தானியங்கி புகார் பதிவு இயந்திரம் கண்டுபிடிப்பு – இளைஞர் காவல் படை வீரர் சாதனை

ஜூலை 16-31

சட்ட விரோதச் செயல்கள் குறித்து காவல் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், புதிய தானியங்கிக் கருவியை காஞ்சிபுரம் இளைஞர் காவல் படையைச் சேர்ந்த வீரர் பி.பாரத் கண்டுபிடித்துள்ளார்.

சட்ட விரோதச் செயல்களால் பாதிக்கப்படுபவர்கள், காவல் துறையால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட நபர்கள் மீது உயர் அதிகாரிகளுக்கு எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்து பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. அச்சத்தின் காரணமாக நேரில் சென்று புகார் தெரிவிக்க யாரும் முன்வருவதில்லை.

தொலைபேசி, செல்லிடப்பேசி உள்ளிட்ட சாதனங்கள் வந்த பிறகு இந்த அச்சம் சற்று குறைந்தது. இருந்தபோதிலும், ஒரு சிலநேரம் தொலைபேசியில் புகார் தெரிவிக்கும்போது, சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகள் குறுக்குக் கேள்வி கேட்டு விடுவார்களோ என்ற அச்சமும் இன்றளவும் நம்மில் பலருக்கு உண்டு.

இந்த நிலையில், சட்ட விரோதச் செயல்கள், காவலர்கள் குறித்த புகார்களை காவல் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், தானியங்கி புகார் பதிவுக் கருவியை விஷ்ணு காஞ்சி காவல் நிலைய சிறப்பு இளைஞர் காவல் படையைச் சேர்ந்த வீரர் பி.பாரத் உருவாக்கியுள்ளார். இந்தக் கருவியின் செயல்முறை விளக்கம் குறித்து பாரத் கூறியதாவது:

பொதுமக்கள் தாங்கள் அறிந்த குற்றங்கள், சட்ட விரோதச் செயல்கள், சமூகத்தில் நடைபெறும் பிரச்சினைகள், காவல் நிலையங்களில் காவலர்கள், அதிகாரிகள் செய்யும் தவறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க ஏதுவாக தானியங்கி புகார் பதிவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு குறிப்பிட்ட இலவச அழைப்பு எண் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொண்டால், அந்த இலவச அழைப்பு எண்ணுக்கு செல்லிடப்பேசி மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டால், ஒரு முறை ஒலித்து விட்டு (ரிங்) கட்டாகிவிடும்.

அதன் பிறகு, நாம் கூறவந்த புகாரைத் தெரிவித்தால், அந்தக் கருவி பதிவு செய்து கொள்ளும்.

இதை குறிப்பிட்ட அதிகாரி கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பார். மேலும், இந்தத் தானியங்கி இயந்திரத்தில் யார் புகார் தெரிவிக்கிறார்களோ, அவர்களது செல்லிடப்பேசி எண், பேசிய நேரம் ஆகியவையும் பதிவாகும்.

இந்த இயந்திரத்தால், புகார் தெரிவிப்பவர்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் புகார்களை உடனுக்குடன் பதிவு செய்ய முடியும்.

மேலும், சமூக விரோதிகள், தவறிழைக்க நினைக்கும் காவலர்களின் குற்றங்கள் ஆகியவை வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *