”பெரியார் 1000′ போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் சிறப்புச் சுற்றுலா மாட்சிகளும் – காட்சிகளும்

ஜூலை 01-15

”பெரியார் 1000′ போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள்

சிறப்புச் சுற்றுலா மாட்சிகளும் – காட்சிகளும்

தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை மய்யமும், பெரியார் பிஞ்சு மாத இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா-விடை போட்டியில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவர்கள் டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

பெரியார் 1000 தேர்வின் மாட்சிகள்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு (2014) தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளிலும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் ஒரு பிரிவும், 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பிரிவும் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. சிந்தனைச் சோலை பெரியார் என்னும் புதிய புத்தகத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டன.

100% மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ – மாணவியர் 9 பேர். இதிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்

மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாக்களில் வழங்கப்பட்டன. மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு டில்லி சுற்றுலாவும் விமானப் பயணமும் பரிசாக அளிக்கப்பட்டன.

அந்த மாணவர்கள் டில்லியிலுள்ள பெரியார் மய்யம்,  ஆக்ரா கோட்டை, தாஜ்மகால்,  குதுப்மினார், டெல்லியில் பிரமோஸ் ஏவுகணைத் தளம், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி அய்.அய்.டி. ஆகிய இடங்களை ஆர்வத்தோடு பார்வையிட்டனர். இந்தியாவின் முக்கிய அறிவியல் அறிஞர்களுள் ஒருவரான முனைவர் ஏ.சிவதாணுபிள்ளை அவர்களையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் அவர்களையும் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று உரையாடி மகிழ்ந்தனர்

பின்னர் 25.05.2015 அன்று இரவு 10 மணியளவில் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் அறிவியல் அறிஞர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களை டில்லியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். மாணவர்களிடம் பல்வேறு செய்திகள் குறித்து ஆர்வத்துடன் உரையாடினார். இந்த சந்திப்பு புதுடில்லியிலுள்ள அப்துல்கலாம் இல்லத்தில் நடைபெற்றது. அப்துல்கலாம் அவர்கள், தொடர்ந்து குழந்தைகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். பெரியார் குறித்து என்ன அறிந்துகொண்டீர்கள்? என்றும் ஆர்வத்துடன் கேட்டார்.

பெரியாரின் பணி இந்த சமூகத்திற்குப் பயன்பட்டது; அப்படியொருவர் இந்த சமூகத்திற்கு பெரிதும் தேவைப்பட்டார் என்று மாணவர்களிடம் தனது கருத்தையும் பரிமாறிக் கொண்ட மேதகு அப்துல்கலாம் அவர்கள், அறிவைத் தேட பெற்றோர் உதவவேண்டும் என்றார். மேலும், மாணவர்களுக்குப் பிடித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் குறித்து அனைவரிடமும் கேட்டார்.  தோட்டத்தில் மாணவர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் மேனாள் குடியரசுத் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு அவரிடம் பிரியா விடைபெற்றனர்.

மாணவர்களுடன், இப்பயணத்தை ஒருங்கிணைத்த பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் ஹேமலதா, பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகிய இருவரும் இச்சந்திப்பில் உடன் இருந்தனர். மாணவர்களின் இந்த அறிவுச் சுற்றுலா தொடங்குவதற்கு முன்பிருந்தும், இறுதி வரையிலும் இந்தப் பணிகளை  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் திட்டமிட்டு ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்கள் 28.05.2015 அன்று விமானம் மூலம் டில்லியிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் சென்னை திரும்பினர். அவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை மய்யம், பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மனம் திறந்த மாணவர்கள்

மாலை 4 மணியளவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி  அவர்களை சென்னை பெரியார் திடலில் தங்கள் பெற்றோர்களுடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பெரியார்  மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் பெரியார் பிஞ்சுகளிடம் பயணம் குறித்து விசாரித்தார். பிஞ்சுகளுடன் உரையாடும்போது, நன்றாகப் படிப்பதுடன் நன்றாக உடல்நலம் பேணி, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் பெற்று சிறப்பாக வரவேண்டும் என்று கூறினார். பிஞ்சுகளைப் பாராட்டிய பல்கலைக் கழக வேந்தர் அவர்கள், பெரியார் பிஞ்சு, இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?, மாணவர்களுக்கு… மற்றும் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை ஆகிய  நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்  திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், கலை இலக்கிய அணி மாநிலத் தலைவர் மஞ்சை வசந்தன், பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ஹேமலதா மற்றும் பிஞ்சுகளின் பெற்றோர்களும் உடனிருந்தனர். கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பினால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் மிகுந்த மன நிறைவுடன் ஊர் திரும்பினர். மேலும் இதன் விரிவான செய்திகளையும், ஒளிப்படங்களையும் http://periyarquiz.com/ இல் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *