புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்

ஜுன் 01-15

அரிய செய்திகள் :

புலிக்கறி சாப்பிட்ட புரட்சிக்கவிஞர்!

குப்புறப்படுத்து மார்புக்குத் தலை-யணையைத் தாங்கலாக வைத்துக் கொண்டு எழுதும் வழக்கமுடையவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
(ஆதாரம்: பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் பக்கம் _ 18)

தமிழ் எழுத்தாளர் தமிழை நன்றாகக் கற்கவேண்டும். இன்றைய தமிழ் எழுத்தாளர் பலருக்குத் தமிழே தெரியாது. எழுத்தாளன் என்பவன் எப்போதும், எவருக்கும் அஞ்சாமல் தன் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிடும் துணிச்சல் பெற்றவராய் இருக்க வேண்டும்.
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கறியை விடாதே. கறிதான் மனிதனுக்கு உணர்ச்சி வெறியை உண்டாக்குது. உணர்ச்சி வெறிதான் கவிஞனுக்கு வேண்டும். கடைசிவரை கறியை விடாதே. நான் அதுக்கு எடுத்துக்காட்டு… என்ன… சைவத்தை நம்பி நம்பி வீரஉணர்ச்சியே போயிடிச்சு!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலையில் பரிமாறப்பட்டிருந்த உப்புக் கண்டத்தைக் காட்டி இது என்ன உப்புக் கண்டம்? சொல்லு பார்க்கலாம் என்றார் பாவேந்தர். நான் அதைச் சுவைத்துப் பார்த்தபோது அது ஆட்டுக்கறியாகத் தெரியவில்லை. சுவை மாறுபட்டிருந்ததால் மான் கறியாக இருக்கும் என்று நினைத்து மான்கறியா? என்றேன். உடனே பாவேந்தர், இல்லை. புலிக்கறி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்ன புலியா? புலிக்கறி எப்படிக் கிடைக்கிறது? என்றேன்.

புதுக்கோட்டை அரசருக்கு வேண்டிய ஒரு நடிக நண்பர் எனக்கு அடிக்கடி அனுப்புவார். சாப்பிடு! என்றார்.
– கவிஞர் முருகு.சுந்தரம்

* * *

தப்பெனில் ஒப்பும் தலைமைப் பண்பினர்

கனியிடை ஏறிய சுவையும் _ முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் _ காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
என்ற புரட்சிக்கவிஞரின் பாடலைப் படித்த தமிழ் மறவர் பொன்னம்பலனார், புரட்சிக்-கவிஞரிடம் இதிலுள்ள ருசி என்னும் வடசொல்லை நீக்கி சுவை என்று அழகு தமிழில் சொல்லலாமே என்றார்.

தவறு என்று அறிந்ததும் உடனே அதை ஏற்று அடுத்த பதிப்பில் சுவை என்று மாற்றம் செய்யச் சொன்னார் புரட்சிக்-கவிஞர். தவற்றை ஒப்பிக் களைதல்தானே தலைமைப் பண்பிற்கு அழகு! அது புரட்சிக்கவிஞரின் முரட்டு உள்ளத்திற்குள் அழகுறக் குடிகொண்டிருந்ததை நம்மால் இதன் வழி அறிய முடிகிறது. அது மட்டுமல்ல அதன்பின் வடசொல் கலப்பின்றி எழுத முற்பட்டார், எழுதினார்.

* * *

தமிழாசிரியர்களின் சம்பளத்தை ரூ.45/_லிருந்து ரூ.75/_ஆக உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்து உயர்த்தச் செய்தவர் பொன்னம்பலனார்.

தியாகராய நகர் இராமன் தெருவில் பாவேந்தர் வாழ்ந்தபோது, ஆனந்த-விகடனில் பாரதியாரைப் பற்றி எழுதும்படி திரு.எஸ்.எஸ்.வாசனே நேரில் வந்து கேட்டுக்கொள்ள, அதற்கு இணங்கிய பாவேந்தர் ஒரு கட்டுரை அனுப்பினார். அதன்பின் எழுத-வில்லை, நிறுத்திவிட்டார். ஏன் மறந்துவிட்டீர்கள் என்று கேட்ட-போது, முகத்தைச் சுளித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை.

கவிஞர் தாகூரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. அவருடைய கையெழுத்துப் படியில் மை சிந்திவிட்டால் அல்லது எழுத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால் அதை ஓர் ஓவியமாக மாற்றிவிடுவார். அதேபோல், தன் கையெழுத்துப் படியில் மை சிந்தினால் அதைப் பூவாக மாற்றும் பழக்கம் பாவேந்தருக்கும் உண்டு.

தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரிகளை மாற்றிவிட்டார்கள் என்பதற்காக, மார்டன் தியேட்டர்ஸாரின் ரூ.40,000/_ ஒப்பந்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்த சுயமரியாதைக்-காரர் புரட்சிக்-கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *