மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்

ஜூன் 16-30

தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை – காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான – அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே எளிதில் தெரிந்து விடுமே! பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குத் தெரியவில்லையா? படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தந்தை பெரியார் கூறியது சரியாகி விட்டதே!

அதிகாரிகளா அழுக்கு மூட்டைகளா இவர்கள்?

2) இரண்டாவதாக அரசு அலுவலர்கள் – இந்தியா மதச் சார்பற்ற நாடு (Secular State) என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்தினால் மழை பொழிந்து தீர்த்து விடுமா?

மக்களுக்குத் தேவை என்பது கடவுள்களுக்குத் தெரியாதா? பூஜை செய்தால்தான் கடவுள் மனம் திறப்பாரா? அப்படி என்றால் கடவுள் மனம் கல்லா? கருணையே உருவானவன் கடவுள் என்பது எல்லாம்  புனை சுருட்டுதானா?

வருண பகவானுக்காக யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது இந்து மதத்தின் ஏற்பாடு; யாகம் மூலம் பார்ப்பனப் புரோகிதர்களுக்கு நல்ல வருவாய்க்கிட்டும் அல்லவா! மக்களின் மூடத்தனம்தானே அவர்களுக்கு முதலீடு.
1992இல் மதுரா நகரில் 86 வயதான முதியவர் ஒருவர் யாகம் நடத்தி மழையை வரவழைக்கிறேன் என்று சவால் விட்டார். அந்தச் சமயத்தில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அதனைக் கண்காணித்தனர். ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதை டில்லியிலிருந்து வெளிவந்த நேச்சர் (ழிணீக்ஷீமீ) என்ற இதழில் கே.எஸ். ஜெயராமன் கட்டுரை ஒன்றை எழுதியதை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

3) அரசு என்பது மதச் சார்பற்றது – அது எந்த மதச் சடங்கோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

உச்சநீதிமன்றத்தில் பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு மாநில அரசும், மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருப்பதோ, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசமைப்புச் சட்டத்தில் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசு தலைவருக்கு உரிமை உண்டு என்று 1994 மார்ச்சில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் கூறியுள்ளது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடப்பது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

மழை பொழிவதற்கு இந்து மதத்தின்படி பூஜை நடத்த சொல்லி ஆணை பிறப்பித்த அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த சுற்றி அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திராவிடர் கழகம் தொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51கி(லீ) என்ற பிரிவு என்ன கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ பிரிவில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதில் எட்டாவது கடமையில் – 51ஏ(எச்) அறிவியல் உணர்வையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் போற்றி வளர்க்க வேண்டும். To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reforms 51A(h),  என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமானது – மழைக்காக சிறப்புப் பூஜை நடத்துவது, யாகம் நடத்துவது என்பது வெளிப்படை; இந்த வகையிலும் தமிழ்நாடு அரசு, அதன் நீர்வளத்துறை சட்டத்தை மீறி இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்; தவறு செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இல்லையெனில் அரசும் இதற்குப் பொறுப்பு ஏற்க நேரிடும். அடுத்த கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையில் விரைவில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *