கண்டுபிடித்தது…கடவுள் அல்ல! 4
அறிவு தந்ததல்லவா ஆடியும் கண்ணாடியும்?
-மதிமன்னன்
விழிகள் பார்வைக்கும் படிப்பதற்கும் உதவுவன. பார்வைக் கோளாறுகள் சிலருக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. மனிதனைப் படைத்தது என்று கூறப்படும் கடவுளின் தயாரிப்புக் கோளாறு இது. சிலருக்குச் சாதாரணமாக 40_50 வயதுக்குமேல் பார்வைத்திறன் குறைகிறது.
இதனைச் சரி செய்திட கண்ணாடிகள் அணிகிறோம். இவற்றை மூக்குக் கண்ணாடி என்கிறோம். மூக்கின் மேல் பொருத்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் மூக்குக் கண்ணாடி எனப்படுகிறது.
முன்பு ஒரு கண்ணில் மட்டும் பொருத்திப் படிக்கும் பழக்கம் இருந்தது. இதனை ஒற்றைக் கண்ணாடி (Monocle) என்றனர்.
இந்த ஆடிகள் ஸ்நெல்ஸ் விதி (Snell’s Law)யில் அமைக்கப்பட்டவை. இப்ன் சாஹி எனும் ஈராக் நாட்டுக் கணித அறிஞர் இதற்கான கோட்பாட்டை 984ஆம் ஆண்டில் உருவாக்கினார். கண்ணாடி நூல் (Book of Optics) என்பதை எழுதிய மற்றொரு ஈராக்கிய அறிஞர் இப்ல் அல்ஹாதம் என்பவரின் கோட்பாட்டின்படி தற்கால கண் ஆடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒளி நேராகச் செல்கிறது என்றும், கண்ணில் உள்ள ரெடினா பகுதியில் ஆடி (லென்ஸ்) உருவங்களைப் பதிவு செய்யும் வகையையும் அவர் எண்பித்துக் காட்டினார்.
13ஆம் நூற்றாண்டில்தான் தூரப் பார்வைக்குக் குவி ஆடிகளும் கிட்டப் பார்வைக்குக் குழி ஆடிகளும் பயன்-படுத்தப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆடிகள் (Glass) கி.மு.2500க்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில், குறிப்பாக எகிப்தில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது அகழ்வு ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஆடி மணிகள் அணியப்பட்டிருந்தன.
சிலிகா மணல், கால்ஷியம் ஆக்சைடு, மக்னீசியம் சோடா ஆகிய நான்கின் கலவை 1500 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. இது ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காலம் இருந்தது.
ஆனால் 15ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு சாதாரண மக்களும் வாங்கும் வகையில் மலினமாகிவிட்டது. 1950இல் சர் அலஸ்டய்ர் பிகிங்டன் என்பார் கண்டுபிடித்த புதிய தயாரிப்பு முறையில் உற்பத்தி எளிதாக்கப்பட்டது.
நுண்ணிய பொருள்களையும் உருப்பெருக்கிக் காட்டக்கூடிய மைக்ராஸ்கோப் கருவி, லென்ஸ் எனப்படும் ஆடிகளை ஒன்றுக்குமேல் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. முதலில் தயாரிக்கப்பட்ட மைக்ராஸ்கோப் ஒரு ஆடியை மட்டும் பயன்படுத்தி ஒரு பொருளை ஆறு அல்லது பத்து மடங்கு வரைப் பெரிதாக்கிக் காட்டும் அளவில்தான் தயாரிக்கப்பட்டன.
இதில் உற்றுநோக்கும் கருவி ஒன்றினை வடிவமைத்தவர் இத்தாலியரான கலிலியோ கலிலி. இவர்தான் சூரியன் நிலையாக இருக்கிறது, பூமிதான் அதனைச் சுற்றிவருகிறது என்பதைக் கண்டு, அறிவித்து, கிறித்துவ மதப் பீடத்தால் தண்டிக்கப்பட்டு, பின் கண்டிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பதை நாம் அறிவோம்.
சிறிய துளை உள்ள மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களில் குருதி ஓட்டத்தை இந்தக் கருவியின் மூலம் கண்டு அறிந்தவர் இத்தாலி நாட்டவரான மார்செலோ மால்பிக் என்பவர். நெய்யப்பட்ட துணியில் எத்தனை நூல் இழைகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டுச் சொன்னவர் அந்தோனி வான் லீவன்ஹோக் எனும் டச்சு நாட்டவர்.
ஒரு கண்ணாடியை மட்டுமே பயன்படுத்தி இவர் வடிவமைத்த மைக்ராஸ்கோப் ஒரு பொருளை 270 மடங்கு பெரிதாக்கிக் காட்டியது. அவர் 17ஆம் நூற்றாண்டில் தயாரித்த 500 கருவிகளில் இன்றளவும் 10க்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. தற்போதைய உருப்பெருக்கி ஆடிகள் பலவகைச் சிறப்புகளுடன் இருந்தாலும் 1590இல் கண்டுபிடிக்கப்பட்ட உருப்பெருக்கி ஆடிதான் முன்னோடி.
மூக்குக் கண்ணாடிக் கடைக்காரரின் இரண்டு மகன்கள் விளையாட்டாக இரு லென்சுகளைச் சேர்த்து வைத்துப் பார்த்தபோது, உள்ளூர் தேவாலயத்தின் உச்சி மிக அருகில் தென்பட்டதாம். அதைக் கொண்டு தொலைநோக்கு ஆடி(டெலஸ்கோப்) உருவாக்கப்பட்டது என்பார்கள். மூக்குக் கண்ணாடிக் கடைக்காரர் ஆன லிப்பர்ஷெ தான் டெலஸ்கோப் கண்டுபிடித்தவர் எனலாம்.
ஆனாலும் இன்னும் சிலபேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். என்றாலும் லிப்பர்ஷெ கண்டுபிடித்த கருவியின் அடிப்படையில் அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் டெலஸ்கோப்கள் உருவாக்கப்பட்டன. அவை டச்சு டிரங்க் என்றழைக்கப்பட்டன. ஹாலந்து, நெதர்லாண்ட்ஸ் என்றெல்லாம் கூறப்படும் டச்சு நாடு கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், டச்சு தைரியம் (DUTCH COURAGE) என்பது பற்றிச் சிலருக்குத் தெரிந்திருக்கும். பியர் (BEER) குடித்த டச்சுக்காரர்கள், குடிவெறியில், தங்களுக்கு அசுர பலம் வந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு அடுத்தவர்களிடம் சண்டைக்குப் போவார்களாம்.
குடிகாரனை சும்மா தட்டுத் தட்டினாலே விழுந்துவிடுவான். எனவே, சும்மனாங்காட்டியும் உதார் விட்டுப் பேசுவதை டச்சு தைரியம் என்பார்கள்.
1609 மே மாதத்தில் வெனிஸ் நகரத்தில் இருந்த கலிலியோ அதுமாதிரி தொலைநோக்கு ஆடி ஒன்றைத் தயாரித்தார். அதன்வழியே சூரியனைப் பார்த்தார். அதில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஜூபிடர் கோளுக்கு 4 துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
சந்திரனில் மலைகள் இருப்பதையும் வீனஸ்கோளில் மடிப்புகள் இருப்பதையும் கண்டறிந்தார். இவைபற்றி 1610ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் வந்த (சைட்ரியல் மெசஞ்சர்) SIDERIUS NUNCIUS எனும் ஏட்டில் எழுதினார். இங்கே இந்து மதத்தில் சூரியன் ஒற்றைச் சக்கரத் தேரில் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் பவனி வருகிறது என்கிறார்கள்.
சந்திரனுக்கு 27 மனைவி என்கிறார்கள். குருவின் மனைவியை முறைதவறிப் புணர்ந்ததாகவும் அதனால் தரப்பட்ட சாபத்தால் 15 நாள்கள் தேய்வதாகவும் பின் 15 நாள்கள் வளர்வதாகவும் கதை. நம்பிக்கை, வழிபாடு, எல்லா இழவும்!
இரண்டு குவி ஆடிகளையும் கொண்டு ஜெகன்னஸ் கெப்ளர் வடிவமைத்த தொலைநோக்காடி, அய்சக் நியுட்டன் வடிவமைத்த பிரதிபலிக்கும் டெலஸ்கோப் என மேம்பாடுகளை அடைந்துகொண்டே உள்ளது.
அதைப்போலவேதான் மூக்குக் கண்ணாடிகளும். சாதாரண ஆடிகளைக் கண்டுபிடித்தவர்கள், உருவைப் பெருக்கிக் காட்டும் ஆடிகளை (லென்ஸ்) உண்டாக்கினார்கள். வெனிஸ் நகரில் இத்தொழில் வளர்ந்தது. கண்பார்வை குறைந்தவர்கள் இரண்டு கண்களுக்கும் இரு ஆடிகளை மரச்சட்டத்தில் வைத்துக்கொண்டு படித்தனர்.
செல்வினோ டிஅர்மேட் (1218_1312) மற்றும் அலசான்ட்ரோ டாஸ்பினா (1313இல் பிறப்பு) என்பவர்கள் இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர்கள் என்கிறார்கள். ஆனால் மார்கோபோலோவின் பயணக் குறிப்பு (1270ஆம் ஆண்டு)களில் வயதான சீனர்கள் இம்மாதிரி கண்ணாடி அணிந்திருந்ததைக் கண்டதையும் அவர்கள் 11ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் கண்டுபிடித்தது எனக் கூறியதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைய மூக்குக் கண்ணாடியை 1730இல் லண்டனைச் சேர்ந்த எட்வர்டு ஸ்கார்லெட் வடிவமைத்தார் என்பது மட்டும் போதும்.
தூரப் பார்வையும் கிட்டப் பார்வையும் கோளாறாகிப் போனவர்களின் பயன்பாட்டுக்காக இரண்டு லென்சுகளும் மேலே பாதி, கீழே பாதி என்றமைக்கப்பட்ட பைஃபோகல் லென்சுகள் வந்துள்ளன. பலநூறு கண்டுபிடிப்புகளைச் செய்த பெஞ்சமின் ஃபிராங்க்ளின் இதையும் கண்டுபிடித்தார்.
அவர் அமெரிக்க அதிபராக இருந்தது அனைவரும் அறிந்ததே!
இரண்டு லென்சுகளும் இரு துண்டுகளாக இல்லாமல் ஒன்றிலேயே இணைந்து செய்யப்படும் வெரிஃபோகல் (VARIFOCAL) லென்சுகள் 1950 முதல் செய்யப்படுகின்றன. கடவுள் படைத்த கண் கோளாறைச் சீர்செய்ய மனிதன் எத்தனை கண்டுபிடித்திருக்கிறான் எனும்போது மனித ஆற்றலை என்னென்பது?
நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதன், நேராக நிமிர்ந்து இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியதிலிருந்து கண் பார்வைக் கோளாறு தொடங்கிவிட்டதாம். மனிதன் இன்றைய உருவை, படிநிலை வளர்ச்சியால் (பரிணாமம்) தானே பெற்றான்!
அந்த வகையில் இன்றைய மனிதனை (ஹோமே சேப்பியன்) கடவுள் படைக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. கண் பார்வையைச் சீராக்கிட லென்சு வைத்த கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 1880இல் டாக்டர்கள் அடால்ப் ஃபிக் மற்றும் ஈஜின் கால்ட் ஆகிய இருவரும் கான்டாக்ட் லென்ஸ் கண்டுபிடித்தனர்.
விழியோடு ஒட்டி இருக்கும் இவை வலி, வீக்கம் போன்ற கூடுதல் கோளாறுகளை ஏற்படுத்தின என்றாலும் அமெரிக்காவில் 1935 முதல் 1939 வரை 10 ஆயிரம் ஜோடி விற்பனை ஆயின. பிளாஸ்டிக் கான்டாக்ட் லென்ஸ் 1949இல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை 2 லட்சம் ஜோடி என்று உயர்ந்தது.
PMMA எனும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட லென்சும் கார்னியாவில் கோளாறு ஏற்படுத்தியதால் HEMA எனும் பிளாஸ்டிக் கொண்டு லென்சு தயாரிக்கப்பட்டது. இதனை பாலிஷ் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சாப்லென்ஸ் என்பதை பாஷ் மற்றும் லாம்ப் நிறுவனம் 1971இல் தயாரித்துள்ளனர். இன்றைய நிலையில் கான்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேலே!
(தொடரும்)