மூடநம்பிக்கையின் முடைநாற்றம்
எச்சில் இலையில் உருளும் பக்தி
அடுத்தவர் உண்ட இலையிலிருந்து ஒரு சோற்றுப் பருக்கை தன் உடலில் பட்டாலும் பலர் பதறுவதைப் பார்த்திருப்போம். எச்சில் இலையில் தப்பித்தவறிக் கைபட்டாலும் அருவருப்புக் கொள்வார்கள். ஆனால், பக்தி என்று வந்துவிட்டால் இவையெல்லாம் பறந்தோடிப் போய்விடுகின்றன.
இங்கு ஏராளமான மூடநம்பிக்கைத் திருவிழாக்கள் இந்தியா முழுக்க நடைபெறுகின்றன.
மண்சோறு சாப்பிடுவது, குழந்தைகளை மண்ணில் போட்டுப் புதைத்து எடுப்பது, குழந்தைகளை மிதிப்பது, அரை ஆடையுடன் ஆபாசமாக உருளுவது,
ஆடுவது, நிர்வாண பூஜைகள் நடத்துவது, நரபலி கொடுப்பது என்று ஏராளமானவை உண்டு.
அந்தவகையில் அடுத்தவர் சாப்பிட்ட _அதிலும் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலையில் உருளுவது என்ற மூடநம்பிக்கையும் ஒன்று.
கருநாடக மாநிலம் மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியம் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்ற எச்சில் இலையில் உருளும் விழா நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த விழாவை உச்ச நீதிமன்றம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஒரு விழா தமிழ்நாட்டில் நடந்துவருவது மானக்கேடான நிகழ்வாகும்.
சித்திரை மாதத்தில் ஒவ்வோர் ஆண்டும் எச்சில் இலையில் உருண்டு புரளும் நிகழ்வு சதாசிவ பிரமேந்திராள் விழா என்ற பெயரில் கரூர் அருகே உள்ள நெரூரில் நடைபெற்று வருகிறது.
நெரூர் கிராமத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சதாசிவ பிரம்மேந்திராள் என்பவர் ஜீவசமாதி அடைந்தாராம். அவரது படத்தைக் கோவிலிலிருந்து அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு மணலில் இலைகள் போட்டு பார்ப்பனர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சாப்பிடுகின்றனர்.
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், எச்சில் இலையில் அரைகுறை ஆடைகளுடன் ஆண்களும் பெண்களும் உருளுவார்களாம். பின்னர், அந்த எச்சில் இலைகளை எடுப்பதற்கும் போட்டி போடுவர். இந்த ஆண்டு 101ஆவது ஆராதனை விழாவாம்.
இதுகுறித்து, அன்னதான நாளில் சதாசிவ பிரம்மேந்திரா ஏதாவது ஓர் இலையில் வந்து உண்ணுவார் என்றும், அனைவரும் சாப்பிட்ட பிறகு அந்த இலையில் படுத்து உருளுவதால் நினைத்த காரியம் நிறைவேறும், திருமணத் தடை,
குடும்பக் கஷ்டம், குழந்தைப் பேறு இன்மை ஆகிய அனைத்தும் நீங்கும் என்ற மூடநம்பிக்கையில் டில்லி, மும்பை, பெங்களூரு, கல்கத்தாவிலிருந்து பலரும் வந்து கலந்து கொள்வர் என நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க நடைபெறும் இத்தகைய மனிதத் தன்மையற்ற மனித மதிப்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் திருவிழா நிகழ்வுகளை _ குறிப்பாக எச்சில் இலையில் உருளும் விழாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த தளபதி பாண்டியன் வழக்குத் தொடர்ந்தார்.
ஜாதியையும் மூடத்தனத்தையும் நிலை நிறுத்தும் இத்தகைய சடங்குகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, தில்லி, கொல்கத்தா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் மக்கள் பங்கேற்கின்றனர். இது சுகாதாரக் குறைவையும் மனித மாண்புக்கு இழுக்கையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.
இந்திய அரசமைப்பு விதிகளின்படி மதிப்புமிக்க சுதந்திரமான வாழ்க்கை வாழ அனைவருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் இத்தகைய நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்க மனுவில் கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, இந்திய அரசு, கர்நாடக அரசு உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.
இதுகுறித்து வழக்குரைஞர் கிருபா முனுசாமி அவர்கள் கூறும்போது, இத்தகைய மூடநம்பிக்கை நிகழ்வுகளைத் தடை செய்வதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
* * *
துடைப்பத்தால் அடிப்பது நேர்த்திக் கடனா?
பெண் கொடுப்பதில், எடுப்பதில், சொத்துக்காக… என மாமன் மச்சான் சண்டை வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். சில நேரங்களில் விளக்கமாற்றுப் பூசையும் கிடைக்கும்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாமன், மைத்துனர் உறவு முறையினர் பழைய துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
உடல் முழுவதும் சேற்றினால் பூசிக் கொண்டு வேடமிட்டு பழைய துடைப்பத்தால் அடித்துக் கொள்வார்களாம். இப்படிச் செய்தால் சுபகாரியங்கள் நடைபெறும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படுகிறதாம்.