உற்சாக சுற்றுலாத் தொடர் – 9

ஜுன் 01-15

– மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

ஆக்ரா – அய்.நா.அடையாளச் சின்னம் ஆக்ரா கோட்டை

தாஜ்மகாலை விட்டுப் பிரிவது, காதலர்கள் சந்திப்பின் பின்னர் பிரிவது போலத்தான்! மீண்டும் வருகின்றோம் என்று சொல்லி விடை பெற்றோம்.

ஆக்ராவின் அடுத்த சிறப்பான இடம் ஆக்ரா கோட்டை. ஆக்ரா கோட்டை  பல வரலாற்று மிக்க இடம். மூன்று பானிப்பட்டுப் போர்கள் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். ராஜபுத்திரர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடந்த போர்கள். மாறி மாறி இந்தக் கோட்டையில் ஆண்டுள்ளனர்.அக்பர் கோட்டையைப் பெரிதாக்கி உள்ளே அரண்மனைகளையும் கட்டியுள்ளார். 500 கட்டிடங்களில் தற்போது 30-_35 கட்டிடங்கள் மட்டுமே அழிக்கப்படாமல் உள்ளன. சுற்றிலும் பெரிய அகழ்வுகள், அடுத்து 70 அடி உயர கோட்டைச் சுவர்கள். மிகவும் பெரிய, வேலைப்பாடு மிக்க   கோட்டை நுழைவுகளும், கதவுகளும். உள்ளே நுழைந்ததும் 90 டிகிரியில் திரும்பும் பாதை யானைகள் வேகமாக உள்ளே நுழைந்தாலும் அதே வேகத்தில் இதில் திரும்ப முடியாது தங்கள் வலுவை இழந்து விடுமாறு இந்தத் திருப்பம். உள்ளே அழகிய பூங்காக்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள். அற்புத வேலைப்பாடுகள். ராஜபுத்திர, முகமதிய அடையாளங்கள் கலந்துள்ளன. ஜஹாங்கீர் அரண்மனை மிகவும் அழகாக உள்ளது.

அரண்மனைவாசிகளுக்காக பெரிய நீர்த்தொட்டி! அதிலே ரோசாப்பூ நீர் வைக்கப்பட்டிருக்குமாம்.  மாடியில் ஒரு அரண்மனையில்தான் ஷாஜஹான் அவரது மகன் ஔரங்கசீப்பால் சிறை வைக்கப் பட்டிருந்தாராம். அது ஒன்றும் சிறை அல்ல. மாடமாளிகைதான். அங்கிருந்து தாஜ்மஹால் அழகாகத் தெரிகின்றது. அதுதான் அவருக்குத் தண்டனையாம். பின்னர் ஆக்ரா கோட்டையிலிருந்து டில்லி செங்கோட்டைக்கு ஆட்சி மாற்றப்பட்டு விட்டது.

ஆக்ரா கோட்டையில்தான் 1857இல் பன்றிக் கொழுப்பைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம், சிப்பாய்க் கலகம், முதல் விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் போராட்டம் நடந்தது. அதன் முடிவுதான் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது. இப்போதும் இந்தியப் படையின் ஒரு பிரிவு கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ளது.

அங்கிருந்து மற்றும் இரண்டு இடங்களைப் பார்த்தோம். ஒன்று, உலகின் பெரிய சித்திர வேலைப்பாடுகள் பளிங்குக் கற்களில் பொதிக்கப்படும் விற்பனைச் சாலை. சிறியதும் பெரியதுமான விலையுயர்ந்த கற்கள் பெரிய பளிங்குக் கற்களிலும், யானை போன்ற  அழகான சிலைகளிலும் பொதிக்கப் படுகின்றன. ஆயிரக்கணக்கல்ல, கோடிகள் விலை பெறும் அற்புதங்களைப் படைத்து உலகெங்கும் விற்பனை செய்கின்றனர். அதை வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அதை வைப்பதற்குச் சரியான அரண்மனை வேண்டாமா? அரசியல்வாதிகளுக்காகத்தான் செய்கின்றார்கள் போலும்! எங்களுடன் வந்தவர்கள் சில சிறிய அழகிய சிற்பங்களை வாங்கினார்கள்.

அடுத்துச் சென்ற இடம் ஆம்! ஒரு நகைக் கடை. கொல்லம் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை? இது ஒரு குடும்பத்தின் கதை. இந்தக் குடும்பம் மும்தாஜ் மஹாலுக்கே நகை செய்து தந்த குடும்பம். பல அரச குடும்பத்தினருக்குச் செய்த நகைகளையும், மும்தாஜ் அணிந்திருந்த நகைகளையும், எங்கள் குழுவிற்குக் காண்பிப்பதற்காகவே வங்கியின் பாதுகாப்பிலிருந்து எடுத்து வந்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நான் ஒரு பெரிய கழுத்தணியையும், மும்தாஜின் மோதிரத்தையும் அணிந்தேன். அப்போதாவது நாங்கள் ஏதாவது விலையுயர் நகை வாங்குவோம் என்று பார்த்திருக்கலாம்! நல்ல வேலைப்பாடு, அது போலவே விலையும் நிறையதான். எங்கள் குழுவில் சிலர் வாங்கினார்கள்.

கனவுகள் கலைந்து நினைவுலகத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *