காவிரியில் கழிவு நீர்! ஓரணியில் எதிர்க்க வேண்டும்!

ஜூலை 01-15

காவிரியில் கழிவு நீர்!

ஓரணியில் எதிர்க்க வேண்டும்!

– ஒளிமதி

ஒரு நதி உற்பத்தியாகி ஓடிவரும்போது அது உற்பத்தியாகும் இடம் யாருக்கு உரிமையோ அவர்கள் அதை முழுமையாக உறிஞ்சி, நதி செல்லும் அண்டை மாநிலங்களை வஞ்சிப்பது என்பது மோசடிச் செயலேயாகும்! இங்கு இரண்டு முதன்மைக் கருத்துக்களைச் சிந்திக்க வேண்டும்.

(அ) வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டோடும்போது அதைத் தங்கள் மாநிலத்திலே நிறுத்திச் சேதத்தை ஏற்பார்களா? அப்போது எவ்வளவு முன்னெச்சரிக்கையாகத் திறந்து விடுகிறார்கள்! அதே உணர்வு, அதே துடிப்பு, அதே வேகத்துடன் அழிவைத் தாங்கும் மாநிலங்களுக்கு பாசனத்திற்கும், பருகுவதற்கும் நீர் தர வேண்டியது நதியின் தலைப்பில் உள்ள மாநிலத்தின் கட்டாயக் கடமையாகும். அவ்வாறு விடச் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். இங்கு அரசியல் பண்ணுவது மனித விரோத செயல் மட்டுமல்ல, அரசமைப்பிற்கும் எதிரானதாகும்.

(ஆ) ஒரு நதி எவ்வளவு தூரம் எங்கெங்கு ஓடிச் செல்கிறதோ அதன் அளவைக் கருத்தில் கொண்டே நீர்ப் பகிர்மானம் செய்ய வேண்டும். நதித் தோன்றும் இடம் என்ற ஒரே காரணத்திற்காக தலைப்பிலே தடுத்து தங்களுக்கே என்று அபகரிப்பது அநீதி மட்டுமல்ல அடாவடிச் செயலுமாகும். காவிரி  கர்நாடகத்தில் தோன்றினாலும் அதன் பெரும்பகுதி தமிழகத்தில்தான் இருக்கிறது. தொன்மைக்காலம் முதல் அந்த நதி தமிழர்க்கு உரியது. தமிழ்மொழி திரிந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பிரிந்தபின் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழிவாரி மாநிலங்கள் உருவானபின், நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வற்று, சொத்துக்காகக் கொலை செய்து கொள்ளும் பங்காளிகளைப் போல் நதி நிர் உரிமையில் நடந்துகொள்வது வஞ்சகப் போக்காகும். இது உடனடியாகத் திருத்தப்பட்டு, அவரவர்குரிய உரிமை நியாயமாக நிலைநாட்டப் படவில்லை யென்றால் இந்தியாவின் ஒற்றுமை உடைந்து போவது உறுதி! இதற்கு கண்டுங்காணாமல், கண் துடைப்பு வேலைகளைச் செய்து, கட்டாயக் கடமை மறந்து காலங்கடத்தும் மத்திய அரசே முழுப்பொறுப்பு ஆகும்; குற்றவாளியும் மத்திய அரசே என்பது உண்மையாகும்!

அணை வழிந்தால்தான் அண்டை மாநிலங்களுக்கு நீர் என்பது அநீதியின் உச்சம் ஆகும். இதுதான் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் மத்திய அரசு அதைச் செயல்படுத்தி தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீர் கிடைக்கச் செய்யாமல், அரசியல் ஆதாயத்திற்கு காலங்கடத்துவது இறையாண்மையுள்ள அரசுக்கு அழகல்ல. மாறாக, அரசியல் ஆதாயம் பெற அநியாயத்திற்குத் துணைபோகும் அற்பத்தனமாகும். அதை எந்தக் கட்சி செய்தாலும் அது இந்த அவலத்துக்குரியதே யாகும்!

பாசனத்திற்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகம் தவிக்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் போன்ற வளமான பகுதிகள்கூட வறண்டு, வறுமையில் உழலும் நிலையில், குடிநீருக்குக் கிடைத்துவந்த குறைந்த அளவு நீரிலும் சாக்கடைக் கழிவை திறந்துவிடுவது துரோகம் என்பதா? மனிதாபமானமற்ற செயல் என்பதா? மொழிவெறி என்பதா? விரோத மனப்பான்மை என்பதா? அயோக்கியர்கள்கூட செய்யத் துணியாத ஒரு அநியாயத்தை அரசு தடுத்து நிறுத்தாமலிருப்பது மோசமான நிலை! இது வன்மையான கண்டனத்திற்குரியதல்லவா?

ஒரு மாநிலத்து மக்கள் மற்ற மாநிலத்தில் இலட்சக்கணக்கில் கலந்து வாழும் நிலையில், இப்படிப்பட்ட வஞ்சகச் செயல்கள் மனித விரோதச் செயல்கள், மாநில மக்களிடையே பெரும் மோதலையும், வெறியையும், விரோதத்தையுமே உருவாக்கும். அது பெரும் அழிவிற்கே அழைத்துச் செல்லும்.

தவறு செய்யும் மாநிலம் திருத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு உடன் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தேசிய ஒருமைப்பாடு என்பது நிச்சயம் நிலைக்காது. அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக தேச ஒற்றுமையைச் சிதைப்பதும், மனித நேயத்திற்கு எதிரான, மக்கள் உரிமைக்கு எதிரான; அரசமைப்பிற்கு எதிரான செயல்களில் மத்திய மாநில அரசுகள் செயல்படுமேயானால், மக்கள் அதைவிட மோசமாக இறங்கிச் செயல்படுவதை எப்படி தடுக்க இயலும். மத்திய அரசு மனித உரிமையை காக்கின்ற வகையில், தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் முறையில், அரசமைப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் முன்மாதிரியாக நடந்து காட்டவேண்டும். காவிரிப் பிரச்சினையில் காலம் தாழ்த்தாது காட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

மத்திய அரசை நெருக்கி தமிழகத்தின் உரிமையைப் பெற வேண்டியது, காவிரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டியது தமிழக பா.ஜ.க. கட்சியின் கட்டாயக் கடமையாகும். தமிழக அரசியல் கட்சிகள் இதில் ஒன்று சேர்ந்து தீவிரமாகச் செயல்பட வேண்டியது உடனடித் தேவையாகும்!

————–

காவிரி நீர் என்பது தமிழக மக்களின் உயிர்நாடிப் பிரச்சினை; வாழ்வாதாரப் பிரச்சினை! அந்த நீரில், கர்நாடகா பெங்களூருவில் உள்ள குடியிருப்புகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு நீர் வடிகால் வழியாகக் காவிரியில் திருப்பிவிடப்படுவதால் கழிவுநீர் கலக்கும் நிலை வந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 148 கோடி லிட்டர் கழிவு நீர், காவிரியில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பாழாகும் என்பதோடு, தமிழகத்தின் குடிநீர் ஆதாரம் கெட்டுச் சீரழிந்து குடிநீர் பஞ்சம் உச்சத்திற்குச் செல்லும் கேடு உள்ளது.

கர்நாடக தலைமடையில் உள்ளது. அவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. தமிழகம்தான் கழிவுநீரில் ஒட்டுமொத்தப் பாதிப்பையும், கேட்டையும் அனுபவிக்க வேண்டும். எனவே, தமிழர்கள் கட்சிபாகுபாடின்றி விழிப்போடு ஒன்று சேர்ந்து போராடி இந்தக் கேட்டை தொடக்கத்திலேயே துடைத்தெறிய வேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் இதில் தீவிரங் காட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *