இன்றைக்கு உன்றன் பிறந்த நாள்!

ஜூலை 16-31

பெருந்தலைவ!
இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் – கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்!
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ரவதையும்
சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி!
ஆயிரம் உண்டு கருத்து மோதல் –  எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப் போமோ?
தமிழ் நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப் பணியின் உருவே!
கருத்திருக்கும் உந்தன் உடல் என்றாலும் –  நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும் –
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்!
கட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய்  – பிற
கட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்
பேரறிஞர், மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்!
பெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்
உற்றார் உறவுபோல நீவந்து உகுத்தாய் கண்ணீர்!
பெருமகனே! உனக்காக எம் கண்ணீர்
பேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ?
தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு!
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்!
குமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்க
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்!
குணாளா! குலக்கொழுந்தே! என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
பச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
கருப்புக் காந்தியென உன்னை  – இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுத தன்றோ!
வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும் காட்டினாய்! – உன்
வாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் –
என்றைக்கும் அது சிறந்த நாள்!

– கலைஞர் மு.கருணாநிதி
(முரசொலி, 15.7.1976)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *