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதிய பெரியார் பெருந்தொண்டர்  கவிஞர் கருணானந்தம் அவர்கள் செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று சிறப்பான கவிதை ஒன்றைக்கூட எழுதினார்கள், விடுதலை மலரில்!

இதோ அந்தக் கவிதை…

உடலிருக்கும் காரணத்தால் மனித ரென்றால்
உலகத்தில் எல்லோரும் மனிதர் தாமா?
மடலிருக்கும் தாழைக்கு மணமுன் டென்றால்
வாழைப்பூ மடலுக்கு மணமும் உண்டா?
கடலிருக்கும் ஊரென்றால் கடலூர் என்றால்
கரையாத வரலாறு படைத்த தெவ்வூர்?
கடலூரில் சென்றதிங்கள் பதின்மூன் றாம்நாள்
காலத்தைப் பின்னோக்கித் தள்ளக் கண்டேன்
இருபத்தெட் டாண்டுகள்முன் இதே மை தானம்
இருட்டுத்தான்; ஒளிவிளக்கு மிகக் குறைச்சல்!
ஒருபத்துக் காலிகளின் குழப்பம்; கூச்சல்…
ஓங்கிவந்து வீழ்ந்ததோர் அழுகல் முட்டை
அறுபத்தா றாண்டுகளைக் கடந்த தந்தை
அறிஞருக்கும் தலைவரதைத் தட்டி விட்டுக்
கருவத்தால் தலைநிமிர்ந்து கர்ச்சிக்கின்றார்…
கண்டவருள் யானொருவன் இங்கே உள்ளேன்!
மழைபொழியத் தொடங்கியதால் கூட்டம் விட்டு
வண்டியிலே பெரியாரை அமரச் செய்தோம்!
இழுத்துவர, நாங்களெல்லாம் சூழ்ந்து செல்ல,   
எங்கிருந்தோ ஒருசெருப்பைக் கயவன் வீசப்,
பழையதுதான் என்றாலும் விடாது பற்றிப்
படுக்கையிலே செருகிவைத்தார் அய்யா! பின்னர்
வழவழக்கும் நீர்ப்பாம்பை இடையில் விட்டான்
மடையனவன்; கலைந்துபோகும் படையா நாங்கள்?

ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டபோதுகூட அது கண்டு சங்கடப்படாமல் தனது இலட்சியப் பயணத்தில் அதை ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ளும் முதிர்ச்சி — துணிவு வேறு யாருக்கு வரும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *