தாய்மார்களே! தோழர்களே!! குமாரராஜா அவர்களே!!!
இன்று மாலை 6 மணிக்கு இக்கூட்டம் கூட்டுவது என்று இருந்தேன். குமாரராஜா அவர்களுக்கு 6 மணிக்கு வேறு இடத்தில் ஒரு நிகழ்ச்சி அழைப்பு இருப்பதால் அதற்குப் போக வேண்டியிருப்பதை முன்னிட்டு சீக்கிரம் கூட்ட வேண்டியதாய் விட்டது. இவ்வளவு அவசரத்தில் கூட்டியும் மண்டபம் நிறைய தோழர்கள் வந்து கூடியிருப்பதைப் பார்த்தால் இம்மாதிரியான சீர்திருத்த காரியங்களில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள ஆர்வம் நன்றாய் விளங்குகின்றது.
இன்று நாம் பாராட்டக் கூடியிருக்கும் திருமணமானது தோழர் குருசாமி – குஞ்சிதம் அம்மையாரின் தங்கை தோழர் காந்தம் ஙி.கி., ஙி.ஷிநீ., பிஷீஸீ வி.நீ., அம்மையாருக்கும் செங்கல்பட்டு ஜில்லாவாசியும், செங்கல்பட்டு ஜில்லாஅசிஸ்டெண்ட் பஞ்சாயத்து ஆபீசராய் நேற்று வரை இருந்து, இன்று முதல் பொன்னேரி தாலுக்கா ஜூனியர் டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் என்ற உத்தியோகத்தில் இருப்பவருமான தோழர் சுந்தரவடிவேல் எம்.ஏ.எல்.டி., அவர்களுக்கும் நடந்த திருமணமாகும்.
ஏனைய திருமணங்களில் இல்லாத மாறுதல்
இத்திருமணத்தில் இதற்கு முன் நடந்த திருமணங்களில் நடந்திராத மாறுதல் விஷயங்கள் ஒன்றும் அதிகமாக நடந்துவிடவில்லையானாலும் இரகசியமாக நடந்தது என்பதும், சர்க்காரில் பதிவு செய்ததும் இக்கூட்டம் கூட்டினதுமல்லாமல் வேறு சடங்கும், அதாவது தாலி கட்டுதல் மாலை மாற்றுதல் முதலியவைகூட இல்லாமல் நடந்தது என்பதும் தான். மாப்பிள்ளை தொண்டை மண்டல வேளாளர் சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் கல்வியில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். சம வயதினர். இதில் நாம் எடுத்துக் கொள்ளுவது ஜாதி, கலப்பு மணம் என்பதுதான் என்றாலும் இது ஒன்றும் அதிசயமில்லை. இதற்கு முன் 20, 30 வருஷங்களுக்கு முன்னாலேயே பல இம்மாதிரி நிகழ்ந்திருக்கின்றன.
ஆதலால் அதுவும் முக்கியம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி ஜாதி கலப்பு மணம் இன்னும் சர்வசாதாரணமாக ஆக்கப்படுவதற்கு ஒரு பிரசாரத்திற்காக இதை இப்படி விளம்பரப்படுத்துகிறோம்.
உதாரணமாக சரோஜினி அம்மாள் என்கின்ற பார்ப்பன பெண்ணுக்கும், கோவிந்தராஜுலு நாயுடு என்கின்றவருக்கும் 1910-க்கு முன்பே திருமணமாகியிருக்கிறது. டாக்டர் சுப்பராயன் என்கின்ற வேளாளக் கவுண்டருக்கும், ராதாபாயம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் 25 வருடங்களுக்கு முன்பே திருமணமாகி இருக்கிறது.
தேவதாசி வகுப்பு என்பதைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் என்கின்ற பெண்ணுக்கும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.
முத்துலட்சுமி அம்மையார் தங்கை நல்லமுத்து அம்மையாருக்கும், டி.ஆர். வெங்கிட்ட ராம சாஸ்திரியார் குமாரரான ஒரு பார்ப்பனருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு சாயபுக்கும் எண்டோமெண்ட் போர்ட் பிரசிடெண்ட் நாயுடு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு அய்யங்கார் பெண்ணுக்கும் ஒரு சாயபுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஜட்ஜு குமாரசாமி சாஸ்திரியார் குமாரருக்கும், ஒரு அய்ரோப்பிய மாதுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு பார்ப்பன பெண்ணுக்கும், அருண்டேல் துரைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண்ணுக்கும், காந்தியார் (வாணியர்) மகனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
மற்றும், சில ஆதி திராவிட பெண்களுக்கும், நெல்லை சைவ வேளாள வகுப்பு ஆண்களுக்கும் திருமணம் எனது வீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்டு நடந்திருக்கிறது. சென்ற மாதத்திலும் ஒரு தேவதாசி வகுப்பு ராஜம் என்னும் பெண்ணுக்கும் சம்மந்தம் என்னும் ஒரு சைவ பண்டிதர் மகனுக்கும் திருமணம் நடந்தது.
கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையா?
ஆகவே, கலப்பு மணமோ உயர்வு – தாழ்வு ஜாதிமணமோ இக்காலத்தில் ஒன்றும் அதிசயமல்ல என்பது எனது அபிப்பிராயம். எனக்குமுன் பேசிய பல பெரியார்கள் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு நானும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்பதையும், நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நாம் செய்வதெல்லாம் இவற்றை விளம்பரம் செய்து மற்றவர்களையும் இதை பின்பற்றும்படி செய்ய ஆசைப்படுவதையும் தவிர வேறில்லை. கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படி செல்லாது என்றும் சொல்வதுகூட சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டாலோ, அல்லது பார்ப்பன ஆணைக் கலியாணம் செய்து கொண்டாலோ மாத்திரம்தான் செல்லாதாம். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப்பற்றிய சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம்.
இந்துலா என்பதில் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி கலந்து போகக் கூடாது என்பதற்காக ஏனெனில் தாங்கள் மற்ற ஜாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்காக தங்களைப் பொறுத்த வரையில் வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் சொத்து பாத்தியமில்லை என்று செய்து கொண்டார்கள். ஆதலால் நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை.
பெரியதொரு வெற்றி
நாம் கோருவதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை இம்மாதிரி அதாவது சரியான நல்ல ஜோடி சேர்க்கத்தக்க வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். குமாரராஜா அவர்களும் இதற்கெல்லாம் சுயமரியாதை இயக்கமும், நானும்தான் காரணம் என்றார். அவர் கலப்பு மணத்தைப் பற்றி மாத்திரம் அல்லாமல் செலவு சுருக்கத்தைப் பற்றியும், நாள் சுருக்கத்தைப் பற்றியும், ஆடம்பரம் ஒழிப்பு பற்றியும் சொன்னார். அவைகளுக்காக சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு வருவது உண்மைதான். அதை குமாரராஜா அவர்கள் ஒப்புக்கொண்டு ஆதரித்தது நமக்குப் பெரியதொரு வெற்றியாகும்.
ஏனெனில் அவர் பெரிய செல்வவான். செல்வவான்கள் சிக்கனமாகவும், ஆடம்பரமில்லாமலும் நடத்தினால்தான் அது வழிகாட்டியாகும். ஏழைகள் சிக்கனமாக நடத்துவது அதிசயமாகாது. ஆகவே சிக்கனத்தைப்பற்றி நான் பேசுவதைவிட அவர் பேசுவது மிகவும் சிறந்ததாகும்.
வள்ளல் சிவஞான தேசிகர் அவர்கள் நமது முறையைப் போற்றிப் பேசி என்னையும் புகழ்ந்து கூறி இதுதான் பழந்தமிழர் முறை என்று கூறினார். அவர் பெரிய கல்விச் செல்வம் படைத்தவர். அவர் கூறியவற்றை, என்னைப்பற்றிக் கூறியதைத் தவிர, மற்றவைகளுக்காக நான் நன்றி செலுத்துகிறேன்.
நான் ஒருவன் இல்லாவிட்டால் தமிழர் உலகமே முழுகிப் போயிருக்குமென்றார். அதற்காக நான் பெருமைப்படவில்லை. அவரது அன்பு அப்படி சொல்லச் செய்தது. ஆனால் அவரைப்போலவே என்னைப்பற்றி அதற்கு விரோதமாக அவதூறாகப் பேசுவதையும் கேட்கிறேன். ஆதலால் இரண்டையும் சரி செய்து விடுகிறேன். அதாவது என்னாலேயே தமிழர் சமுதாயம் மாத்திரமல்லாமல் மனித சமுதாயமே பாழ் ஆகி விடுகிறதென்றும், தங்கள் கடவுள்கள் ஒழிகின்றதெனவும் குறைகூறப்படுகின்றன என்றும் இனி சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதாயும் பலர் சொல்லுவதையும் நான் காதில் கேட்கிறேன். இங்கு இவ்விடத்திலும், அம்மாதிரி எழுதிய சில கேள்வித்தாள்களை இதோ என் கையில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எதிரில் நின்று பேசாமல் கோழைத்தனமாக எழுதி மேஜையில் வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இதோ அதில் கையொப்பமிட்டவர்கள் பெயரைக் கூப்பிடுகிறேன். தைரியமாக வந்தால் அவர்களது கேள்விக்கு சமாதானம் சொல்ல வணக்கத்தோடு நிற்கிறேன்.