ஈ, கொசுவெல்லாம் பேயா வந்தால்…

மே 16-31

இவ்விடம் அரசியல் பேசலாம்

ஈ, கொசுவெல்லாம் பேயா வந்தால்…

-கல்வெட்டான்

தோழர் சந்தானத்தின் சலூனுக்குள் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“என்ன முத்து, உங்களைப் போன வாரம் பார்க்க முடியல? கேட்டால் பிரதமர் மாதிரி டூர் அடிக்கிறதா சந்தானம் சொன்னார்! உண்மைதானா?” என்று சிரித்தபடியே கேட்டார்.

“அப்டீலாம் இல்ல சார், அவரளவிற்-கெல்லாம் என்னால முடியாது சார்!” எனப் பவ்யமாக ஜோக்கடித்தார் முத்து.

“வந்ததும் வராததுமா கலாய்க்க ஆரம்பிச்சுட்டிங்களா? பிரதமர் பாவம் மகேந்திரன் சார்… கடைசியா வச்சுக்கலாம்… நீங்க காஞ்சனா படம் போயிருந்தீங்களாமே? தியேட்டர் பக்கம் பார்த்ததா முத்து சொன்னார்!”

“முத்து சொல்லிட்டாரா? ஆமாம் தோழர், வீட்டில் பசங்க ஒரே அடம்! அதான் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்.”

“பேய்ப் படத்துக்கெல்லாமா போனீங்கன்னு நான் கலாய்ப்பேன்னு நினைச்சு பிள்ளைங்க மேல பழியப் போடுறீங்க போல! அதுசரி, படம் எப்படி தோழர்?”

“வியாழக்கிழமையா இருந்ததால மொத்தமே பத்துப் பேர்தான் தோழர் தியேட்டர்ல இருந்தாங்க! காஞ்சனா படத்துல பேயி பயமுறுத்துதோ இல்லையோ, அவ்ளோ பெரிய தியேட்டருக்குள்ள மொத்தம் பத்துப் பேர்தான் இருக்கோம்ங்கறதே பிள்ளைங்களைப் பயமுறுத்திடுச்சு தோழர்!”

“அட! இது நல்ல லாஜிக்கா இருக்கே! அப்போ அந்தப் படத்துல பயப்புடுற மாதிரி எதும் இல்லைங்கறீங்களா?”

“நிறைவேறாத ஆசையோட செத்துப்-போனவங்க பழி வாங்குறதுதான நம்மூரு பேய்ப் படங்களோட அதரபழசான லாஜிக்கு! அதுவும் காஞ்சனா முதல் பாகத்துல இருந்த அதே கான்செப்ட்ட கொஞ்சம் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து காஞ்சனான்னு மாத்திட்டாங்க!”

அப்போது இடைமறித்த முத்து, “சார், நிறைவேறாத ஆசையோட செத்துப் போனவங்களோட ஆத்மா பேயா அலையும்ங்கறது உண்மையா சார்?” என அப்பாவியாகக் கேட்க,

“அப்படியெல்லாம் ஒவ்வொருத்தரும் அலைய ஆரம்பிச்சால் செத்துப் போன அத்தனை பேரும் பேயாத்தான் திரிஞ்சாகணும்! ஏற்கெனவே மக்கள்தொகை கண்ணக் கட்டுது, இதுல அம்புட்டுப் பேரும் பேயா திரிஞ்சா என்னத்துக்காவுறது?” என சந்தானம் கொளுத்திப் போட,

“அதென்ன மனுஷங்களுக்கு மட்டும்தான் நிறைவேறாத ஆசை இருக்கணுமா? இதோ இப்பொ பட்டுன்னு அடிச்சுப் போட்ட கொசுவுக்குக்கூடதான் என்னோட உடம்பிலிருந்து ரத்தத்தை உறிஞ்சணும்னு ஆசை இருந்துச்சு… நான் அதைச் சாகடிச்சுட்டேன்! இப்போ அது பேயா வந்து என்னோட ரத்தத்தை உறிஞ்சிப் பழி வாங்குமா என்ன?”

“நான் ஈ படத்துல மாதிரி பழி வாங்குமோ சார்?”

“நாம கொல்ற எறும்பு, கொசு, பேன், மூட்டைப்பூச்சி, கரப்பான், எலின்னு அம்புட்டும் நமக்கு எதிரா பழி வாங்க வந்துச்சுன்னா நம்ம கதியை நினைச்சுப் பாருங்களேன்! அதுமில்லாம, நாம சாப்பிடுற ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழி, கௌதாரின்னு ஒவ்வொன்னும் பழிவாங்கப் புறப்பட்டால் நம்ம கதி என்னாகும்?”

“நம்ம கதிய விடுங்க சார், ஆட்டுக்கறிக் கடை, கோழிக்கறிக் கடை வச்சிருக்கறவங்களோட கதியை நினைச்சுப் பாருங்க சார்!” என குண்டைத் தூக்கிப் போட, சிரிப்பால் நிறைந்தது!

“ஆனாலும் நம்ம காஞ்சனா இயக்குநர் படுகில்லாடிதான்! தன்னோட முதல் பாகத்துல இந்து, முஸ்லீம், திருநங்கைகள்னு மூன்று தரப்பையும் எடுத்துக்கிட்டு கலந்துகட்டி பெருமைப்படுத்திக் காசு பார்த்தார்.

எந்த அமைப்புமே அவர் மேல குறை சொல்ல முடியல. இப்போ இந்த இரண்டாம் பாகத்துல இந்து, கிறிஸ்தவம்னு ரெண்டையும் எடுத்து கலந்துகட்டி கதை பண்ணிட்டார்! இதுக்கும் எதிர்ப்பு இல்ல. நம்ம கமல்தான் எந்தப் படம் எடுத்தாலும் மத அமைப்புகளிடம் மாட்டிக்-கிட்டு ரிலீஸ் பண்றப்ப முழி பிதுங்குறார்!”

“பின்ன லாரன்ஸ் மாதிரி எம்மதமும் சம்மதம்னு சொல்லாமல், எனக்கு மதமோ கடவுளோ இல்லைன்னு சொன்னால் அதுக்காகவே மத அமைப்புகள் நொட்டை கண்டுபிடிச்சு கிளம்பிட மாட்டாங்களா?”

“அண்மையில் மாட்டுக்கறி சம்பந்தமா கமல் விட்ட அறிக்கையில் பார்ப்பனக் கூட்டத்தைக் கிழிச்சுத் தொங்க விட்டுட்டார் பார்த்திங்களா தோழர்?”

“அப்படியா என்னன்னு?”

“பார்ப்பனர்களும் புலால் உண்ணக்-கூடியவர்களாக இருந்தவர்கள்தான் என்றும், அதற்கான ஆதாரங்கள் இருக்குன்னும் சொன்னார். அதைவிட முக்கியமான ஒரு வரி என்னன்னா, நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்றாலும் நான் என்ன சாப்பிடணும்ங்கறதைத் தீர்மானிக்கிற வேலை அரசாங்கத்தினுடையது இல்லை”ன்னு பொட்டுல அடிச்சாப்புல சொல்லியிருந்தார்!

“சூப்பர், சூப்பர் தோழர்!”

“இந்த காஞ்சனா மாதிரியான படங்களில் கிராபிக்ஸ்ல பேய்களை வரவழைக்கிறதும், கிராபிக்ஸ்ல சாமிகளை வரவழைக்கிறதும், பேச வைக்கிறதும், டான்ஸ் ஆட வைக்கிறதுமா இவங்க பண்ற கூத்துக்காகவாவது “எங்கிருந்தாலும் சாமிகளும் பேய்களும் மேடைக்கு வரவும்”னு அறிவிக்கத் தோனும் தோழர்!”

இந்த கிராபிக்ஸ் வேலையெல்லாம் இன்னமும் “ஆத்தா நான் வந்திருக்கேன்டா!” “நான் முனி வந்திருக்கேன்டா!”ன்னு ஆடியோவாத்தான் சாமியாடுறவங்களும், பேயாடுறவங்களும் சொல்றாங்களே தவிர இன்னும் வீடியோ விஷூவலில் சாமியோ பேயோ வரலைன்னா இப்படி கிராபிக்ஸ்லதான பண்ணியாக வேண்டியிருக்கு!

இல்லைன்னா ரஜினி, கமல் மாதிரி சாமி கேரக்டர்களையும் நெஜத்துல நடிக்க வச்சிருக்க மாட்டாங்க!”

“அதான! இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி ஆடியோவாகவே திரியுவாங்களோ!”

“என்ன பண்றது, நம்ம மோடி மாதிரி காலத்துக்குத் தக்கன மாறத் தெரியலையே! ஆட்சிக்கு வர்றதுக்கு முன்ன சுதேசி கோஷம் போட்டுட்டு இருந்தவர், இப்ப முழுக்க முழுக்க அந்நிய வரவேற்பு கோஷமும், முதலாளிகள் வாழ்த்துப்பாவும் பாடப் பழகிட்டார் பாருங்க!”

“அதேதான்… இப்பக்கூட சாலைப் பாதுகாப்புன்னு சொல்லி, விபத்துகளைக் குறைக்கிற போர்வையில மொத்த வாகனத் தயாரிப்பு, பழுது பார்த்தல், உதிரி பாகங்கள் விற்பனைன்னு அனைத்தையும் பெருமுதலாளிகள் வசம் ஒப்படைக்க ப்ளான் பண்ணிட்டார்! ஆக, சில்லறை வியாபாரம், வியாபாரிகள் என்ற வர்க்கமே இனி தலையெடுக்க முடியாதபடி முடிவு பண்ணிட்டார்.

அதென்னவோ ஆளும்வர்க்கம் எல்லாரும் இந்தியா ஏழை மக்கள் வாழும் நாடுங்கறத மறந்துடுறாங்க!”

“மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார், அந்தப் பயணத்தைப் பற்றி பராட்டினார்ங்-கறப்பவே நான் நினைச்சேன்! அதிகாரத்தி-லிருப்பவர்கள், எளிய மக்களின் வாழ்க்கை முறையை அனுபவிக்க நினைக்கும் போது இரண்டுவிதமான எண்ணத்தை அதிகாரவர்க்-கத்துக்கு வெளிப்படுத்துறாங்க… ஒன்று, மக்களோட மக்களா நாம இறங்கி வந்து பழகுறோம்னு நினைக்கிறது…

இன்னொன்னு, மக்களோட வாழ்க்கைத்தரம் நம்ம அளவுக்கு உயர்ந்துடுச்சுன்னு நினைக்கிறது! இதுல ரெண்டாவது சிந்தனைதான் அபாயம்! பொருளாதாரத்தில் அடிமட்டத்திலிருக்கும் மக்களைப் பற்றிய சிந்தனையை அறவே ஒழிச்சுடும்… முதலாளித்துவ சிந்தனைதான் எல்லாத்திலும் தலைதூக்கும்…”

“சரியாச் சொன்னிங்க தோழர்!”

“படியளந்த முதலாளிகளுக்கு ஆதரவா செயல்படும் நிலையிலிருந்து படியிறங்கி வந்து சாமான்ய மக்களுக்காகச் சிந்திக்கத் தொடங்கினால்தான் இந்தியா உண்மையில் முன்னேறும்… இல்லைன்னா நம்ம சாமான்ய மக்களோட நிலைமை, ஆடியோ ஆத்தா மாதிரிதான்! அந்தப் பெருமுதலாளிகள் கிராபிக்ஸ் ஆத்தா மாதிரி…

அந்த கிராபிக்ஸை நம்பி அதுதான் சாமின்னு கும்பிடுறவனுக்கும், நம்ம பிரதமரோட முதலாளித்துவ சிந்தனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை… ம்ம்ம்… எவ்ளோ வேகவேகமா அதிகாரத்துக்கு வந்தாரோ, அதே வேகத்துல சரிவை நோக்கிப் போயிட்டிருக்கார்! இனியாவது மக்கள் சுதாரிச்சுக்கணும்!”

“கண்டிப்பா… சுதாரிச்சுப்பாங்க தோழர். நம்பிக்கையிருக்கு!” என நிறைவு செய்தார் தோழர் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *