ஆசாரம்
ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.
பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.
அதி
இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச்சொல், அதைத்தல், அதை, அதி, என்பனவற்றிற்கு மிகுதி என்பது பொருள்.
(குயில், குரல்: 1, இசை: 7, 15—07-1958)
8
அதி
இது தூய தமிழ்ச்சொல் என்றும் அதைத்தலின் முதனிலையாகிய அதை என்பதுதான் அதி என்றாயிற்று என்றும் கூறியிருந்தோம். அது பற்றி நண்பர் ஒருவர் (பெயரைக் குறிப்பிட வேண்டாமாம்) அதை என்பது அதி வர இலக்கணச் சட்டம் இடந்தருகின்றதா என்று கேட்டுள்ளார். ஒரு சொல் வேறுபாடு உறுவதையும் மருவி வருவதையும் தமிழிலக்கணம் ஒத்துக் கொள்கிறதல்ல. அதன்படியே அதை என்பது என அறிதல் வேண்டும்.
இதற்கு மற்றொரு மேற்கோள் அவைத்தல், அவித்தல் என்றும், அவை என்பது அவி என்றும், வந்தது காண்க.
ஆசிரியர்
இது வடசொல் என்று ஏமாற்றுவார் -தூய தமிழ்ச் சொற்றொடர் ஆகும். ஆசு –குற்றம். இரியர் — நீங்கியவர். மடமை என்னும் குற்றத்தினீங்கியவர் ஆசிரியர். காரணப்பெயராதல் அறிக.
மடம்
அறியாமை உணர்த்தும் போது மடம் தூய தமிழ்ச் சொல்லே. அது நிலையத்துக்கு ஆகும்போது வடமொழி என்க!
அரங்கு
அரக்குதல் என்னும் தொழிற் பெயர் உடலில் புடை பெயர்ச்சி செய்தல் என்று பொருள்படும். அதன் முதனிலையாகிய அரக்கு என்பதற்கும் அதுவே பொருள்.
அரக்குதல், அரக்கு என்பவற்றின் தன்வினைகள் அரங்குதல், அரங்கு என்பது. பொருள் என்னவெனில் (உடல்) புடைபெயர்தல், அஃதாவது உடலசைதல், ஆடல் ஆகும். இனி அரங்கு என்பது அம் இறுதி பெற்றும் பெறாமலும் ஆடுமிடத்திற்கு ஆனது ஓர் ஆகுபெயர் என்க!
இச்சொல் நம் செந்தமிழ்ச் செல்வமாகும். இதை வடசொற் சிதைவென்று கூறுவார். கூற்று நூற்றுக்கு நூறு பொய்யென மறுக்க.
முரலை
அண்மையில் வடசொற் பற்றுடையவர் ஒருவர், இது முரலா என்ற வடசொற் சிதைவு என்று கூறினார். எரிச்சல் வந்துவிட்டது. இதனால் சிரிக்க வாய்ப்பிழந்தேன்.
ஆரியர் நாற்றமே இந்த நாவலந்தீவில் ஏற்படாத காலத்திலேயே, வட நாட்டிலிருந்து நருமதை ஆற்றுக்குத் தமிழர் முரலை என்று பேரிட்டு அழைத்தனர். முரலை என்ற தொழிற் பெயருக்கு, முரலுவது – ஒலிப்பது, அதிலும் புறத்தால் ஒலிப்பது என்பது பொருள். அஃது தொழிலாகு பெயர். முரலை ஆற்றைக் குறித்தது. எனவே தூய தமிழ்ச்சொல்.
முரலி
இது முரலுதலை – ஒலித்தலையுடையது என்ற பொருள் கொண்டது. மேலும் உள்ளால் ஒலிப்பது என்று கொண்டனர் பண்டைத் தமிழர். இதை வடவர் முரளி என்று கூறுவார்கள். முரலி என்பது குழலுக்கு – புல்லாங் குழலுக்குப் பெயர். தூய தமிழ்ச் சொல் என்பதை அறிந்து மகிழ்க!
மா
இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை!
மா! எனின் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம், முதலிய பலபொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந்நாட்டிற்கு புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. பெரிது என்ற பொருளில், மாப்பெரிய என்று எழுதவேண்டும். (இடையில், ப் விரிக்காவிடில் மா பெரிது) மா என்பது மகா என்ற வடசொற் சிதைவு என்று கொண்டதாகிவிடும். மா இருக்க மஹா எதற்கு?
கண்ணியம்
இது கண்யம் என்பதன் சிதைவு என்பர் பார்ப்பனரும் அடியாரும். கண்ணல், எண்ணல் சிறத்தல், என்பன ஒன்றே. கண்ண, கண்ணிய எனச் செய, செப்பிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாயும் வரும்.
கண்ணியம் இகரச் சாரியையும் அம் இறுதி நிலையும் பெற்ற பெயர். வடவர் சொல்லும் கண்யம் வேறு, தமிழர் கொண்ட கண்ணியம் வேறு என அறிதல் வேண்டும்.
– (குயில், குரல்: 1, இசை : 8, 22-07-58)