கண்டுபிடித்தது… கடவுள் அல்ல! – 8

ஜூலை 16-31

– மதிமன்னன்

உடலின் பல பாகங்களுக்கும் குருதி ஓட்டம் சீராக நடைபெறும் பணியை இதயம் செய்கிறது. இதன் பணியில் சீர்குலைவு ஏற்பட்டாலோ, பாதிப்பு பெருமளவு உடலுக்கு ஏற்படுகிறது. இதய அடைப்பு ஏற்படுகிறது. உயிரை இழக்கவும் நேரிடுகிறது. அதனைச் சீர் செய்திட அறுவை மூலம் மருத்துவம் பார்க்க நேரிடுகிறது. இதயத்தைத் திறந்து சீர் செய்ய வேண்டிய நிலையில் குருதி ஓட்டம் தடையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழுதான இதயம் மூலம் அன்றி வேறொரு இதயம் மூலம் செய்திட வேண்டும்.

செயற்கை இதயம் தேவைப்படுகிறதே! செயற்கை இதயத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துத் தந்துவிட்டனர்! அமெரிக்காவில் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த பால் விஞ்ச்செல் மற்றும் டாக்டர் ஹென்றி ஹெல்மிச் ஆகிய இருவரும் இணைந்தனர். டாக்டர் ஹெல்மிச் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது பால்விஞ்செல் உடனிருந்து கவனித்தார். குருதி ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான கருவியை வடிவமைத்தார். 1956இல் இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

1963இல் காப்புரிமை கிடைத்தது. இந்த உரிமையை அவர் உடா (UTAH)பல்கலைக்கழகத்திற்கு அளித்துவிட்டார். ராபர்ட் ஜார்விக் உட்பட 7 பேர் ஆய்வாளர்கள் இந்தக் கருவியை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்தனர். உடலில் பொருத்துமளவில் உருவாக்கினர். 1982ஆம் ஆண்டில் டிசம்பர் 2ஆம் நாளில் பார்னி கிளார்க் எனும் பல் மருத்துவர் ஒருவருக்கு டாக்டர் வில்லியம் டி வீனாஸ் செயற்கை இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். என்றாலும் 112 நாள்களுக்குப் பிறகு செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்துபோனார். முழுவதுமாக இதயம் பழுதுபட்டவர்கள் மாற்று இதயம் கிடைத்து பொருத்தப்படும் வரை, உயிருடன் இருப்பதற்கு இத்தகையச் செயற்கை இதயம் பெருமளவில் உதவுகிறது. குருதி ஓட்டம் தடைபடாமல் நடைபெற உதவுகிறது. குருதியை பம்ப் செய்யும் பணியை நிறுத்தாமல் செய்கிறது. மருத்துவ அறிவியல் உலகில் செயற்கை இதயம் மாபெரும் சாதனை அல்லவாம்!

செயற்கை ஈரல்தான் மிகப்பெரும் சாதனை என்கிறார்கள். ஏனென்றால், ஈரல் பலப்பல பணிகளைச் செய்கிறது. உண்ணும் உணவைச் சத்தாக மாற்றுகிறது. உணவில் உள்ள தீங்கான வேதிப் பொருள்களின் நச்சுத் தன்மையைப் போக்குகிறது. கலப்படம் இல்லாத பொருளே இல்லை, உணவே இல்லை என்பது இந்திய நிலைமை. பற்பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்களையெல்லாம் கொள்ளையே குறியாகக் கொண்ட வியாபாரிகள் இங்கே கொண்டுவரும்போது முந்தி விரித்து வாங்கிச் சந்தைப்படுத்துகிறவர்கள் இந்தியர்கள்.

அத்தகைய பொருள்களின் நச்சுத் தன்மையை நீக்கும் ஈரல் எத்தகைய மனிதநேயப் பணியைச் செய்யும் உறுப்பு! சத்துப் பொருளாக மாற்றிய உணவைத் தேக்கி இருப்பு வைக்கிறது ஈரல். வெட்டுக் காயங்களினால் இரத்தம் வெளியேறி உயிருக்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்து பித்தநீர்(Bile) சுரந்து புரதத்தில் சேர்க்கும் தடுப்பு நடவடிக்கையை ஈரல் செய்கிறது. இப்படிப் பலவற்றையும் செய்யும் ஈரலைக் குலைக்காமல் மனிதன் இருக்கிறானா? ஈரலைக் கெடுக்கும் ஆல்கஹாலை அருந்தாமல் இருக்கிறானா-? மது குடித்து ஈரலைப் பாழாக்குகிறார்களே! பாழாக்கப்பட்ட ஈரலைப் பழுது பார்க்க எத்தனையோ வழிகளில் முயன்றும் முடியவில்லை என்ற நிலையில் 2001இல் டாக்டர் கென்னத் மட்சுமுரா என்பவர் செயற்கை ஈரலை உருவாக்க முனைந்தார்.

ஈரலின் செல்களை எடுத்து, அதன் மூலம் செயற்கை ஈரலை உருவாக்கிட ஆராய்ச்சி செய்தார். வெற்றி கண்டார். புதிதாக ஈரல் கிடைத்து, ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, செயற்கை ஈரல் மூலம் வாழலாம் என்கிற வகையில் இது பெரிய அறிவியல் கொடை. பிரிட்டனின் மருத்துவ அறிவியலாளர்கள், செயற்கையாகவே ஈரல் செல்களை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் முழுவதும் செயற்கை செல்களால் ஆன செயற்கை ஈரலைக் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவர். அறிவியல் முடிவில்லாதது, தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். ஒன்றை விஞ்சும் ஆய்வு ஒன்றினை ஆய்வாளர்கள் நடத்துவர். வெற்றி பெறுவர். அதுவரை ஆய்வுகள் நடக்கும். குழந்தையைப் பெற்றெடுப்பது எப்பேர்ப்பட்ட துன்பம் என்பதைப் பிரசவ வைராக்கியம் எனும் சொல்லே எடுத்துக்காட்டும். அந்த நோவு பொறுக்க முடியாமல் இருப்பதால்தான், தாய்மார்கள் இனி, குழந்தைக்காகக் கணவனுடன் கூடுவதே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வார்களாம், பின்னரும் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவேறு சங்கதி! முந்தைய காலங்களில் பிள்ளைப் பேற்றின்போது இறந்து போகும் தாய்மார்கள் அதிகம். நிறைப் பிள்ளைத் தாய்ச்சியைத் தலையில் சாவை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பெற்றுப் பிழைத்து வந்தாள் என்றும் கூறுவதுண்டு.

இத்தகையச் சாவுகளுக்குக் காரணம் பிள்ளைப் பேற்றின்போது குருதிப்போக்கு நிறைய இருந்ததுதான். இதனைத் தடுத்துத் தாயின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் குருதி இழப்பை ஈடுசெய்யும் வகையில் இரத்தம் அவளின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். எப்படி உள் செலுத்துவது? பூனை, நாய் போன்றவற்றிடம் ஆய்வுகள் நடத்தினர். பின்னர் மனிதனிடம் வந்தனர். முதன்முதலில் ரத்தம் உள் செலுத்தப்பட்டது ஓர் ஆணுக்குத்தான். வயிற்றில் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளான ஆண் ஒருவருக்குத்தான் ரத்தம் செலுத்தப்பட்டது. 22.12.1818இல் செலுத்தப்பட்டது. மொத்தம் 14 அவுன்சு ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சிரிஞ்சு (ஊசி மருந்து செலுத்தும் கருவி) மூலம் செலுத்தப்பட்டது. 56 மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார். ரத்தம் அளிப்பவரிடமிருந்து தேவைப்படுபவருக்குச் செலுத்த ஒரு வகைக் கருவியை ஜேம்ஸ் பிளன்டல் எனும் மகப்பேறு மருத்துவர் வடிவமைத்திருந்தார். அதன் மூலம் 1818 முதல் 1829 வரை பத்துப் பேருக்கு ரத்தம் செலுத்தினார்.

அவற்றுள் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ரத்தம் உள்ளே செலுத்தப்பட்டோர் கருப்பு நிறச் சிறுநீரை வெளியேற்றியதாக பிளன்டல் எழுதினார். இதற்கான காரணம் 1900இல்தான் தெளிவாகியது. சிலரின் ரத்தம் சிலர்க்கு ஒத்துவராத நிலையில் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இறந்து போகின்றன என்பதுதான் காரணி என்பதைக் கண்டறிந்தார் கார்ல் லான்ட்ஸ்டீனர் எனும் வியன்னா மருத்துவர். அவர்தாம் ரத்தத்தில் மூன்று வகைகள் உள்ளன எனக் கண்டறிந்தார். அவற்றை A, B, C என்று வகைப்படுத்தினார். பின்னர் இவை A, B, O எனப் பெயரிடப்பட்டன. நான்காவதாக ஒரு ரத்தவகை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது AB எனப்பட்டது. ஆரியச் சநாதன மதமான இந்து மதத்தின் கேடுகெட்ட மனிதப் பிரிவுகளான நால்வருணங்களை இந்த ரத்த வகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் காஞ்சிபுரம் மடத்தலைவர் சாமிநாத சங்கராச்சாரி. ரத்தம் உள்செலுத்தும்போது ரத்த வகைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என லான்ட்ஸ்டீனர் கூறியதை மருத்துவ உலகு பத்தாண்டுகளாகக் கண்டுகொள்ளவேயில்லை. தற்போது மிகவும் கவனமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் இயங்கிவரும் இரத்த வங்கியைத் தொடங்கியவர் சார்லஸ் ட்ரூ என்பவர். 46 வயதிலேயே இறந்துபோன இவர் ரத்தத்தின் பிளாஸ்மாவிலிருந்து சிவப்பு அணுக்களைப் பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தார். அதனைப் பாதுகாத்து, உள் செலுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்.

1941இல் இவர் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தத்திலிருந்து காயவைக்கப்பட்டுப் பவுடராக்கப்பட்ட பிளாஸ்மாவைச் சேமித்து வைத்தார்.

பின்னர் காய்ச்சி வடிகட்டிய நீருடன் கலந்து திரவ பிளாஸ்மாவாக ஆக்கப்பட்டுத் தேவைப்படுவோர்க்குச் செலுத்தப்பட்டது. உலக யுத்தத்தின்போது ரத்தம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட மக்கள், போர்வீரர்களல்லாதவருக்கும் ரத்தம் செலுத்தி உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என விரும்பினர். 1950 வரை கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட ரத்தம் தற்போது பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறையைக் கண்டுபிடித்தவரான ட்ரூ (ஞிக்ஷீமீஷ்) கடுமையான கார் விபத்தில் சிக்கி, நிறைய ரத்தம் வீணாகிப் போனதால் ரத்தம் உள் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். சேமித்து வைத்திட குருதிக்கொடை வழங்குபவர்கள் குறைவு. மேலும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்த் தொற்று இருப்போர் தரும் ரத்தத்தை மற்றொருவருக்குச் செலுத்துவதனால் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம். எனவே, செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடித்திடும் தேவை ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவரான தாமஸ் ஷான் என்பவர் 1956இல் செயற்கை ரத்தச் செல்களை உருவாக்கினார். அப்போது அவருக்கு 23 வயதுதான்.

இந்தச் செயற்கை ரத்தத்தைத் தம் உடலில் செலுத்திக்கொள்ளப் பலரும் முன்வரவில்லையாம். ரத்தத் தூய்மை எனும் மினுக்கித்தனம் மனித மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளதே! ரத்தத்தில் சேரும் கழிவுகளைப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியே வெளியே அனுப்பும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரகம் பழுதுபட்டுவிட்டால் கழிவுப் பொருள்கள் ரத்தத்திலேயே தேங்கி விடுகின்றன. அதனால் மனிதர் இறக்க நேரிடும். எனவே, சிறுநீரகத்தின் பணியைச் செய்திடும் கருவியைக் கண்டுபிடித்திடும் அவசியம், ஆராய்ச்சிகள் தொடங்கின. வில்லியம் கோல்ஃப் எனும் மருத்துவர் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் நடந்ததால் அத்தியாவசியமான பொருள்கள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்தவற்றைக் கொண்டு செயற்கைச் சிறுநீரகம் உருவாக்கினார். 1943இல் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையும் செய்தார்.

போர் முடிந்தபிறகு கோல்ஃப் அமெரிக்கா திரும்பினார். செயற்கைச் சிறுநீரகத்தை சிறப்பாக வடிவமைக்க உழைத்தார். 1956இல் உருவாக்கி விற்பனையும் செய்தார்.

1960 முதல் டையலாசிஸ் எனப்படும் செயற்கைச் சிறுநீரகம் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது சாக்குருவி வேதாந்தம். உருப்படாத தத்துவம். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

– (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *