திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் – தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க – தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் – தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? – தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! – திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் – மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் – திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று – திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! – முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
-(குயில், 15—07-1958)