நூல்: வருணாசிரம தருமமும் வாய்மொழியும் வள்ளுவமும்
ஆசிரியர் : தி.முருகரத்தனம்
வெளியீடு : தமிழ்ச்சோலை,
5, தெற்குத் தெரு 3, அறவாழி நகர், பல்கலை நகர்க் கிழக்கு, மதுரை – 625 021.
தொலைப்பேசி: 0452- 2459195 பக்கங்கள்: 185 விலை: ரூ.55
வருணாசிரம தருமம் = தமிழரின் வீழ்ச்சி
கி.மு.1500 ஆண்டளவில் _3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் புலம் வந்தேறிய ஆரியரின் முதல் நூல்கள் கி.மு.800க்கு முற்பட்டவை. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு தொகை நூல்கள்; தனித்தனிப் பாக்களாக உரைநடை கலந்து பாடப்பட்டவை. தீக்குண்டம் வளர்த்து உயிர்ப்பலி சொரிந்து யாகம் செய்து வருணன், ருத்திரன், இந்திரன் முதலிய தேவரிடம் வளம் வேண்டியும் துணை வேண்டியும் இயற்றப்பட்டவையே இப்பாக்கள். இவற்றின் விளக்கமாகப் பின்னர் பிராமணங்கள் என்னும் விளக்க உரைகள் தோன்றின. வாழ்க்கை பற்றி, உயிர் பற்றி, அதன் வருகை போக்குப் பற்றி எண்ணற்ற வினாக்களோடும் அய்யங்களோடும் அடுத்த உபநிஷதங்கள் எனப்படுபவை தோன்றின.
மூவேதங்களில் பரவலாகப் பேசப்படும் கருத்துகள் யக்ஞம் செய்தல் பற்றியது ஆகும். யக்ஞம் என்னும் யாகங்களால் வானகத்து வையகத்துத் தேவர்களின் துணை பெறலாம்; வேண்டாதோரை வெல்லலாம்; பார் முதல் அண்டத்தை அடக்கலாம்; வான் பெயல் ஒல்லும்; வையம் வளம் வழங்கும்; மக்கள் நலம் மல்கும். மந்திர தந்திரங்கள் போன்று இவை தோன்றுகின்றன. உண்மையும் அதுவே. சாம அதர்வண வேதங்கள் இப்படிப் பேசுகின்றன. வேத மறைமொழி தானே மந்திரம் என்பர்.
வேதங்களின் பிறபகுதிகள் மாந்தரது உயிரின் இயல்பு, பார் முதல் அண்டத்தின் இயல்பு, இவற்றின் தோற்றம் படைப்பு பற்றியெல்லாம் விளக்கம் தர முயல்கின்றன. இயற்கை இறந்த நிகழ்வுகளைப் பேசுகின்ற காரணத்தால் இவை சமயமாக உருக்கொண்டு விட்டன. உடன் சமயங்களுக்கான ஈர்ப்பு, காப்பு, போற்றலும் தோன்றின. வைதிக சமயம் தோன்றியது.
இவ்வேத காலத்தில் தான் வருணாசிரம தருமம் என்னும் சமூகக் கொள்கை உருவாக்கப்பட்டது. யாகங்கள் பெருவாரியாக நடைபெற்றன. யாகங்களின் வழி அண்டத்தின் இயல்பைக் காணலாம், கட்டுப்படுத்தலாம் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. யாகங்களை நடத்தப் புரோகிதப் பிராமணர் அமைந்திருந்தனர். வாழ்க்கைக்கு வேண்டிய விழவு இழவுச் சடங்குகளை _ புனிதப் பணிகளை -_ நடத்தவும் இப்புரோகிதர் தயாராகினர். குறுநில ஆள்நரும் இருந்தனர். பல வேறு தொழில்களில் ஈடுபட்டு வைய வாழ்க்கைக்கு வேண்டி உழைப்பினைத் தந்து செல்வத்தையும் பல்பண்டங்களையும் படைக்கும் தொழிலாளரும் உணவுப் பண்டங்களை விளைவிக்கும் தொழிலாளரும் இருந்தனர்.
உழைக்கும் மக்களால் தோன்றிய பல்பண்டங்களைப் பரிமாற்றம் செய்யும் வகையினரும் உண்டாயினர். இவ்வாறு மக்கள் வாழ்வில் நான்கு குழுவும் அமைந்தன. இவையெல்லாம் _ இவர்கள் எல்லாரும் _ சமூக வாழ்க்கைக்குத் தேவைதான். இவர்கள் ஆரியர் அல்லாத பிற இனத்தவராயும் பிற நிறத்தவராயும் இருந்தனர்.
இத்தகைய மாந்தர் வாழ்க்கையில் புனிதம் என்னும் சமயக் கொள்கை இணைக்கப்பட்டது. புகுத்தப்பட்டது. பிராமணரின் புரோகிப் பணி புனிதமாகக் கொள்ளப்பட்டது. மற்றவை புனிதம் குறைந்தவை என்றோ புனிதம் அற்றவை என்றோ கொள்ளப்பட்டன. வைய வாழ்க்கைக்கு வேண்டிய பல்பண்டங்களைப் படைத்தல் பொருட்டு அவ்வாழ்வில் அமிழ்ந்து சிக்குண்ட மக்கள் புனிதத்தில் தாழ்ந்தோராகக் கொள்ளப்பட்டனர். இதனால் மாந்தரிடையே உயர்வு தாழ்வு என அடுக்குகள் வகை பெற்றன. இந்த மன்பதை நிலை _ சமூக நிலை _ சமயமுமாக அமைக்கப்பட்டது.
நால்வருணம், மேல்வருணம், கீழ்வருணம் என இரண்டாகியது. மேல்வருணம் இருபிறப்பாளர் எனவும் கீழ்வருணம் ஒரு பிறப்பாளர் எனவும் ஆகின. இருப்பிறப்-பாளராவர், பிராமண சத்திரிய வைசியர். இவர்கள் புரிநூல் அணிந்து புனிதம் பெற்றுத் _ தீட்டு நீங்கி _ இரண்டாம் பிறப்புப் பெறுவர்.
ஒரு பிறப்பாளர் _ சூத்திரர் பிற இனத்தவர். தமிழகத்தில் வேளாளர் புனிதம் பெறாது தீட்டுடன் திகழ்வர். முப்புரிநூல் _ பூணூல் _ அணியவும் புனிதம் பெறவும் இவர்களுக்கு உரிமை இல்லை. மேல்வருண முப்புரிநூல் மூவர், மூவேதங்களை ஒத்தவர், மூவுலகங்கள் போன்றவர்; முக்குணங்கள் கொண்டவர். மும்மை மும்மையாக விளங்கும் அண்ட-கோளங்களின் இயற்கையில் மேல் வருணத்தார் மூவராயினர். இவ்வருணதருமம் படைப்புக்-காலம் தொட்டுப் பகவத் விஷயமாகவே கருக் கொண்டது. நால்வருணத்தாரையும் பிரஜாபதி என்னும் மக்கள் தெய்வம் தன் தலையிலிருந்தும் தோளிலிருந்தும் தொடையிலிருந்தும் பாதத்திலிருந்தும் படைத்தது என்பதைப் பண்டை ஆரியர் ரிக் வேதமே சொல்-கிறதல்லவா! ஆதலால் வருணம் புனிதம் பெற்றது, மாறுதலும் இல்லாதது, மாற்றலும் ஒல்லாதது, மாற்றினால் பொல்லாதது. இவை எல்லாம் மநுநீதி, முதல் மனுஷ்யன் நீதி, சநாதந தருமம், இந்து தருமம்.
வருண வகுப்புகளோடு பிரமசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வாழ்க்கை நிலைகளும் இணைக்கப்-பட்டன. வருணதருமம் வருணாசிரமதருமம் ஆனது.
புனிதம் என்பது சுத்தம், தெய்வாம்சம். இவற்றுக்கு எதிர் சொற்கள் பாவம், அசுத்தம், அழுக்கு, தீட்டு, நீசம் என்பவை.
புனிதம் பாவம், உயர்வு தாழ்வு, மெய்யுழைப்பும் பிறர் பிழைப்பும் என்பவையே வருணாசிரம தருமம். உழைப்பும் பிழைப்பும் என்பது தொழில்கள் ஜாதிகளுடன் இணைக்கப்-பட்டது என்பதாகும். இவையே இந்து சமயத்தின் உள்ளார்ந்த மெய்மைகள். இவற்றோடு ஆன்மா, வினைகள் (கருமம்), பல்பிறப்பு, வீடு(மோட்சம்) என்னும் எண்ணக்-கோள்களும் ஆங்காங்கே கைக்கொள்ளப்பட்டுப் பின்னப்பட்டன. இவற்றால் சநாதந இந்துசமயம் _ வைதிக சமயம் _பிராமணீயம் _ நியாய பீடத்தில் அமர்ந்தது, அமர்த்தப்பட்டது. அவரவர் நல்வினை தீவினைகளே வருணதருமத்திற்குக் காரணங்கள் எனக் கற்பிக்கப்பட்டன. வருணாசிரம இந்துசமயத்தின் இயக்குநர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் பிராமணர்களே. அவர்களே இந்து சமயத்தின் கட்டிக்காப்பாளர்கள். இந்த இந்து சமயத்தின் இருப்புப் பெட்டகங்கள் வேதங்கள், உபநிடதங்கள், கீதைகள், இதிகாசங்கள், புராணங்கள், தருமசாத்திரங்கள், மநுதரும சாத்திரம் இவற்றின் சட்ட நூல்.
இந்த எண்ணப்பின்னல்கள் எல்லாம் வேதத்தில் உள்ளனவாகவும் வேதத்திற்கு உரியனவாகவும் வேதங்கள் அநாதி, பிரம்-மாவால் இயற்றப்பட்டு வழங்கப்பட்டன எனவும் கற்பிக்கப்பட்டன. ஆதலால், வேதங்கள் புனிதம் பெற்றவை ஆகிவிட்டன; புனிதம் கெடாது காக்கப்பட வேண்டியவையாகவும் ஆகிவிட்டன. முன்னர்த் தோன்றிய நான்கு வேதத் தொகுதிகளையும் ஆரியர் எழுத்துருவத்திற்குக் கொண்டு வரவில்லை. அவை எழுத்துருவம் பெற்றால் அவற்றை ஆரியர் அல்லாப் பிறர் அறிந்து கொள்வர் என்றும், ஆரியர் அல்லாப் பிறர் அறிந்தால் அவற்றின் புனிதம் கெட்டுத் தீட்டுப்பட்டுவிடும் என்றும் ஆரியர் கருதும் அவை எழுத்துருவம் பெறாமைக்கு ஒரு காரணம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டதால் அவை மறை எனவும் எழுதாக் கிளவி எனவும் வழங்கப்பட்டன. அவை மறைத்துக் காக்கப்பட வேண்டியவை, பிறர்க்கு உரியவை அல்ல, பிறர் ஓதினால் தீட்டாகும், பிறர் எல்லோரும் தீட்டானவர்களே என்னும் கொள்கைகள் நிலைபெற்றன.
வருணம் (அல்லது ஜாதி) பிறப்பில் அமைவது; இயற்கையை ஒட்டியது. மக்கட்பிறப்பில் தூய்மையும் தூய்மை-யல்லவையும் உண்டு. தூயோர் உயர்ந்தோர்; தூயர் அல்லோர் இழிந்தோர்; உயர்வும் தாழ்வும், தூய்மையும் தூய்மையின்மையும் குலங்களுள் _ ஜாதிகளுக்குள் _ உண்டு; உயர் குலத்தோர், மூவர்; இருப்பிறப்பாளர். இவர்கள் சிறுபான்மையினர்; இவர்கள் வேதக் கல்விக்கு உரியர். நாலாமவர் தூய்மையற்றவர்; ஆகவே தாழ்ந்தவர். நாலாமவர் போன்றே பெண்டிரும் தூய்மையற்றவர்கள். வேதங்கள் கற்றால், கேட்டால் வேதங்கள் புனிதம் இழந்து தூய்மையும் கெடும்; அழுக்குப்படும். ஆதலால் இவர்களிடமிருந்து வேதங்கள் காக்கப்படல் வேண்டும். இவை அனைத்தும் கடவுளரின் கட்டளையே _ வேதங்கள் மறைவானதற்கும் மறையானதற்கும் இத்தகைய எண்ணச் சூழலே _ சிந்தனைகளே _ காரணம். இந்தச் சிந்தனைகளை உரம் ஊட்டி வளர்த்தனர் பின் வந்த ஆச்சாரியர்.
ஆரியர் வேதங்களான மறைகள் அவர்கள் பேசிவந்த மொழியில் இயன்றன. கி.மு.1000 அளவில் மூவேதங்கள் இயற்றப்பட்ட போது வழங்கிய அம்மொழியை வேதமொழி என இன்று வழங்குகின்றனர். இது இந்திய _ ஆரிய (மிஸீபீஷீ-கிக்ஷீஹ்ணீஸீ) வேர் மொழியின் ஒரு கிளை மொழி. தெய்வாம்சமும் புனிதமும் நிறைந்த வேதங்கள் வழங்கும் மொழியாதலால் வேதமொழியும் தெய்வாம்சமும் புனிதமும் கொண்டதாகக் கருதப்பட்டது. ஆரியர் பேசிய இந்த வேதமொழி இந்திய மக்கள் அப்போது பேசிய மொழிகளுடன் கலந்தது. (மக்கள் கலக்கின்ற போது மொழியும் கலத்தல் இயல்பு தானே.) அப்போது கலப்பு மொழிகள் மக்கள் வழக்கில் உருவாயின. வேதத்தின் தெய்வாம்-சத்தையும் புனிதத்தையும் காத்தல் பொருட்டும் வேதம் சார்ந்த வைதிக சமயத்தை நடத்தல் பொருட்டும் ஆரிய மரபின் வழிவந்தோராகக் காணப்படும் பிராமணர் உலகியல் கலப்பு மொழிகளிலிருந்தும் தம் வேதமொழியிலிருந்தும் ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டனர். திருத்தி உருவாக்கப்பட்டது என்னும் பொருளில் அம்மொழி ஷிணீனீளீக்ஷீவீ என வழங்கப்பட்டது. (ரிக்ஷீவீ= செயல்). இது பின்னர்ச் சமய மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் வழங்கியது. சமஸ்கிருதம் என்றும் எங்கும் பேச்சில் வழங்கியது இல்லை. (இதனைத் தமிழ் மரபினர் வடசொல், வடமொழி என வழங்கி வருகின்றனர்.) அது ஆரியப் பிராமணர் மொழியாகவே வாழ்வு கொண்டுவிட்டது. ஆரியரது வேதச் சமயம் இந்திரன் வருணன் உருத்திரன் முதலான தேவர்களைப் பற்றிப் பேசுவதாலும், பிராமணர் பூதேவர் என வழங்கப்படுவதாலும் சமஸ்கிருதம் தேவபாடை என வழங்கப்பட்டது. அவ்வாறாதலால் பிற பாஷைகள் நீச பாஷைகள் என வழங்கப்பட்டன. தேவர்க்கு எதிரானவர் நீசர். ஆதலால் சமஸ்கிருதம் தவிரப் பிற வையத்து மொழிகள் பிராகிருத றிக்ஷீணீளீக்ஷீவீ எனவும் தமிழில் பாகதம் எனவும் வழங்கப்பட்டன. பிராகிருதங்களே மக்கள் வழக்கு மொழிகள். இவை பாலிமொழி எனவும் அர்த்தமாகதி மொழிகள் எனவும் பெயர் வழங்கப்பட்டன. இவற்றுக்குத் தெய்வாம்சம் இல்லை. புனிதம் இல்லை, (தீட்டு உண்டு), அழுக்கு உண்டு, சூத்திரரும், பெண்டிரும் அழுக்குடையவர், நீசர். அவர்கள் அழுக்குடைய பிராகிருத மொழியே பேசுவர். அது நீசமொழி. சமஸ்கிருத நாடகங்களில் வரும் உறுப்பாளர்களுள் மூவருண இரு பிறப்பாளரான ஆடவர்கள் மட்டும் சமஸ்கிருதத்தில் உரையாடுவர், அனைத்து வருணப் பெண்டிரும் சூத்திரரும் பிராகிருத மொழியில் பேசுவர். பெண்டிரும் சூத்திரரும் சமஸ்கிருதம் படித்தால் அது அழுக்கடைந்து தீட்டுப்பட்டுவிடும். படிக்கும் அவர்களும் கெட்டொழிவராம்!
பெண்டிரும், சூத்திரருமான தொண்ணூற்று ஏழுபேரும் சமஸ்கிருதமே படித்தல் கூடாது என்றால் சமஸ்கிருதம் சொல்லும் வேதப்-பொருள் பற்றி என்ன இயம்ப இயலும். வேதங்கள் கூறும் பொருள்கள் பிரமம், ஆன்மா, மோட்சம் பற்றியவை. இவை எல்லாம் மறை பொருள்கள்; இவைகளும் பெண்டிர்க்கும் சூத்திரர்க்கும் ஆகா. இவை பற்றி இவர்கள் பேசுதலும் கூடாது; கற்றலும் கூடாது; இவற்றை அடைய முயலுதலும் கூடாது. சுருங்கச் சொன்னால் பெண்டிர்க்கும் சூத்திரக்கும் பஞ்சமர்க்கும் மோட்சம் இல்லை; இப்பிறப்பில் உறுதியாக இல்லை.
வருணாசிரம தருமச் சமய சமூகக் கொள்கையின் பின்புலத்தில் மக்களிடை உயர்வு தாழ்வும், தீண்டல் தீண்டாமையும், காணல் காணாமையும், முரண்டல் சுரண்டலும் சமூகநெறிகள் ஆயின அல்லவா. இந்நெறிகள் சமூகத்தில் மட்டும் அல்லாது மொழியிலும் இலக்கியத்திலும் கலைகளிலும் ஏற்றப்பட்டன. சூத்திரராகிய கீழோரே பெரும்பாலோர்; நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழினர். இவர்கள் மொழி தமிழ்மொழி. சூத்திரர் என இழிந்தோராகக் கருதப்பட்ட 97 பேரான தமிழர் பேசும் மொழியும் இழிந்ததாகக் கருதப்பட்டது; தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. தமிழ் என்னதான் தொல்தமிழாகவும் செந்-தமிழாகவும் பைந்தமிழாகவும் வண்டமிழாகவும் இன்றமிழாகவும் ஒண்தீந்தமிழாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் பலரால் கொண்டாடப்-பட்டாலும் அது இழிமொழிதான். சூத்திரருடைய அது பாவப்பட்ட பாகத (பிராகிருத) மொழிகளுள் ஒன்றாகவே ஆரியப் பிராமணீய அந்தணரால் கருதப்பட்டது.
இவ்வாறு தமிழ், சூத்திரர்களைப் போன்றே அழுக்கும் தீட்டும் கொண்டுள்ள மொழி, நீச மொழியானது. அதற்குத் தெய்வாம்சமும் புனிதமும் இல்லை. இருக்கவும் இயலாது. ஆதலால் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினள், ஆன தாய்த்தமிழ் சமஸ்கிருதத்திற்கு ஒப்பானது அல்ல. ஆதலால் தெய்வாம்சத்தோடும் புனிதத்தோடும் சமஸ்கிருதத்தில் குடிகொண்டிருக்கும் வேதங்களை நீசத்தமிழில் கொண்டு வருதல் இயலாது, கூடாது. கூடுமானால் இரண்டும் கெடும். அதாவது தமிழ் பிரமம், ஆத்மா, மோட்சம் ஆகியவை பற்றிப் பேசத் தகுதி பெறாதது. வைதிக சமய வருணாசிரம தருமம் வழங்கும் செய்தி இதுதான். அது பிறப்பிக்கும் ஆணையும் இதுதான். வருணாசிரம தருமம் சரி என்றால் இக்கருத்துகள் எல்லாம் சரிதானே.
இந்த இழி வரலாறு எல்லாம் பழங்காலத்-திற்கும் இடைக்காலத்திற்கும் உரியவை. ஆனால், இந்த வரலாறு ஒரு பகுதிதான் உண்மை என்பதும் சொல்லப்பட வேண்டும். சூத்திரர் பற்றியும் பெண்டிர் பற்றியும் தமிழர் பற்றியும் தமிழ்மொழி பற்றியும் சுமத்தப்பட்ட இழிநிலையினை எல்லாத் தமிழரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது இல்லை. தமிழ் மண்ணிலே மலர்ந்து விரிந்த சைவ சமயத்தார் தமிழைத் தாங்கித் தூக்கிப் பிடித்தனர். சிவபெருமானிடம் தமிழ் தூதராக விடப்பட்டது. (தமிழ் விடு தூது காண்க.) கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பைந்தமிழ் மண்ணிடைச் சில இலக்கண வரம்பு இலா மொழிகள் போல்எண்ணிடப்படக் கூடுமோ? எனச் சைவர் பண்பாடினார். தமிழ்ச் சங்கத்தைச் சிவபிராணும் சிவகுமாரனும் தலைமை ஏற்று நடத்தினர். ஆனால் வருணாசிரம தருமம் சுமத்திய இழிவுக்கு விடை சொல்வதாகத்தான் இந்தச் சைவத் தமிழ் வரலாற தோற்றுவிக்கப்-பட்டது போலும்! (இது தனியே ஆராயத்தக்கது.)
இந்த வருணாசிரதருமம் வடபுலத்தில்-தோன்றித் தென்புலம் வந்த வரலாறு விளக்கப்பட்டது.
2.5. அயல் வருணாசிரம தருமத்திற்கும் தமிழகத்திற்கும் என்ன உறவு? இன்றைய தமிழகத்தின் காட்சியிலிருந்து நோக்கலாம். இன்று வருணாசிரம தருமந்தான் தமிழகத்தில் கோல் ஓச்சுகிறது:-
அ. வருண வகுப்புகளின் மறுபிறப்புக்களான ஜாதிகள் இன்றும் இயங்குகின்றன. ஜாதிக்குள் மணம் என்னும் நடைமுறையால் இவை செல்கின்றன.
ஆ. ஜாதிகள் தொழில்களுடன் இணைக்கப்-பட்டுள்ளன. இன்ன ஜாதியாருக்க இன்ன தொழில் என்னும் நிலை நிலவுகிறது.
இ. ஜாதிகளிடையே உயர்வு தாழ்வுகள் செயற்படுகின்றன.
ஈ. புனிதம் பாவம், சுத்த அசுத்தம், தீண்டல் தீண்டாமை ஜாதிகளிடையே குடி-கொண்டுள்ளன. இவற்றின் விளைவுகள்:
வருணாசிரமத்தின் கர்ப்க்கிரகமாகக் கோவில்கள் விளங்குகின்றன.
பிராமணர்கள் சுத்தமானவர்களாகவும் மேலோராகவும் வைக்கப்பட்டுள்ளனர். இரு பிறப்பாளர் ஆதலால் அவர்களே கோவில்களில் புரோகிதர்கள்; அர்ச்சகர்கள்.
பெரும்பான்மைத் தமிழர்கள் _ 97 தமிழர்கள் _ கோவில் கருவறைக்குள் செல்லவும் அருச்சனை செய்யவும் மந்திரங்கள் ஓதவும் தகுதி இல்லாதவர்கள்; இவர்கள் சூத்திரர்கள். அசுத்தமானவர்கள், அழுக்குடையவர்கள், தீட்டுடையவர்கள், பிராமணர்களைப் போன்று சுத்தமானவர்கள் அல்லர். ஆதலால் தீட்டின் அடிப்படையில் அமைந்த ஜாதி உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்பக் கோவில்களில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
சமஸ்கிருதம் சுத்த மொழியாகக் கருதப்-பட்டுச் சைவ வைணவக் கோவில்களில் தெய்வப் படிமங்கள் உள்ள கருவறைகளில் அருச்-சனைக்கும் பூசைக்கும் மந்திரம் ஓதலுக்கும் உரியதாக கொள்ளப்பட்டுள்ளது. தெய் வழிபாட்டுக்கான அனைத்துப் பணிகளுக்கும் உரிய தெய்வபாஷை _ தேவ பாஷை _ சமஸ்கிருதமாகவே விளங்குகிறது.