இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடுக்கச் சொல்லி மே 18 ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள அய்க்கிய நாட்டு சபையின் முன்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் மருத்துவர் சோம இளங்கோவன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கனடா, அமெரிக்க வாழ் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், மற்றும் அவர்களுடைய அமெரிக்க நண்பர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் ராஜபக்சேவுக்கு எதிராக, குற்றவாளி ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு, அய்க்கிய நாடே! போர்க்குற்றத்தை விசாரித்து நடவடிக்கை எடு என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஈழத் தமிழர்களுக்காகப் போராடினர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், உலகின் பல்வேறு தமிழினப் பற்றாளர்களின் செய்திகள் படிக்கப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவரின் அறிக்கையினை, வீ. அன்புராஜ் படித்தார்.
நடக்க இருக்கும் செயல்பாடுகளை அறிவித்து தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
எவ்வளவு முயற்சி செய்தும், உடன்பிறப்புகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் தமிழர்களின் ஆதங்கமாக _ துயரமாக இருந்தது. இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடு உலகை உலுக்கட்டும் என்று கூறி அனைவரும் விடைபெற்றனர்.