அய்யாவின் அடிச்சுவட்டில்…. – கி. வீரமணி

ஜூன் 01-15

நான் சொல்வதை நம்பாதிர்கள்!

விழாவில் நான் வரவேற்புரையில் குறிப்பிட்டதாவது:  இந்த விழா தஞ்சை வரலாற்றிலேயே பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் விழாவாகும் – இதுவரை காணாத விழாவாகும்;  மழைத் தொல்லையிலும் எதிர் நீச்சல் போடும் நமது தலைவர், தமது படைசூழ ஊர்வலம் வந்தார்கள். கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லும் தலைவர், அடுத்த திங்கள் 17இல் 95 வயதை அடையப் போகிறார்கள். அய்யா அவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு, சிதம்பரத்தில் திரு. கு. கிருட்டிணசாமி அவர்களது முயற்சியால் கார் அளிக்கப்பட்டது.  அந்தக் கார்தான் பழுதுபட்டு முதுமை அடைந்ததே தவிர, அய்யா அவர்கள் உற்சாகத்தில் – கொள்கை வேகத்தில் முதுமையோ-தளர்ச்சியோ ஏற்படவில்லை. அய்யா அவர்களின் பணிக்கு ஈடுகொடுக்க அந்த முதுமை தட்டிய வேனால் முடியவில்லை.

புதிய வேன் கொடுக்க வேண்டும் என்று விரும்பி முயற்சி செய்தோம்.  ஏறத்தாழ 1 1/2 லட்சம் ரூபாய்களைத் தமிழகம் அள்ளிக் கொடுத்து இருக்கிறது!  நமது வேண்டுகோளுக்கிணங்க, இத்தொகை சேர்க்க அரும்பாடுபட்ட நமது மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், இயக்க முக்கியத் தோழர்கள் அனைவருக்கும் அவர்களது பேருழைப்புக்காகவும், அரிய ஒத்துழைப்புக் காகவும் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக எனது இதயங்கனிந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
அந்தத் தொகையில், ரூ 40 ஆயிரத்தைத் தஞ்சை மாவட்டமே அளித்துப் புகழ்பெற்று விட்டது.  தஞ்சைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து சேலம் இப்படி வரிசையாக அளித்துள்ளது. அய்யா அவர்களுக்கு, எப்போதுமே அதி ஆதரவு தரும் மாவட்டம் தஞ்சை மாவட்டம் என்ற பெருமையை மீண்டும் தஞ்சை மாவட்டம் தக்கவைத்துக் கொண்டு, விழாவை நடத்தும் பெருமையைப் பெற்று விட்டது.

இங்கே அய்யா அவர்களை வாழவைக்கும் பல டாக்டர்கள் வந்திருக்கிறார்கள்.  அவர்களுள் முதன்மையானவர் நமது டாக்டர் கலைஞர்.  அய்யா அவர்கள்தான் மருந்தைக் கண்டுபிடிக்கிறார் என்றாலும், அதையே லாவகமாக, அய்யா அவர்கட்கே ஊட்டும் டாக்டராக நமது கலைஞர் விளங்குகிறார்! இங்கே வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரண்டு இருக்கிறது.  மூன்றேநாளில் ஆட்சி கவிழும் என்றோர் எத்தகைய ஏமாளிகளானார்கள் என்பதை, உள்ளத்தால் ஒருவரான தமிழர் கூட்டம் காட்டுகிறது.  அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவை, நமது கலைஞரை முதல்வராக வைத்தே இதே மேடையில் கொண்டாடுவோம் என்பதை இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளம் உறுதிப்படுத்திக் காட்டுகிறது. அய்யா அவர்களுக்கு ஆயுள் நீளுகிறது என்றால் காரணம், அவர் தொண்டு வெற்றி பெற்று வளர்வதுதான்.  உதாரணமாக, 22 பதவிகள் அண்மையில், (குரூப் ஒன் சர்வீஸ்) அத்தனையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கே அளிக்கப்பட்ட செய்தி, அய்யா அவர்களுக்கு ஆயுள் நீள அளிக்கப்பட்ட டானிக் ஆகும்.

அய்யா அவர்கள் எளிமையையே விரும்புகிற தலைவர்.  என்றாலும், டாக்டர்களின் ஆலோசனையின் பேரால், வேறுவழியின்றி குளிர்சாதன வசதியுடன் இந்த வேனை அளித்து விட்டோம்.  அதற்காக அய்யா அவர்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.  அய்யா அவர்கள், திருச்சி மாளிகையில் அவர்கள் தங்கும் இடத்தையும் குளிர்சாதன வசதி செய்ய ஏற்பாடு நடக்கிறது.  அய்யா அவர்களின் ஆயுள் ஒரு கணம் நீளவேண்டும் என்றாலும்கூட, அதற்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்ய ஆயிரக்கணக்கான தோழர்கள் இந்த நாட்டிலே உள்ளனர். அதற்கு முன் இது ஒரு சிறு முயற்சியேயாகும்.  அந்த வகையிலே, அய்யா அவர்களைப் பேணிக் காப்பதில்தான் தமிழரின் வாழ்வு இருக்கிறது என்பதால்தான் நாம் வசதிகளைச் செய்து தருகிறோம்.

முந்தைய அரசில் சங்கராச்சாரியின் வேனுக்கு வரிவிலக்குக் கொடுக்கப்பட்டதாக பத்திரிகையில் ஒரு செய்தி கண்டோம். ஆனால், சங்கராச்சாரியைவிட நமது தலைவர் பெரியார் அவர்கள் நமக்கு மிக மிக மதிப்பிற்குரியவர்கள். எனவே, அவர்களுக்கும் அவரது வேனுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வேண்டுகோளை ஏற்று அரசு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக இந்த அரசிற்கு, முதலமைச்சருக்கு,-போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு, நாலரைக் கோடித் தமிழர்களின் சார்பாகப் பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்த வேனைக் கட்டி முடிப்பதில் பேருதவிபுரிந்த கரூர் எல்.ஜி.பி. நிறுவனத்திற்கும், ஆலோசனை, உழைப்பு நல்கிய சேரன் போக்குவரத்துக்கழக நிருவாகி திருஞானசம்பந்தம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.  தவறுகள் இருந்தால் அய்யா அவர்கள் பொறுத்தருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வேன் நிதியிலிருந்து அய்யா அவர்களின் பேரால் பத்தாயிரம் அளித்து வருடா வருடம் அய்யா அவர்களின் பகுத்தறிவுவாதத்தைப்பற்றி விவாதம் அழைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என எடுத்துரைத்தேன்.

(இந்த நேரத்தில் அதிர்வேட்டுகள் முழங்க, கடவுள் இல்லை!  தந்தை பெரியார் வாழ்க!  கலைஞர் வாழ்க!  என்ற வாசகங்கள் பொறித்த வாணவேடிக்கைகள் இடம் பெற்று, எல்லோரது கவனத்தையும் கவர்ந்தன!)

தந்தைக்குக் கார் பரிசளிப்பில் தஞ்சை கொட்டிய எழுச்சி முரசு அறிவை வில்லாக்கி, ஆற்றலை அம்பாக்கி, ஆரியத்தை அழிப்போம் வாரீர் வீரர்கள்! என்று தமிழினத்திற்கு அறைகூவல் விடுத்த காட்சி இதோ!

தஞ்சை மாநகரம் கழக வரலாற்றில் தனக்கெனப் புகழ்மிக்க தனி அத்தியாயங்களை இணைத்துக்கொண்ட கறுப்புச்சட்டைப் பாடிவீடாகும்.  அந்தப் பாடி வீட்டின் ஒளிகொட்டும் புகழ் மகுடத்தில், மேலும் ஒரு மரகதக்கல் பதித்தது போல் அமைந்து விட்டது 19.8.73 அன்று நடைபெற்ற தந்தைக்குக் கார் அளிப்பு நிகழ்ச்சி என்றால் அது மிகையாகாது.

நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான கழகக் கொடிப்பேனர்கள், கருத்துமழை கொட்டும் மேக மண்டலங்களாகக் காட்சி அளித்தன!  பகுத்தறிவு முழக்கங்கள், இன உணர்வு தூண்டும் எழுச்சிக் கோஷங்கள் இவற்றின் மயமாகவே பேனர்கள் காட்சி அளித்துப் புத்துணர்வைத் தூண்டின!  நகரையே குடைபிடித்து, சூரியவெப்பத்தைப் பூமித்தாயின் மீதுபட்டு வருத்தாது பாதுகாத்தன!

பகுத்தறிவுத் தந்தையே வருக என பாருக்குக் கூறும் பேனர்கள் ஒரு பக்கம்!  சூத்திர அரசு எனச் சூளூரைத்த கலைஞரே வருக எனக்கூறும் வரவேற்புப் பேனர்கள் ஒரு புறம்!  அறிவை வில்லாக்கி ஆற்றலை அம்பாக்கி, ஆரியத்தை அழிப்போம் வாரீர் வீரர்கள்!  என எழுச்சி முரசுகொட்டும் பேனர்கள் ஒருபுறம்.  இன்னோரன்ன எழுச்சிகள் கொப்பளிக்கும் கருங்கடலாய் தஞ்சை மாநகரம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.

காற்றில் கலந்து சலங்கை ஒலி என இசை கூட்டும் நீரருவியின் சலசலப்பு ஓசைபோல கழகக் கொடி தோரணங்கள் எங்குநோக்கினும் காற்றில் கைகோர்த்துப் பறந்தாடி ரீங்காரம் செய்து கொண்டு இருந்தன.  எத்திசை நோக்கினும் கழகக்கொடிகள்- பேனர்கள்- கருஞ்சட்டை வீரர்களின் பவனிகள். இவற்றின் ஒட்டு மொத்தக் கூட்டுத்தொகையாக தஞ்சை நகரம் காட்சி அளித்து தன்புகழில் மேலும் ஒளி முத்திரைகளைப் பதித்துக் கொண்டுவிட்டது.

காலை முதற்கொண்டே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டப் பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாகக் கழகத் தோழர்கள் நகரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து- நகர ஒப்பனைகளில் தங்களை ஒப்படைத்து தஞ்சைக் கோட்டத்தில் கழகத்தின் வலுவைப்பற்றிப் புளகாங்கிதத்துடன் பேசிக்கொண்டே இருந்தனர்.  ஸ்பெஷல் பஸ்கள், லாரிகள், வேன்கள், மோட்டார்கள், சைக்கிள்கள்-இன்னும் என்னென்ன வாய்ப்புகள் உண்டோ அவ்வளவையும் பயன்படுத்திக் கொண்டு கருஞ்சட்டைப் பட்டாளம் தஞ்சை நகரை மக்கட் பிரளயத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

இனி ஒரு நிகழ்ச்சி நடக்குமோ இதுபோல் இனியும் எனும் ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொருவரின் இதயத்திலும்! அவ்வளவு பிரமாண்டமான நிகழ்ச்சி;  அவ்வளவு பிரமாண்டமான ஏற்பாடுகள், அவ்வளவும் மக்கட் கடலின் பிரமாதம்!

தங்களை வாழவைத்த தந்தைக்குக் கார்அளிப்பு, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைவிட இந்த உடலும் உயிரும் இருந்து என்ன பயன் என்ற நன்றி உணர்வின் உந்துதலாலே, தஞ்சை மக்கட் கடலிலே மிதந்த தெப்பமாகிவிட்டது- நன்றி உணர்வின் சின்னமாகிவிட்டது.

நெடுவாக்கோட்டை திருமணத்தை முடித்துக் கொண்டு தந்தை பெரியார் அவர்கள் நண்பகல் 12 மணிக்குத் தஞ்சை பெரியார் இல்லத்திற்கு வருகை தந்தார்கள். தங்களை வாழ்வித்த தானைத்தலைவர் வந்தடைந்த செய்தி கேட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாரை சாரையாக வருகை தந்த ஆயிர ஆயிரக்கணக்கான கழகக் குடும்பத்தவர்கள், அரசு அலுவலர்கள், வணிகப் பெருமக்கள் தந்தையைச் சந்தித்து, வணக்கங்கள் பொழிந்து, மலர்மாலைகள் சூட்டி, அன்புக் காணிக்கைகள் குவித்து தங்கள் நன்றிப் பெருக்கைக் கரை உடைத்து ஓடச் செய்து காட்டினர்.

சரியாக மாலை 5-45 மணிக்கு ஊர்வலம் தஞ்சை மோரிஸ் கார்னரில் இருந்து புறப்பட்டது.  அய்யாவிற்கு அளிக்கப்படும் புது வேன் ஊர்வலத்தின் நடுவிலே வந்தது.

இதே தஞ்சை மண்ணிலே எத்தனை எத்தனையோ மன்னர்கள் எல்லாம் படை வீரர் புடைசூழ பவனி வந்திருக்கின்றனர்.  அந்தச் சரித்திரப் பெருமை எல்லாம் இந்த வரலாற்றுத் தலைவரின் வீர உலா வெள்ளத்தின் முன்னே கரைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.  ஆயிர ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைப் பட்டாளம், பெண்கள் படை, மாணவர் படை சூழ நமது வைக்கம் வீரர் பவனி வந்த காட்சியைப் பார்க்க வாய்ப்பற்ற கண்கள் ஒரு சரித்திரப் பெருமையை இழந்து விட்டன என்றே சொல்லவேண்டும்.

எத்தனைப் பெரிய உற்சாகம்! எத்தனைப் பெரிய வீர உணர்ச்சி கொப்பளிக்கும் வீர முழக்கங்கள்! எத்தனையோ சரித்திரப் பெருமைகளை எல்லாம் தன் புகழ்முடியில் சூட்டிக் கொண்ட தஞ்சை, இன்றைக்கு ஒரு உச்சத்தில் தன் புகழை நங்கூரம் பாய்ச்சிக் கொண்டுவிட்டது.  பகுத்தறிவு பீறிடும் உணர்ச்சி முழக்கங்கள் விண்ணைப் பிளந்து கூறுபோட்டன.  அறுபது பஸ்கள், லாரிகள், டிராக்டர்கள், பிளசர்கள் இவற்றில் எல்லாம் மக்கள் வெள்ளம் வழிந்தோட ஊர்வலம் தஞ்சையின் அகன்ற வீதிகளில் கரைபுரண்டு ஓடியது.

எங்கு பார்த்தாலும் மக்கட்கடல் – அவர்தம் கரங்களிலே கழகக் கொடிகள்!  கழகக் கொடிகள்!!  வண்ண வண்ணவாண வேடிக்கைகள் தந்தை பெரியார் வாழ்க!  என்ற வாசகங்களுடன் விண்ணில் வெடித்துத் தோன்றி மறைந்தன!

தஞ்சை பாண்டு வாத்தியம், கிளார்னட் இசைக்குப் புகழ்பெற்ற ஒன்றல்லவா!  ஊர்வலத்தின் முன்னே அவர்கள் கலைத்திறனைக் காட்டிச் சென்றனர். மதுரை அறிவுப் புரட்சிப் பாசறை செல்வா குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை, ஊர்வலத்தில் களைகூட்டியது.  குறவன் குறத்தி வேடங்கள், கழகத் தோழர்களின் மயிர்க்கூச்செறியும் அலகுக் காவடிகள், மயில் டான்ஸ், தீப்பந்தச் சுழல் விளையாட்டுகள், சிலம்பு விளையாட்டு, பொய்க்கால் குதிரை ஆட்டம், எண்ணிக்கையற்ற தீச்சட்டி எடுப்புகள் இன்னோரன்ன சிறப்புகள் சூழ, கழகத் தோழர் திரு. சாமிநாதன் யானை மேல் கழகக் கொடியைக் கையில் ஏந்தி முன் செல்ல, தஞ்சை புதுப் பரணியை எழுதிவிட்டது.

ஊர்வலத் தடத்தின் மருங்கில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு நின்று, தமிழர் தலைவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்ததுடன், மலர் மாலைகள் அணிவித்தும், அன்பளிப்புகள் அளித்தும் தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர்.

ஊர்வலம் தொடங்குமுன் சரியாக 4.-15 மணிக்கு, கழகத் தோழர்கள் புடைசூழ கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், மறைந்த மாவீரர், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டைத் தளபதி அழகிரி, முன்னாள் தஞ்சை நகர கழகத் தலைவர் ஆளவந்தார், ஜாதி ஒழிப்பு வீராங்கனைகள் லட்சுமி அம்மாள், பரிபூரணத்தம்மையார் ஆகியோருக்கு மலர்வளையம் வைத்து, கழகத்தின் சார்பில் தம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

ஊர்வலம் மோரீஸ் கார்னரில் தொடங்கி காந்திஜி ரோடு, கீழவாசல், கீழ ராஜவீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக திலகர் திடலை இரவு 8 மணிக்கு வந்தடைந்தது.
மேளதாளக் கொட்டு முழக்க இசையோடு அதிர்வேட்டுகள் விண்ணைக் கிழிக்க, பக்திப் புரட்டின் முகமூடியைக் கிழிக்கும் விளக்க நிகழ்ச்சிகளோடு, கருஞ்சட்டை மறவர் படை புடை சூழ, கழகத் தோழர் யானையின் மீது அமர்ந்து கழகக் கொடியை ஏந்திச் செல்ல மலர் மாலைகளோ மலை முகடுகளோ என மலைக்கும் வண்ணம் மலர்மாலை மரியாதைகள் வழிநெடுகப் பெற்று அய்யா அவர்கள் வீதி உலா வந்து திலகர் திடலை அடைந்த காட்சி, அய்யா அவர்கள் ஒரு கட்சித் தலைவர் அல்ல, -நாட்டின் பொதுத் தலைவர், -இனத் தலைவர் என்ற பேருண்மையை நிரூபணமாக்கிக் காட்டிவிட்டது.

இடைஇடையே மழை, ஊர்வலத்தில் தன் சலசலப்பைக் காட்டியது என்றாலும் கருஞ்சட்டைப் படையிடம் அதன் சலசலப்புப் பலிக்கவில்லை!  திலகர் திடல் எல்லாம் ஒரே மக்கள் மயம்.  தரையா தலையா என்று கணக்கிட முடியவில்லை!  எங்கும் மக்கள்!  மக்கள்!! மக்கட்கடல்!

திடல் பற்றி எரிந்தது போல் ஒளிவிளக்குகள் கண்ணைப் பறித்தன!  விளக்குக் கம்பங்களில் எல்லாம் கழகக் கொடிகள் வெற்றி விழாவை நடத்திவிட்டோம் என்ற இறுமாப்பில் விறுவிறுப்புடன் பறந்தன!  புதுவாழ்வு தமிழருக்கு விடியப் போகிறது என்ற வினயமும் அதில் தென்பட்டது.  திலகர் திடலிலே அய்யா அவர்களுக்கு அளிக்கப்படும் நடமாடும் குடிலின் முழுத் தோற்றமும் பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம், கதவுகள் திறக்கப்பட்டுப் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.  அய்யா அவர்கள் வேனில் இருந்தவாறே ஒலிபெருக்கியில் பேசும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டதைப் பொதுமக்கள் பரவலாகப் பாராட்டிப் பேசிச் சென்றனர்.

25.8.73 அன்று இரவு 7 மணி அளவில் சென்னை புது வண்ணாரப்பேட்டை திராவிடர் கழக சார்பாக, புது வண்ணாரப்பேட்டை திராவிடர் கழக 22ஆம் ஆண்டு விழாவானது மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.  தந்தை பெரியார் அவர்கள் தமது புதிய வேனையே மேடையாகக் கொண்டு, முதல்முதலாக பொதுக்கூட்டத்தில் பேசினார்கள். விழாவில் நானும் கலந்து கொண்டேன்.  கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் பலராமன் அவர்கள் தலைமை வகித்து, மு.பெ.வீரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து, குமாரி பிரபாவதி பி.ஏ., சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் பி.ஈ. பக்தவச்சலம், சென்னை மாவட்ட தி.க. தலைவர் டி.எம். சண்முகம் ஆகியோரும் பேசியபின்பு விழாவில் நான் சிறப்புரை நிகழ்த்தினேன்.  முன்னதாக அய்யா அவர்கள் பேசும்பொழுது இன்றைய தினம் 22 ஆவது ஆண்டு விழா என்ற பெயரால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.  நான் சொல்வதை நம்பாதீர்கள், ஆராயுங்கள்; சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்.  மனித சமுதாயத்தொண்டு செய்கிறவனுக்கு நாட்டுப் பற்றோ, ஜாதிப் பற்றோ இலக்கியப் பற்றோ எந்தப் பற்றும் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *