சாலை விதிகள் என்பவை நம் உயிரை மட்டும் அல்ல நம்மோடு பயணிக்கின்றவர் உயிரையும் காப்பாற்றக் கூடியவை. தனிமனிதத் தவறுகளில் அதைச் செய்கிறவனை மட்டும் பாதிப்பவை சில. ஆனால், பல தவறுகள் செய்யாத மற்றவர்களையும் பாதிக்கும். சாலை விபத்துக்கள் இரண்டாம் வகையில் சேரும்.
முறையாக சாலை விதியைப் பின்பற்றிச் செல்கின்றவர் எதிரிலோ, அருகிலோ, பின் தொடர்ந்தோ பயணிக்கக் கூடியவர் விதிகளை மீறிச் செயல்பட்டால், மீறியவருக்கு மட்டுமின்றி விதிப்படி நடந்து கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் சேதம், உறுப்பு சேதம், உயிர் சேதம் இருவருக்கும் எற்படுகின்றது. எனவே, நமக்காக இல்லையென்றாலும் மற்றவர்களுக்காகவாவது சாலை விதிகளை நாம் மிகச் சரியாகப் பின்பற்றி நடக்க வேண்டும்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோரால் விபத்துக்கள் பெருமளவு நடக்கின்றன. என்பதால், அவர்கள் விதிகளை மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதோடு, தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஓட்டிச் செல்பவர் மட்டுமின்றி, உட்கார்ந்து செல்கின்றவர்களும் அணிய வேண்டியது கட்டாயம்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் போது நேரடியாக தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள். குறிப்பாக தலை முதலில் அடிபடும். எனவே, தலைக்கவசம் அவர்களைப் பொருத்த வரை உயிர்க்கவசம்! எனவே, தான் பின்னிருக்கையில் இருப்போருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத் தக்க நல்ல முடிவு. என்றாலும், இதை அமுல்படுத்தும்போது சில விதிவிலக்குகள் தேவை!
தலைக்கவசம் தரமானதாக மிஷிமி தர முத்திரை பெற்றதாக அணிய வேண்டியது கட்டாயம். தலைக்கவசம் அணிவது சார்ந்து சில அய்யங்களும் குழப்பங்களும் இருக்கிறது. அவை தேவையற்றது.
மயிர் கொட்டி விடும் என்று பலர் எண்ணுகின்றனர். அது மிகைப்படுத்தப்பட்ட செய்தி மயிரா? உயிரா? பகுத்தறிவோடு முடிவெடுக்க வேண்டும். பெரும்பாலும் இளைஞர்கள், புதிதாக மணம் புரிந்தோர் சிறு குழந்தைகளின் தந்தை இவர்களே, இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். இவர்கள் இழப்பு அக்குடும்பத்தையே நிலை குலையச் செய்து, எதிர்கால வாழ்வை இருண்டதாக்கி விடும். எனவே, கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அது வேகத்தையும், முந்திச்செல்லும் முனைப்பையும், சந்து பொந்து இண்டு இடுக்கு என்று நுழைய முற்படுவதையும் தவிர்க்க வேண்டும்!