Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது!

கேள்வி: சமீபகாலமாக, தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே?

பதில்: பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது ஜாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்லமுடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்லமுடியாது. அந்த விடுதலைக்கான வழியாக அவர் ஜாதி ஒழிப்பை முன்வைத்தார். கடவுள் ஒழிப்பு, மத ஒழிப்பு அல்ல, ஜாதி ஒழிப்புதான். ஜாதி புகல்கிற கோவில்கள், ஜாதி புகல்கிற இலக்கியங்கள், ஜாதி புகல்கிற மொழி என்று அவர் அதை முன்வைத்தார்.

ஜாதிக்கு அங்கீகாரம் தருகிற எல்லாவற்றுக்கும் அவர் அங்கீகாரம் தர மறுத்தார். பெரியாரைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதால்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊழல், அரசியல் ஒழுக்கமின்மை காரணமாக, பெரியாரை திராவிடக் கட்சிகளால் முன்வைக்க முடியவில்லை. பெரியாரை, சமூகத்திடம் கொண்டு செல்வதற்கான திறனை அவர்கள் இழந்துவிட்டார்கள்.

– பேராசிரியர் தொ.பரமசிவன்

நன்றி: தி இந்து தமிழ், 17.5.2015