தேசிய மாநில அளவில் கபடி (சடுகுடு), கைபந்து (Volley Ball), தொடர் ஒட்டம் (Reley), என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர், வீராங்கனைகளை தந்து வருகிற ஊர் வடுவூர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது வடுவூர் என்ற கிராமம். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம் என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் ஊர் வடுவூர்.
இவ்வூருக்கு மேலும் ஒரு சிறப்பு எதுவென்றால் சுமார் 316 ஏக்கரில் ஒரு ஏரியும் உள்ளது. இது பல நாட்டு பறவைகளுக்கு சரணாலயமாக விளங்குகிறது. இவ்வூருக்கு மத்திய அரசு ரூ.6 கோடி நிதி வழங்கி இந்தியாவிலேயே முதல்முறையாக ஊரகப் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது.
கடந்த 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ ஓட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் வடுவூருக்கு பெருமை தேடித்தந்து முதல் துவக்கத்தைத் தந்தவர், இந்திய தடகள பயிற்சியாளர் மறைந்த வீரர் பி.ராஜசேகரன். இவரைத் தொடர்ந்து தடகளத்தில் முத்திரை பதித்தவர் இரயில்வேயில் விளையாட்டுத்துறை உதவி இயக்குநராக உள்ள ஜி.மோகன்.
மாநில அளவிலான கைபந்து போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான பல பரிசுகளைக் குவித்தவர் தமிழக விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி மறைந்த வீரர் எஸ்.ராமமூர்த்தி, தென்னக ரயில்வேயில் பணியாற்றும் ஜி.பாண்டியன், சென்னை மாவட்ட முன்னாள் விளையாட்டு அலுவலர் பி.காந்தி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி அலுவலகத்தில் பணியாற்றும் வி.பாஸ்கர், மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளராக உள்ள வி.மனோகரன், மின்வாரிய சார்பு செயலாளர் ஆர்.நாராயணன், புனேயில் வருமான வரித்துறையில் பணியாற்றும் தேசிய வீரர் ஜெ.தென்னரசு ஆகிய வடுவூரைச் சேர்ந்தவர்கள் கைபந்து போட்டியில் இந்தியா மற்றும் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியுள்ளனர் என்றார் கைபந்து மாநில வீரரும் வேளாண்மை துறையில் பணியாற்றுபவரும், வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகடாமியின் செயலாளருமான ஆர்.சுவாமிநாதன்.
மன்னார்குடி தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மூலம் மத்திய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த (திரு.மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில்) தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை சந்தித்தனர், ஸ்போர்ட்ஸ் அகடாமியினர்.
சுமார் 2400 சதுர மீட்டரில் (அதாவது 60 மீ. நீளம், 40 மீ. அகலம்) உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் தரைத்தளம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேபிள்உட் என்ற மரத்தில் அமைகிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் கபடி, கைபந்து, ஓட்டம், கூடைபந்து, இறகுபந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், கராத்தே, சதுரங்கம், கேரம், குண்டு மற்றும் வட்டு எறிதல், யோகா உட்பட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கவும் போட்டிகள் நடத்துவதற்குமான வகையில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
விளையாட்டு போட்டிகளை ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்படுகிறது. மேலும் இதில் அலுவலகத்திற்கும், சிறப்பு விருந்தினர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்க தனித்தனி அறைகளும் கழிவறை, குளியலறை, உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதை என அனைத்து வசதிகளும் உள்ளடங்கியது.