நம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்!

ஜுன் 01-15

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 131 ஆம் தொடர்

நம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்!

– கி.வீரமணி

இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய தொடக்க உரையில், இந்தி மொழியின் நிலையைக் குறிப்பிடும்பொழுது இந்தி மொழியின் வரலாறு கி.பி.1100இல் தொடங்குகிறது. பிராகிருதத்தின் சிதைவிலிருந்து தோன்றிய வடமொழிக் கலப்பினைப் பெற்று, கங்கைச் சமவெளியின் மேல்பாகத்திலுள்ள டில்லியைச் சுற்றிலும் பேச்சு வழக்கிலிருந்த இந்தோ_ஆரிய மொழிக்கு அய்ரோப்பியர் இந்துஸ்தானி என்று பெயரிட்டனர். விடுதலைக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியில் அம்மொழியைப் பேசுவோரின் ஆதிக்கம் இருந்ததால் இந்தி தேசிய மொழி என்ற தகுதியை அந்த இந்துஸ்தானி செயற்கையில் பெற்றது. இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று. இந்தி ஒரு மொழியாக உருவம் கொடுக்கப்பெற்றதே கி.பி.14ஆம் நூற்றாண்டில் லல்லுஜிலால் என்பவரால்தான்.

இவர் பிராகிருதச் சிதைவான மொழியிலிருந்தும் அராபிய மொழி, பாரசீக மொழி, உருதுமொழி ஆகியவற்றின் கலப்பிலிருந்தும் சீர்திருத்தம் செய்து இந்தி மொழியை உருவாக்கினார். இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமானந்தர் இராமன் மீது பாடிய பாடல்களே இந்தி இலக்கியத்தின் தொடக்கம். இந்தி இன்றுகூட மொழி என்று கூறுவதற்குரிய தகுதி பெறவில்லை. இந்தி ஒரு மொழி என்பது மாயையின் தோற்றம். இந்தி மொழியானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபட்ட ஒலி விரிவுகளோடு பேசப்படுகிறது. எல்லா இடத்திலும் இந்தி ஒரே ஒலி வடிவைப் பெற்றிருக்கவில்லை. இந்தியை மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என்ற மூன்று பெரும் பிரிவுகளாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு பெரும் பிரிவும் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பிரிந்துள்ளன. இந்த அவல நிலையில் இந்தியை பாரதத்தின் ஆட்சிமொழியாக ஏற்பது பற்றிய விவாதம் அரசியலமைப்புச் சபையில் நடந்த வாக்கெடுப்பிற்கு விட்டபோது இந்திக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமநிலை வாக்குகளே கிடைத்தன. 74_74 வாக்குகளே கிடைத்தன. இந்தி மொழி _ ஆட்சிமொழி பற்றி விவாதம் மீண்டும் அரசியலமைப்புச் சபையில் வந்தது. கடைசி வரையில் இந்தி அரசியல் அமைப்பு சபையில் பெரும்பான்மை வாக்குப் பெற்று வெற்றிபெறவே முடியவில்லை. உடன்பாடுதான் செய்விக்கப்பெற்றது. தழுவிச் செல்லும் மனப்போக்கினால் இந்தி எதிர்ப்பு உணர்ச்சிமுனை மழுங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி தென்னகத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி பெற்றிருந்தும் உடன்பாட்டின் வயப்பட்டதால் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டனர் என்று இந்தியைப் பற்றி அதன் தொடக்க கால வரலாறு மற்றும் இந்திய அரசு எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது போன்றவற்றை விரிவாக அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய செட்டிநாட்டரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையுரை ஆற்றியபோது குறிப்பிட்டதாவது: தமிழைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று காக்கவும், இந்தித் திணிப்பை எதிர்க்கவும் நாம் இங்கே கூடியிருக்கின்றோம். இந்தியைத் திணிக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டே மத்திய அரசு பலவழியில் இந்தியைத் திணித்துக்கொண்டு வருகிறது. வாசல் வழியாக வந்தால் வரவேற்பு இருக்காது என்று எண்ணி, இந்தி கொல்லைப்புற வழியாக கோலோச்ச வருகிறது. முன் வழியானாலும், பின் வழியானாலும், தன் வழிப்படியே போவதுதான் முறையாகும் என்று குறிப்பிட்டார்கள்.

இந்திமொழி பொதுமொழி ஆவதால், ஆட்சி _ மொழி ஆவதால் தமிழ் மக்கள், வடநாட்டு மக்களோடு பதவியில் பல்வேறு வேலைவாய்ப்புகளில் போட்டிபோட முடியாத காரணத்தால் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆகிவிடுவார்கள். இதனால், இருபகுதி மக்களிடையேயும் மனக்கசப்பும், வெறுப்புணர்ச்சியும் வளரும். இவ்வுணர்ச்சி நாட்டின் ஒற்றுமையைப் பாதித்து, முன்னேற்றம் தளர்ச்சியில் போய் முடியும் என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினரின் ஒப்புதலுடன் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முன்பு இந்தியைத் திணித்து பிறகு கடுமையாக எதிர்த்த திரு.இராஜகோபாலாச்சாரியார் எழுப்பிய என்றைக்கும் இந்தியில்லை, என்றுமே ஆங்கிலம்தான் (English ever and Hindi never) முழக்கத்தையே தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமித்த குரலில் அரசுக்கு இம்மாநாட்டின் மூலம் தெரியப்படுத்துகிறார்கள். இருமொழிக் கொள்கையே, (English and Tamil)  தமிழ் மக்களுக்கு உடன்பாடான ஒரே கொள்கை என்பதை இம்மாநாடு ஒரு மனதுடன் உறுதிபடுத்துகிறது.

காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ்.மாரிசாமி, அப்துல் சமது மற்றும் பலர் இந்தி திணிப்பைக் கண்டித்துப் பேசினர்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டின் மாலை நிகழ்ச்சிகள் 4 மணியளவில் தொடங்கின. காலையில் இருந்ததைவிட மும்மடங்கு கூட்டம் திடலில் குழுமியதால் இடநெருக்கடி அதிகரித்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆவேச உரையைக் கேட்க ஆவலுடன் மக்கள் காத்திருந்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சியில் குடந்தை ஜோசப், வழக்குரைஞர் சாமிதுரை, கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆகிய இயக்க முன்னணியினரும், பேராசிரியர் ராமநாதன், டாக்டர் கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி, அலைஓசை பத்திரிகை நிறுவனர் வழக்குரைஞர் வேலூர் நாராயணன், பிரான்சிஸ் ராயன், பெருஞ்சித்திரனார் மற்றும் சர்வகட்சி சார்பில் திருமறவன் டி.என்.அனந்தநாயகி, குமரி அனந்தன் எம்.பி., டாக்டர் சந்தோஷம், மாணிக்கம் எம்.எல்.சி. ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெருத்த கரவொலிக்கிடையே சிறப்புரையாற்றி மக்கள் உணர்ச்சியைப் பிரதிபலித்தார்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலைஞர் கலந்து உரைநிகழ்த்தும்போது குறிப்பிட்டதாவது:

நாம் தமிழ் இனம்; இந்தி மொழி பரப்பப்பட்டு, மற்ற மொழிகளெல்லாம் அடியோடு அழிக்கப்பட்டு, இந்தி ஆதிக்கம் தலைதூக்குமேயானால், அதற்குப் பிறகு நாம் நண்பர் குமரி அனந்தன் இங்கே குறிப்பிட்டதைப் போல _ இரண்டாந்தர மக்களாகக்கூட அல்ல. நாலாந்தர மக்களாக ஆக்கப்பட்டு விடுவோம். அதை தயவுசெய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.அவர்கள்கூட, மூன்றே நாளில் இந்தியைப் படித்துவிடலாம். படிப்பது எளிது என்று கூறினார்கள். படித்தால் என்ன என்றுகூட உங்களுக்கு ஆசை வரலாம். இந்தி படிப்பது எளிது. ஆனால் படித்தால் அது மிகக் கொடிது. எளிது என்பதற்கும், கொடிது என்பதற்குமுள்ள பொருள் நீங்கள் உணர வேண்டும்.

மும்மொழித் திட்டத்தால் இந்தியைப் படித்தால் நல்லதுதானே என்று கேட்கத் தோன்றும். அதே நேரத்தில் நமது தாய்மொழி தமிழ். நாம் மும்மொழித் திட்டத்தால் இரண்டாவதாகப் படிக்க வேண்டிவருவது இந்தி, மூன்றாவதாகப் படிக்க வேண்டிவருவது ஆங்கிலம். இந்த மூன்றையும் படித்துத் திறமையாக ஒருவர் அல்லது இருவர் வரலாம்.

ஆனால் அதே நேரத்தில் இந்தி பேசுகிற மாநிலத்தில் உள்ளவர்களின் தாய்மொழி. இந்தி அவர்களுக்கு மும்மொழித் திட்டம் பெயரளவுக்குத்தான். அடுத்தது ஆங்கிலம். அவர்களுடைய தோள்களிலே சுமத்தப்படுகிற சுமை ஒரே ஒரு சுமைதான். ஆங்கிலம் என்கின்ற ஒரேஒரு சுமைதான். ஆனால் தமிழர்களுடைய தோள்களிலே சுமத்தப்படுகிற சுமை இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு சுமைகள்.

கர்நாடகத்தில் இருக்கிற ஒரு கன்னடியர் மீது, மலையாளத்தில் இருக்கிற ஒரு மலையாளி மீது, ஆந்திரத்திலே இருக்கிற ஒரு தெலுங்கர் மீது, பஞ்சாபிலே இருக்கிற ஒரு பஞ்சாபி மீது, வங்காளத்திலே இருக்கிற ஒரு வங்காளி மீது சுமத்தப்படுகிற சுமை இந்தி, ஆங்கிலம் இரண்டும்.

நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைப் படித்து திறமைமிக்கவர்களாக ஆகி நூற்றுக்குத் தொண்ணூறு பேர் திறமைசாலிகளாக ஆவார்கள். அதே நேரத்தில் தமிழர்கள் தமிழையும் படித்து இந்தியையும் படித்து ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாவார்கள். நூற்றுக்கு ஒரு சதவிகிதம்தான் இங்கே திறமைசாலிகளாக வரமுடியும். அது எங்கே கொண்டுபோய் நம்மைவிடும்? மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலிருந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலே இருக்கிற வேலைவாய்ப்புகள் வரை தமிழனுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

அப்படியானால் இந்தியை ஏற்றுக்கொண்டால் என்ன? தமிழனுக்கு இடம் கிடைக்குமல்லவா என்று கேட்கத் தோன்றும். என்ன ஆகும்? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன்தான் _ நடைபெறுகின்ற தேர்வுகள் அனைத்திலும் பெருவாரியாக வெற்றி பெறுவான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் பெருவாரியாக வெற்றிபெற மாட்டான். எனவே எதிர்காலத்திலே தமிழனுக்கு அவனுடைய வாழ்வில் இருள் கவ்வக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவேதான் நாம் இப்போதிருந்தே திட்டமிட்டு ஆங்கிலம், அவரவர்களுடைய தாய்மொழி ஆகிய இரண்டு மொழிகளும் போதும் என்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி அவர்கள் பேசுகையில், விரைவில் ஆங்கில நாளேடு ஒன்றைத் தாம் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

நான் எழுந்து, தமிழர்களுக்கென்று ஆங்கில நாளேடு ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் பெரு விருப்பமாகும். அதை நிறைவேற்றும் வகையில் திரு.கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். தொடங்க இருக்கும் நாளேட்டிற்கு கழகத்தின் சார்பில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூ.100 அளிக்கிறோம் என அறிவித்து, மேடையிலேயே நன்கொடை நிதியையும் வழங்கினேன்.

மக்கள் கடல் வெள்ளம்போல் பல்வேறு ஊர்களிலிருந்து திரண்டிருந்தனர். ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழியர், தோழர்கள், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த தோழர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *