புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கம் ஆகியவை ஏப்ரல் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வுகள் 25.4.2015 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.
தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் வடமொழியான சமஸ்கிருதம் நுழைந்து ஆதிக் கத்தை செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே, தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காப்பதன்மூலம் சுயமரியாதை வாழ்வாக சுக வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையில் அறிஞர் பெருமக்களின் உரைகள் அமைந்தன.
சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் முதல் அமர்வாக பேராசிரியர் ப.காளிமுத்து தொடக்கவுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் வரவேற்று உரையாற்றினார்.
சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக மொழி இலக்கியம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிதை என்கிற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், புனை கதை என்கிற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்மகன், எழுத்தும் ஒலிபெயர்ப்பும் என்கிற தலைப்பில் முனைவர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் படத்தினைத் திறந்துவைத்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பேசினார். நுண்கலைகளில் நாட்டுப்புறப் பாடல்கள் தலைப்பில் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசினார். தொடர்ந்து படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மனோன்மணீயம் பெ.சுந்தரனார் படத்தை பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன், இராவண காவியம் புலவர் குழந்தையின் படத்தை புலவர் வெற்றியழகன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. திரைப்படம் குறித்து இதழாளர் சுபகுணராஜன், தொலைக்காட்சிகள் குறித்து இதழாளர் கோவி.லெனின், நாளிதழ், பருவ இதழ் குறித்து முனைவர் ஏ.ராஜசேகர் உரையாற்றினார்கள்.
அறிஞர் அண்ணாவின் படத்தை முனைவர் பெ.ஜெகதீசன் திறந்து வைத்து உரையாற்றினார்.
கல்வி குறித்து பேராசிரியர் அருணன், வரலாறு குறித்து பேராசிரியர் கருணானந்தம் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
பொது அரங்க நிகழ்வுகள் தொடங்கின. முதல் நிகழ்வாக குயில்மொழி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் களம் இறைவி வரவேற்றார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன்,
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்து பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் தலைமையுரை ஆற்றினார்.
மறைமலையடிகளார் படத்தைத் திறந்து வைத்து சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் உரை யாற்றினார்.
முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக வட சென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநில பகுத்தறிவாளர்-கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர் வே.மதிமாறன் தொடக்க உரையாற்றினார்.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் படத்தை திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு திறந்து வைத்து உரையாற்றினார். சிற்றிதழ்கள் குறித்து இதழாளர் சுகுணா திவாகர், கல்வெட்டு குறித்து பத்மாவதி, நாடகம் குறித்து இதழாளர் கவின்மலர் உரையாற்றினார்கள்.
விபுலானந்த அடிகள் படத்தைத் திறந்துவைத்து மு.பி.பாலசுப்பிரமணியம் உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வில் வாழ்வியலில் குடும்பச் சடங்குகள் குறித்து பேராசிரியர் காஞ்சி கதிரவன், பன்மொழிப்புலவர் கா.அப்பாத்-துரையார் படத்தைத் திறந்துவைத்து எழுத்தாளர் முகம் மாமணி, வாழ்வியலில் பெண்ணியம் குறித்து முனைவர் பத்மாவதி விவேகானந்தன் உரையாற்றினார்.
அறிவியல் என்ற பொதுத் தலைப்பிலான அரங்கில் உணவு குறித்து மருத்துவர் சிவராமன், கடல்சார் அறிவியல் குறித்து ஒரியா பாலு, மருத்துவம் குறித்து முனைவர் இர.வாசுதேவன், சூழலியல் குறித்து சூழலியலாளர் கோ.சுந்தரராஜன் ஆகியோர் பேசினர். பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து எழுத்தாளர் மஞ்சை வசந்தன் உரையாற்றினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் என்கிற தலைப்பில் கவிஞர் புரட்சிக் கனல், இது எனது எனுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் என்கிற தலைப்பில் கவிஞர் தமிழமுதன்,
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் என்கிற தலைப்பில் கவிஞர் சொற்கோ ஆகியோர் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை எடுத்துக்காட்டி கவிதை பாடினார்கள். விழாவின் முடிவில் பொது அரங்கம் நடைபெற்றது. வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்றார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். வழக்குரைஞர் அருள்மொழி உரையைத் தொடர்ந்து திராவிட தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியபோது,
நம்முடைய இன எதிரிகள் இந்த நாட்டில் மீண்டும் மதவாத ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று சொல்லி, அதற்காக மிகப்பெரிய அஸ்திரங்களையெல்லாம் ஏவிவிட்டு, சமஸ்கிருத ஆதிக்கம் என்று சொல்லும்போது மொழி, பண்பாடு,
ஆதிக்கம் என்று பல்வேறு துறைகளிலே ஊடுருவி இருக்கிறது என்று இருக்கிற நேரத்திலே நம்முடைய இன எதிரிகள் சொல்லுகிற நேரத்திலே அவர்கள் சமஸ்கிருத மயமாக்கும் கலாச்சாரம் (Sanskritic Culture) என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
எந்தப் பெயரைச் சொன்னாலும் சமஸ்கிருத ஆதிக்கம்தான். எந்த ஆதிக்கத்தையும், எந்தக்குடிமகனும் ஏற்றுக் கொள்ள முடியாது இந்தக் காலக்கட்டத்திலே. ஒருவருடைய கருத்து என்பது வேறு, ஆதிக்கம் செலுத்துவது என்பது வேறு.
சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கம் என்று சொல்கின்ற நேரத்தில், ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பல பேர் இதனை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஏதோ சமஸ்கிருத மொழிக்கு எதிர்ப்பு என்று புரிந்துகொள்ளக்கூடும்.
சமஸ்கிருத மொழிக்கு எதிர்ப்பு என்பதல்ல; சமஸ்கிருத மொழி என்றுகூட நாம் குறிப்பிடவில்லை. சமஸ்கிருத ஆதிக்கம் என்று சொல்கின்றபொழுது, இது சமஸ்கிருதப் பண்பாடு, மொழி, கலை ஆதிக்கம் பல்வேறு துறைகளிலேயே ஊடுருவி இருக்கிறது;
நம்முடைய இன எதிரிகள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு மதவாத ஆட்சியை நிலை நாட்டவேண்டும் என்று சொல்லி, அதற்காக மிகப்பெரிய ஒரு அரசியல் அஸ்திரங்களை-யெல்லாம் இன்றைக்கு ஏவிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் sanskritic culture என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்து-கிறார்கள்.
எந்தப் பொருளிலே சொன்னாலும், சமஸ்கிருத ஆதிக்கத்தை, எந்தக் குடிமகனும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருவருடைய கருத்து வேறு; ஆனால், அவர் ஆதிக்கம் செலுத்துவது என்பது வேறு.
நாம் கிளையை வெட்டுகிறவர்கள் அல்ல; அல்லது இலையைக் கத்தரிக்கின்றவர்களும் அல்ல. விஷ மரத்தின் வேருக்குப் போகிறவர்கள்.
அதுபோலவே, திராவிட வேர்கள், இந்தச் சமுதாயத்தை அரிப்பதற்கு நேற்று நண்பர்கள் சொன்னதைப்போல புழுக்கள் வேர்ப் புழுக்கள் உள்ளே சென்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட காலத்திலிருந்து மிகப்-பெரிய இனப்போராட்டம்,
மதப்போராட்டம், ஜாதிப் போராட்டம் என்ற அடிப்படையில், இது அத்தனைக்கும் அடித்தளம் வழங்கிய தீமை ஒன்று உண்டென்றால், அதுதான் சமஸ்கிருத, பார்ப்பனீய, கலாச்சாரப் பண்பாட்டுப் படையெடுப்பு.
சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் என்ன? தமிழ், செம்மொழித் தமிழ் என்றெல்லாம் நாம் இவ்வளவு பெரிய முயற்சி எடுத்து எல்லாவற்றையும் செய்தோம். கலைஞர் அவர்கள் பாடுபட்டு, முயற்சி எடுத்து, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தார்.
தமிழ் செம்மொழி என்று வந்த பிறகு, மற்றொரு அறிவிப்பு வருகிறது; சமஸ்கிருதமும் செம்மொழி என்பதுதான் அந்த அறிவிப்பு! இதிலிருந்து என்ன தெரிகிறது? இதுவரையில் செம்மொழி அந்தஸ்து சமஸ்கிருதத்துக்கு உண்டு என்று தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருந்திருக்கின்றனர். எல்லாரும் அதனை நம்பினார்கள்.
அதுவரையில், நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே -பார்ப்பன புல்லுக்கு, சமஸ்கிருத புல்லுக்கும் பாய்ந்தது திராவிட இயக்கத்தால்-தான். அந்தச் செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அதற்கு முன்பு அந்த சட்டப்பூர்வ அந்தஸ்து கிடையவே கிடையாது.
தாலியைப்பற்றி சொல்கிறார்களே, அது சடங்கு என்று சொல்கிறார்களே, எதிலாவது ஒன்றைக் காட்டட்டும். சென்னை உயர்நீதி-மன்றத்தில் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார் நீதிபதி.
அந்தத் தீர்ப்பு இன்று இணையத்தில் வந்திருக்கிறது.
தாலியகற்றல், மாட்டுக்கறி விருந்து நடத்த நமக்கு உரிமை உண்டு என்று 89 பக்கத் தீர்ப்பை எழுதியிருக்கிறார். அக்கு வேர் ஆணிவேராக அந்த நீதிபதி அதிலே அலசி ஆராய்ந்-துள்ளார்கள் சொல்லியிருக்கிறார்.
அவர்களுக்கு இருக்கிற உரிமைகளுக்கு, அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க-வேண்டுமே தவிர, அவர்களை எதிர்த்துக் கலவரம் செய்கின்றவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தால், அவன் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடந்திருக்கிறான் என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
சமஸ்கிருத கலாச்சாரத்தைச் சொல்-கிறார்களே, அந்தக் கலாச்சாரத்தில்கூட, ஆதியில் தாலி இருந்திருக்கிறதா? இந்தச் சடங்குகள் உண்டா? அந்தக் கலாச்சாரத்தை நீங்கள் எல்லோரும் இன்றைக்குக் கடை-பிடிக்கின்றீர்களா? சுயமரியாதைத் திருமணத்தினுடைய அடிப்படைத் தத்துவம் என்ன? அர்த்தமற்ற சடங்குகள் எல்லாம் தேவையில்லை; மணமக்களின் சம்மதம்தான் முக்கியம்.
சுயமரியாதைத் திருமணங்களில் இரண்டு குடும்பங்கள் இணைகின்ற நேரத்தில், ஒரு குடும்பம் இந்தக் கொள்கை உடையது, இன்னொரு குடும்பம் இந்தக் கொள்கையை ஏற்காத குடும்பம். மற்ற சடங்குகள் எல்லாம் இல்லை; சிலர் குறிப்பிட்ட கிழமைகளில் திருமணத்தை நடத்திட விரும்புகிறார்கள்.- நாங்க அத்திருமணத்திற்கும் சென்று நல்ல நாளா? கெட்ட நாடா? என்று விவரித்துப் பேசுகிறோம்.
மூடநம்பிக்கை பற்றித் தெளிவுப்படுதுகிறேன். அதைக் கேட்டவுடன், மக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. இப்படி வளர்ந்து வளர்ந்துதானே இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது.
சுயமரியாதைத் திருமணத்தி–னுடைய தத்துவமே அதுதானே! அதனால்-தானே, புதிய சட்டத்தில் Tying of Thali என்று சொல்லும்பொழுது, ணீஸீபீ என்பதற்குப் பதில், ஷீக்ஷீ என்று போடு என்று தெளிவாகச் சொன்னார் பெரியார். கட்டலாம், கட்டாமல் இருக்கலாம்.
இந்தப் பண்பாட்டுத் துறை இருக்கிறதே, இதைத்தான் நம்முடைய புரட்சிக்கவிஞர் அவர்கள் தெளிவாகச் சொன்னார்.
தமிழனே இது கேளாய் – உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்
தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;
தமிழே ஞாலத்தின் தாய்மொழிப் பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
தமிழனே இது கேளாய்
வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்..!
என்று முடித்தார்.
இதுதான் சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்-பினுடைய அடிப்படை. இவ்வாறு உரையாற்றிய ஆசிரியர் மேலும், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை. இனிமேல் முழுக்க முழுக்க சமுதாயப் பிரச்சாரம் தான்; முழுக்க முழுக்க இனிமேல் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம்தான்; முழுக்க முழுக்க இனிமேல் கடவுள் ஒழிப்புப் பிரச்சாரம்தான்;
முழுக்க முழுக்க மத ஒழிப்புப் பிரச்சாரம்தான்; மதவாத எதிர்ப்புப் பிரச்சாரம்தான், ஜாதி ஒழிப்பு பிரச்சாரம் தான், முழுக்க முழுக்க இந்த நாட்டின் மானமீட்புப் பிரச்சாரம்தான். ஆகவே வேறு பக்கம் எங்களுடைய சக்தி திரும்பாது.
ஒருமுனைப்-படுத்தப்படும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, அதைத்தான் பிரகடனமாக இந்தக் கூட்டத்தில் நான் அறிவிக்கிறேன் என்று உரையாற்றி முடிக்கும்போது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
காலத்தின் தேவை கருதிய இந்தக் கருத்தரங்கமும், ஆசிரியரின் உரையும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன.
Leave a Reply