– மதிஒளி
பண்பாடு என்பது மனிதனின் பண்பட்ட நிலை. இன்றைய மனிதன் 50 ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தான்? 500 ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தான்? 5000ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு வாழ்ந்தான்? என்று பார்த்தால் பண்பாடு என்பதன் பொருள் விளங்கும்.
மனிதன் விலங்கோடு விலங்காய் வாழ்ந்தான்; விலங்கு போலவே வாழ்ந்தான். ஆடையின்றி, வீடின்றி, சமைத்து உண்ணத் தெரியாது வாழ்ந்தான்.
சமைக்க அறிந்து உணவுகளை சமைத்து உண்டது ஒரு பண்பட்ட நிலை; அடுத்து ஆடை உடுத்தி சில உறுப்புகளை மறைத்தது ஒரு பண்பட்ட நிலை; அடுத்து வீடு அமைத்து வாழ்ந்தது ஒரு பண்பாடு; ஒருவன் ஒருத்தியாய் வாழ்ந்தது ஓர் உயர்நிலைப் பண்பாடு.
பின், வாழ்வின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் செப்பம் செய்து வாழ்ந்தார்கள். அதுவே பண்பாடுகள் ஆயின. ஆக, பண்பாடு என்பது வாழ்க்கை முறையை சீர்செய்து, செம்மையாக்கி வாழ்வது என்பதே பொருள்.
இந்தப் பண்பாட்டின் விரிவுநிலையாய், உண்பதில், பழகுவதில், பேசுவதில், கொடுப்பதில், பெறுவதில், மணப்பதில், உறவு கொள்வதில், உடுப்பதில், உறங்குவதில் பயணம் செய்வதில் என்று பலவற்றிலும் பண்பாடுகள் வந்தன. இதில் தமிழர்கள் முன்னோடியாயும், முன்னிலையிலும் இருந்தனர். இது தமிழர்க்குப் பெருமையையும், உயர்வையும் அளித்தன என்பதில் அய்யமில்லை. ஆனால், இன்றைக்கு அப்பண்பாடுகளைப் பயன்படுத்தி கொல்ல, கொள்ளையடிக்க, ஏமாற்ற, கெடுக்க என்று பலவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.
எனவே, பண்பாடு என்று ஏமாந்து பலியாகாமல் காலத்திற்கேற்ப பண்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அய்யம் எழும் நேரங்களில் அவற்றை கைவிடுவது நல்லது. அதாவது பண்பாட்டை பொதுநியதியாக்கி, எல்லோருக்கும், எல்லோரிடம் என்ற நிலையை மாற்றி, ஆண், சூழல், தேவை இவற்றைப் பொறுத்து அவற்றைப் பின்பற்றுவது நன்று.
வந்தவரை வீட்டிற்குள் அழைத்துப் பேசுதல்: நம் வீடு தேடி வந்தவர்கள் பழக்கமானவர்களோ, புதியவர்களோ அவர்களை வீட்டுக்குள் அழைத்துவந்து அமரச் செய்து உபசரித்துப் பேசுவது ஓர் உயர் பண்பாடாகும். இந்தப் பண்பாட்டை இன்றைக்கு அப்படியே பின்பற்ற இயலுமா? பின்பற்றுவது அறிவுடைமையாகுமா? கூர்மையாய் சிந்திக்க வேண்டும்.
நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் வரும்போது அவர்களை வீட்டிற்குள் அழைத்து உபசரித்துப் பேசுவது மிகச் சரி. ஆனால், அறிமுகமில்லாத ஒருவரை பண்பாடு என்று எண்ணி வீட்டிற்குள் அழைத்து, அமர்த்தி, உபசரித்துப் பேசுவது அறியாமையாகும்; ஆபத்தானதுமாகும்! எனவே, அறிமுகமில்லாதவர்கள் வரும்போது, வாசலுக்கு வெளியே நிறுத்திப் பேசி அனுப்புவதே இக்காலத்திற்கு ஏற்றதாகும். இல்லையெனில் கொள்ளையடிப்பவர்கள்,கொலை செய்பவர்கள் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டிவரும். தண்ணீர் கேட்பதுபோல் கேட்டு, உள்ளே வீட்டுக்காரர் சென்றதும் பின்தொடர்ந்து கொலை, கொள்ளை செய்வது தற்போது நடப்பதால், இப்பண்பாட்டை ஆளுக்கு ஏற்பப் பின்பற்ற வேண்டும்.
பகிர்ந்து உண்ணுதல்: நாம் உண்பவற்றை அருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பது ஒரு பண்பாடு. ஆனால், இன்றைக்கு அதில் மயக்க மருந்தைக் கலந்து ஆளை மயங்கச் செய்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் நடப்பதால் முன்னர் அறிமுகமில்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதையும், அறிமுகமில்லாதவர் பகிரிந்து கொடுப்பதை பெறுவதும் கூடாது. என்ன நினைப்பார்கள்! தப்பாக நினைப்பார்கள்! என்ற எண்ணங்களுக்கு இடங்கொடுத்து, ஏமாந்து பலியாகாமல், எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அறிமுகமில்லா ஒருவர் என்ன நினைத்தால் நமக்கென்ன? நான் இதை உண்பதில்லை!, நான் பத்தியம் அனுசரிக்கின்றேன், எனக்கு இது ஒத்துக் கொள்ளாது!, மிகவும் நன்றி! என்று சொல்லி பக்குவமாய் தவிர்த்துவிட வேண்டும்.
வாகனத்தில் ஏற்றுதல்: மகிழுந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது அறிமுகமில்லாதவர் உதவி கேட்டு ஏற முற்பட்டால் அதைத் தவிர்த்து நிறுத்தாமல் சென்று விடுவதே நல்லது. நாம் நல்ல மனதோடு உதவ நினைத்தாலும் உதவி கேட்பவர் எத்தகையவர் என்று நம்மால் உறுதிசெய்ய முடியாது அல்லவா? அறிமுகமில்லாதார் கேட்கும்போது பண்பாடு பாராமல் சென்றுவிடுவதுதான் சிறப்பு.
ஆபத்துக்கு உதவுதல்: ஆபத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவது பண்பாடு மட்டுமல்ல, மனித நேயமுமாகும். என்றாலும் மனிதநேய உதவிகளைக்கூட ஆராய்ந்து செய்ய வேண்டிய அவலநிலைத் தற்போது வந்துள்ளது. பெண்ணொருத்தி பிரசவ வேதனையில் தவிக்கிறாள். கொஞ்சம் வந்து உதவுங்கம்மா! என்று அழுதுகொண்டே கேட்ட ஒருவருக்குப் பரிதாபப்பட்டுச் சென்ற பெண்ணை தனியிடத்துக்கு அழைத்துச் சென்று, நகைகளைப் பறித்துக்கொண்டு கொலை செய்த நிகழ்வுகள் நடந்துள்ளன. மாரடைப்பால் தவிக்கிறார் காரில் ஏற்றுங்கள் என்று கதறிய கும்பல் பாதிவழியில் காரில் வந்தவர்களைத் தாக்கிக் கொள்ளையடித்த கொடுமையும் நடந்துள்ளது.
எனவே, மனிதநேய உதவிகளைக்கூட நன்கு யோசித்து, எச்சரிக்கையுடனும், விழிப்புடனுமே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது.
பணத்தை எண்ணாமல் வாங்குவது: நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நம்மைவிட பெரியவர்கள், உயர்நிலையில் உள்ளோர் பணத்தைக் கொடுக்கும்போது எண்ணி வாங்குவது பண்பாடல்ல என்று எண்ணி, அவர்களுக்கு நாம் மதிப்பளிப்பதை, அவர்கள் மீது நாம் அளப்பறிய நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்ட எண்ணிப் பார்க்காமல் அப்படியே வாங்கி வைப்போம்.
ஆனால், சில நேரங்களில் இது பல்வேறு அய்யங்களுக்கு இடமளித்து, நாம் நினைக்கும் நம்பிக்கை மரியாதைக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிடும். இதுபோன்ற நேரங்களில் வாங்குபவரைவிட கொடுப்பவர், வாங்குபவரிடம் நன்றாக எண்ணுங்கள் நான் சரியாக எண்ணவில்லை என்று சொல்லிவிடுவது நல்லது.