கேள்வி: ஜெயலலிதாவை விடுதலை செய்தது சரியா?
– அ.தமிழ்குமரன், ஈரோடு
பதில் : சரியா தவறா என்பது – உச்சநீதிமன்றத்தின் அப்பீலுக்குப் பிறகு வரும் இறுதித் தீர்ப்பின் மூலந்தான் கூறமுடியும். 4 – காரணங்கள் : கீழமை நீதிமன்றம் தண்டித்தது – 100 கோடி அபராதம் போட்டு (1), அடுத்து உயர்நீதிமன்றம் ஊழல்குற்றம் ஏற்றது (2), அதிகம் சேர்த்தது 10 சதவிதத்திற்குள்தான் என்றுகூறி விடுதலை (3), கூட்டல் தவறு என்று ஆச்சாரியார் வழக்கு தீர்ப்புப் பற்றிக் கருத்துக் கூறியது (4). எனவே, உச்சநீதி மன்றம்தான் இறுதியாகக் கூறிட முடியும்.
கேள்வி: வலிமைமிக்க ஆங்கிலேயரால்கூட இந்தியாவை கிருத்துவ நாடாக்க முடியவில்லை. ஆனால், சூது, சூழ்ச்சி, வஞ்சகம் தவிர வேறொன்றும் அறியா பார்ப்பனர் இந்நாட்டை இந்து நாடாக்கத் துடிக்கிறார்களே… நடக்குமா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : முதுகில் மூன்றாவது கையை நட்டாவது, முளைக்க வைக்க முயலுகின்றன _ வேடிக்கை அது!
கேள்வி: நாள்காட்டிகளில் தமிழ்ப் புத்தாண்டினை இந்துமதப் பண்டிகை என்று குறிப்பிட்டிருப்பது சரியா? தவறு என்றால் களைய வழி?
– கே.டி.திலகர், மின்னஞ்சல் கேள்வி.
பதில் : நாள்காட்டி போட்டவருக்கே எழுதுங்கள். கண்டனம் தெரிவியுங்கள்.
கேள்வி: பாலியல் தொல்லையால் பேருந்திலிருந்து குதித்து இறந்த இளம்-பெண்ணின் மரணம் கடவுள் செயல் என பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் சுர்ஜித் சிங் ராக்ரா கூறி இருக்கிறாரே?
-க.அரிமாவேந்தன், காஞ்சி
பதில் : மூடத்தனத்தின் முடைநாற்றம்.
கேள்வி: தமிழக அரசின் மிக மோசமான நிதி நெருக்கடியால் பலிகடாவாக நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கைவிட அரசு முடிவு என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே?
– தி.மலைக்கொழுந்து, வந்தவாசி
பதில் : ஏன் புனித கங்கையைச் சுத்தப்படுத்துவதற்கு மேலும் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியும் உள்ளார்களே!
கேள்வி: நில நடுக்கத்தை ஆத்திகர்கள் பார்வையில் ஆண்டவன் சோதிக்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாமா?
– நாத்திகன் சா.கோ., பெரம்பூர்
பதில் : இப்படி கொடூரமாகச் சோதிப்பவனை நூறு (100) முறை தூக்கில் போட வேண்டாமா? விசித்திர ஆண்டவனின் வேடிக்கையான சோதனை!
கேள்வி: பா.ஜ.க.வைப் பொருத்தவரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒரு புனித நூலாகக் கருதுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டது என்று ஒப்புதல் அளிக்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?
– சோ.கன்னியப்பன், அரக்கோணம்
பதில் : புனித கங்கையையேகூட தூய்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளதே!
கேள்வி: சல்மான்கானுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றிய தங்களது கருத்து என்ன?
– க.அசோகன், தஞ்சை
பதில் : ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி அமையவில்லை என்பதே!
கேள்வி: பா.ஜ.க.வின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறதே?
– மா.செங்குட்டுவன், மதுரை
பதில் : மோடி ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் ரூபாய் மதிப்பு பா.ஜ.க. ஆட்சி மதிப்புபோல் கீழேதான் இறங்கியுள்ளதோ!
கேள்வி: மோடி, புத்தரின் கொள்கைகளை மிகவும் புகழ்ந்து பேச அடிப்படைக் காரணம் என்ன? பா.ஜ.க.வின் பார்வையில் புத்தரின் கொள்கைகள் ஏற்புடையதா?
– சா.அன்பரசன், நெல்லை
பதில் : எந்தக் கச்சேரியில் யார் எந்தப் பாட்டை ரசிப்பார்களோ, அந்தப் பாட்டை ஆங்காங்கே பாடிடும் பாகவதர் பேசுகிறார் _ தொழில் முறை கச்சேரியாளர் போல பிரதமர் மோடி! மகாத்மா காந்தி ராக ஆலாபனை, புத்தர் ராகம், இடையில் எதிர்க்கட்சிகளைப் பற்றிய ஆவர்த்தனமும் உண்டு! கேள்வி: தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதே?
– கோ.தேன்மொழி, விழுப்புரம்
பதில் : அப்படியா நல்ல செய்திதான்!
கேள்வி: கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும் பார்ப்பானாயிருந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாக வெளியில் வந்துவிட முடியுமென்றால், இந்த நாட்டின் நீதித்துறையை மாட்டுக்காரச் சிறுவன்கூட மதிப்பானா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : மதித்தாலும் மதிக்காவிட்டாலும் அதுதானே அனைவருக்கும் ஒரே புகலிடம்? வேறு வழியில்லையே!