ஆசிரியர் பதில்கள்

ஜூலை 01-15

கேள்வி : சுயமரியாதைச் சுடரொளி பெரியாரின் கொள்கை வழிக் குணக்குன்று நம் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்களுக்கு, உடல்நலக் குறைவு என செய்தியறிந்து மனம் வெதும்பினேன். அவரைப் பற்றி சில வரிகள்?
_ தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : நம் இனமானப் பேராசிரியர் 94ஆவது வயதில் உள்ளவர்; இயல்பான முதுமை என்றாலும் உற்சாகத்துடன் நல்ல நினைவாற்றலுடன் அவ்வளவே! உள்ளார். கவலை வேண்டாம். கலைஞரும் பேராசிரியரும் நூற்றண்டுக்கு மேல் வாழுவார்கள்.

கேள்வி : மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தொடர்வது எதனைக் காட்டுகிறது? _ வெங்கட.இராசா, ம.பொடையூர்

பதில் : மாணவர்கள் அவ்வளவு மென்மை உணர்ச்சி (Sensitive) ஆக இருக்கக் கூடாது. தேர்வில் தோல்வி என்றால் வாழ்க்கையும் தோல்வியாகி விடாது _ தன்னம்பிக்கையை மாணவர்களிடையே, உருவாக்க பாடத்திட்டம் _- பகுத்தறிவு மூலம் அறிவியல் மனப்பான்மையை ஊட்டவேண்டும். அப்படிச் செய்தால் கோழைகளாக அவர்கள் மாற மாட்டார்கள்.

கேள்வி : மோடியின் உள்நோக்கம் அமெரிக்காவுக்கு புரியம்போது, இங்குள்ள இந்தியர்களுக்கு புரியவில்லையே ஏன்?
_க.தமிழ்க்குடிமகன், மதுராந்தகம்

பதில் : இப்போது இருக்கும் மயக்கம் தெளிந்து, புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.

கேள்வி : பஞ்சாபில் பாலியல் தொல்லைக்கு பலியான மாணவி பிரச்சினையில் பஞ்சாப் அமைச்சர் இது கடவுளின் செயல் யாராலும் தடுக்க முடியாது என்று கூறியிருப்பது பற்றி? – ம.திருவள்ளுவன், கடலூர்

பதில் : 1. கடவுள் போதை எப்படிப்பட்ட மனித நேய விரோதி என்பதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. 2. கடவுள் அப்படிச் செய்தால் அந்தக் கடவுளைவிட மனிதனுக்கு விரோதி வேறு யார்?

கேள்வி : போலீஸ் கமிஷனர் முதல் காவலர்கள் வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சந்திப் சக்சேனா கூறியுள்ளது நம்பத் தகுந்ததா? – வே.செந்தமிழன், காஞ்சி

பதில் : உண்மைக்கு மாறான தகவல் அப்படி ஒரு மாயத்தோற்றம்! அவ்வளவே!

கேள்வி : இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏதேனும் முக்கிய மாற்றம் வேண்டும் எனில் தாங்கள் எதை முதன்மையாகக் குறிப்பிடுவீர்கள்?
_ நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : தேர்தல் சட்டங்கள் அடியோடு மாற்றப்பட்டாக வேண்டும் _- லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.

கேள்வி : சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவதேன்? – மா.கன்னித்தாய், செங்கை

பதில் : ஆளுங்கட்சியின் ஒரு சார்பு அட்டகாசப்போக்கு அகிலம் அறிந்த ஒன்றாகுமே என்ற அச்ச உணர்வு ஒருவேளை காரணமாக இருக்கலாம்!

கேள்வி : தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு மாறாக, இடதுசாரிக் கட்சிகள் சென்னை இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு மேற்கொண்டதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?
_ வே.கண்ணதாசன், சென்னை

பதில் : எதிர்க்கட்சிகளின் பொதுமுடிவாக அது இருந்திருந்தால் மட்டுமே இக்கேள்வி எழமுடியும்; நடைமுறையில் அப்படி இல்லையே.

கேள்வி : அம்மையாரின் மேல்முறையீட்டு மனுவை மூன்றே மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமென்று அதிரடியாய் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் _ கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் அதே அளவுகோலைப் பயன்படுத்துமா? ஆரியம் வெட்கம் அறியாது என்பதற்கொப்ப, அம்மையாரின் எஞ்சிய பதவிக்காலம் முழுமையும் இழுத்தடித்து பூணூல் பாசத்தை காட்டிக் கொள்ளுமா?
_ சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : நீதி தேவன்கள் மயக்கம் பாகம்_2 இனி எழுதலாம்; நடிக்கலாம்!

கேள்வி : பாண்டிச்சேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அம்மாநில முதல்வர் தீப ஆராதனை செய்துள்ள பைத்தியக்காரத்தனம் குறித்து?
_ வீ.தமிழ்மாறன், பெரம்பூர்

பதில் : தாங்களே எழுதிவிட்டீர்களே அதே _- விடையை! பைத்தியக்காரத்தனம்தான், அப்பா பைத்தியசாமி பக்தர் ஆயிற்றே அவர்.

கேள்வி : தி.மு.க.வின் தொடக்க உரையை நான் எழுதிவிட்டேன். முடிவுரையை எனது தம்பி கருணாநிதி எழுதுவார் என, நாவலர், பேராசிரியர் போன்றோர் இருக்க, அன்று அண்ணா அவர்கள் இவரை மட்டும் குறிப்பிட்டுக் கூற காரணம் என்ன?
_ கா.திராவிட முரசு, திருவள்ளூர்

பதில் : இதற்கு பேராசிரியரே பலமுறை பதில் அளித்துள்ளாரே!

கேள்வி : அமெரிக்காவில் நீக்ரோக்களும் _ வெள்ளையர்களும் கைகோர்த்துச் செல்வதுபோல, இங்க பார்ப்பனரும் திராவிடரும் கைகோர்க்க முடியாதது ஏன்?
_ நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : வர்ணாசிரமம் மிகவும் ஆழமானது – மற்ற குணப்படுத்தும் வியாதி போன்றதல்ல – ஜாதி, தீண்டாமை பிறவிப் பார்ப்பனக் கொடை அதனால் அது எளிதல்ல. மீறி நடந்தால் நல்லது.

கேள்வி : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு அவர்கள், கடவுளின் பெயரால் மக்களை முட்டாளாக்க முயற்சி செய்யாதீர்கள் என காட்டமாகக் கூறியிருக்கிறாரே! இதுகுறித்து தங்கள் கருத்தென்ன?
_ சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : திருமதி. குஷ்பு அவர்கள் ஒரு நாத்திக மனிதநேயர், மனதில் பட்டதை யாருக்காகவும் மறைத்துப் பேச தெரியாத துணிச்சல் பெண்மணி. அதனால்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *