சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆவணப்பட இயக்குநரும் செயல்பாட்டாளருமான ஆர்.பி.அமுதன் அவர்கள் முதல் விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் தங்கர்பச்சான் விருதினை வழங்கிச் சிறப்பித்தார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விழாவில் பங்கேற்று பெரியார் சாக்ரடீசு குறித்து நினைவுரையாற்றினார். இதழாளர்கள் கோவி.லெனின், மை.பா.நாராயணன் ஆகியோர் தங்களுக்கு பெரியார் சாக்ரடீசுக்கும் இடையிலான நட்பையும், அவர் தம் பணியையும் எடுத்துரைத்தனர்.
இதேபோல், காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் சார்பில் 24.05.2015 அன்று காரைக்குடியில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில், செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பணியாற்றிவரும் அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கு அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பெரியாரியலைப் பரப்பும் பணியிலும், அதை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் பணியிலும் தன் வாழ்க்கையைச் செலவிட்டு, எண்ணற்ற புதிய படைப்பாளர்களை உருவாக்கி, இளம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு, ஊக்குவித்து நெறிப்படுத்திய பெரியார் சாக்ரடீசின் பெயரால், அதே பணியை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தல் சாலப்பொருத்தம். பெரியார் சாக்ரடீசு மறைவின்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம் என்ற வரி செயல்வடிவம் பெற இப்பணிகள் தான் அடிகோலும்.