நான் ஒரு நாத்திகன்
– அய்ன்ஸ்டீன் அறிவிப்பு
அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்!
இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது. இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையைத் தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளன. ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில், நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தன-மானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது, ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்ப-தாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற்படுத்திய பேரழிவு பற்றியும் குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும், யூதக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள்ளார். இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.