இரவில் படுக்கப்போகும் முன் தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது உறங்கும் முன் கண்ணிற்கு அதிக ஒளி கொடுப்பது கண்ணிற்கும், மூளைக்கும் நல்லதல்ல. 11 மணிக்கு படுக்கப் போகிறோம் என்றால் தொலைக்காட்சி பார்ப்பதை 10 மணிக்கு முடித்துவிட்டு 1 மணி நேரம் மனநிறைவாகப் பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது அமைதியாக நல்ல நூல்களைப் படிக்கலாம் அல்லது மென்மையான இசையைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் பாடல் கேட்டால் பார்க்காமல் பாடலை மட்டும் கேட்க வேண்டும். திறந்த நிலையில் உணவுப் பண்டங்களை வைக்கக் கூடாது ஈ மொய்த்தல், தூசு, மாசு படிதல், பூச்சிகள் விழுதல் போன்றவற்றால் உணவுப் பொருள்கள் மாசடைந்து உடலுக்குக் கேடாகும். எனவே, நேரடியாக உண்ணும் உணவுப் பண்டங்களைத் திறந்து வைக்கக் கூடாது. இதை முறையாகக் கடைப்பிடித்தாலே பாதி நோய்களைத் தவிர்க்கலாம்.
சாலையோரக் கடைகளில் இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடக் கூடாது. கை கழுவாமல் உண்ணக் கூடாது உண்பதற்கு முன் சோப்பினால் கை கழுவிவிட்டுத்தான் உண்ண வேண்டும். கழிவறைக்குச் சென்று வந்த பின் கட்டாயம் சோப்பால் கை கழுவ வேண்டும்.
கை கழுவாமல் இருப்பது மற்றவர்க்கும் கேடு பயக்கும். அவர்கள் கையால் தொடும் உணவுப் பண்டங்களை உண்பவர்களுக்கு நோய் தொற்றும் அல்லது உடல் பாதிக்கும். உணவு விடுதிகளில் பணியாற்றக் கூடியவர்கள் கட்டாயம் சோப்பிட்டுக் கை கழுவியபின் உணவைத் தயாரிக்கவும் பரிமாறவும் வேண்டும். டைபாய்டு காய்ச்சல் கையலம்பாத காரணத்தால்தான் வருகிறது. நகம் வளர்க்கக் கூடாது விரல்களில் நகம் வளர்ப்பது கூடாது. அதில் அழுக்கு சேர்ந்து நோய் வர வாய்ப்பளிக்கும். உடலில் காயங்களை ஏற்படுத்தும். கண்ணில் குத்திக் குருடாக்கும். நகத்தை ஒட்டி வெட்டக் கூடாது விரல் நகங்களைச் சதையோடு ஒட்டி வெட்டக் கூடாது. அழுக்கு சேராத அளவிற்கும் சதையைக் காயப்படுத்தாத அளவிற்கும் நகத்தை வெட்ட வேண்டும். நகத்திற்குப் பாலீஷ் போடுதல் நலக்கேடு. அழகென்று கருதி கேடு தேடக் கூடாது. மருதாணி இலையை அரைத்து விரல்களில் வைத்து அழகுபடுத்தலாம்.
செயற்கை மருதாணிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆப்பிள் சாப்பிடும்போது விதையோடு சாப்பிடக்கூடாது ஆப்பிள் விதையில் சைனோஜெனிக் கிளைகோஸைட் என்ற வேதிப் பொருள் உள்ளது. அது உடலுக்குக் கேடு உண்டாக்கும். எனவே, விதையைக் கவனமுடன் அகற்றிய பின் ஆப்பிள் உண்ண வேண்டும். தயிரைச் சுட வைத்துச் சாப்பிடக் கூடாது சூடான சோற்றில் தயிரைக் கலந்தோ, தாளித்தோ உண்ணக் கூடாது. தயிரில் உப்பு அதிகம் சேர்த்தும் உண்ணக் கூடாது. நன்கு புளித்த தயிரை இரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் உண்ணக்கூடாது.
தயிரை இரவில் உண்ணக் கூடாது. உண்டால் செரிமானக் கோளாறையும், சிலருக்கு மூச்சிரைப்பையும் உண்டாக்கும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் இரத்தசோகை, காமாலை, தோல் நோய், இரத்தக் கொதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. இரவில் கட்டாயம் தயிர் சாப்பிட நேர்ந்தால், தேன் கலந்து, சீரகம் அல்லது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் பாதிப்பு குறையும். தயிர் சாப்பிடுவதைவிட மோர் சாப்பிடுவதே உடல் நலத்திற்கு ஏற்றது. மோரில் நீர் அதிகம் கலந்து அருந்த வேண்டும். அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் உடலுறவுக் கொள்ளக்கூடாது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வது நல்லதல்ல. பகலில் உடலுறவு கொள்வதும் நல்லதல்ல. பின்னிரவு உடலுறவுக்கு ஏற்றது. உடலுறவுக்குப் பின் ஒரு மணி நேரமாவது நன்றாக உறங்குவது நல்லது.
உடலுறவுக்கு முன் வயிறு நிறைய உண்ணக் கூடாது. சத்தான பருப்பு, பழங்கள் நல்லது. உணவு உண்டு செரித்த நிலையில் உடலுறவு ஏற்றது.
சிறுநீரையும், மலத்தையும் அடக்கக் கூடாது சிறுநீர் 4 மணி நேரத்திற்கு ஒருமுறையும், மலம் காலை மாலை இருவேளையும் கழிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கும் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர் காலங்களில் 2 லிட்டராவது குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் அவசியமின்றிக் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பின் குறைவாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டு 1 மணி நேரத்திற்குப் பின் தேவையான அளவு தேவையான நேரத்தில் குடிக்க வேண்டும். நொறுக்குத் தீனி சாப்பிடக் கூடாது குறிப்பாகக் பாக்கெட்டில் அடைத்த பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். உடல் பருமனுக்கும் பல்வேறு நோய்களுக்கும் அதுவே காரணம். கருவுற்ற பெண்கள், பாலூட்டும் பெண்கள் நொறுக்குத் தீனியை அறவே (சாப்பிடக் கூடாது) தவிர்க்க வேண்டும். வாய் ருசிக்காக வீட்டில் செய்யும் நொறுக்குத் தீனிகளைக் குறைவாகச் சாப்பிடலாம். அதிலும் உப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பர். அது நல்லதல்ல. நாம் உணவு உண்ணத் தொடங்கியதுமே, செரிமானத்திற்குரிய சுரப்பிகள் சுரக்கத் தொடங்கும்.
அப்போது உணவோடு தண்ணீரையும் அருந்தினால், அத்தண்ணீர் செரிமான நீர்களுடன் சேர்ந்து செரிமானத்தைப் பாதிக்கும். உண்ணும்போது சில நேரங்களில் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டிவரும். அப்போது, அளவோடு சிறிதளவு தண்ணீர் அருந்த வேண்டும். மற்ற நேரங்களில் தண்ணீர் வேண்டிய அளவு அருந்தலாம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நலம் காக்க இது பெரிதும் உதவும். உடல்நலம் தண்ணீர் குடிப்பதில்தான் அடங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது.
உடலிலுள்ள செல்களுக்கு உயிர்வளியைக் (ஆக்ஸிஜன்) கொண்டு செல்வது தண்ணீர்தான். நம் உடலில் தட்பவெட்ப நிலையைச் சீராக வைக்கத் தண்ணீர் அவசியம்.
போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் சிறுநீரகம் பாதிக்கப்படும், உடல் முழுவதும் பாதிப்படையும், மூட்டுகள் தேயும், மலச்சிக்கல் ஏற்படும். மூளை செயல்பாட்டிற்கு முதன்மையானது தண்ணீர். தண்ணீர் சரியாகக் குடிக்கவில்லையென்றால் மூளை செயல்பாடு குறையும். தலைவலி, மயக்கம் போன்றவையும் உடல்சோர்வும் ஏற்படும்.
Leave a Reply