Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் பெருமைகேட்டு அமெரிக்க அரங்கத்தில் ஆரவாரம்!

கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் தலைமையில் ஆர்த்தெழு நீ! என்ற பொதுத் தலைப்பில் அமைந்த கவியரங்கத்தில், சமத்துவம் காண, பெண்ணியம் பேண, மேற்குலகு நாண, பகுத்தறிவு பூண, உறவுகள் செழிக்க, இன நலம் தாங்க, மொழி வளம் ஓங்க, சுற்றுச்சூழல் கேடு நீங்க ஆகிய தலைப்புகளில் அமெரிக்க வாழ் தமிழ் ஆர்வலர்கள் கவிதையை சிறப்பாக வழங்கினர்.

பகுத்தறிவு பேண எனும் தலைப்பில் கவிதையைச் சிறப்பாக தந்த தமிழரை பாராட்டிய பேராசிரியர் அப்துல் காதர், தனது கருத்தில்,  எத்தனையோ தலைவர்கள் இந்தியாவில், தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் பகுத்தறிவு என்றதும் ஒரே ஒரு உருவம்தான் நம் முன் வரும். அவர் யாரென்றால், மாடியை ஒதுக்கிய, கோடியை ஒதுக்கிய, தலைவர்கள் மத்தியில், தனக்குக் கிடைத்த அத்தனையும் மறுத்து, தாடியை மட்டும் ஒதுக்கிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான் அந்த தலைவர் என்று கூறியது, அரங்கத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் கையொலி முடிய சில மணித்துளிகள் ஆனது

தமிழ் விழா என்கிற பெயரில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்தாமல், கருத்தரங்கம், கவியரங்கம், இலக்கிய போட்டி என உணர்வுகளை அசைபோட வைக்கும் விழாவாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல தமிழ் குடும்பங்களும் பங்குகொண்ட பெருவிழாவாக அது மிளிர்ந்தது.

(வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் கலிபோர்னியா மாநிலம் சான்ஓசே நகரில் ஜூலை 3, 4 தேதிகளில் நடந்த நிகழ்வின்போது…)