இயக்கம் படைத்த இந்தி எதிர்ப்பு மாநாடு!
இந்திய நடுவணரசு இந்தி மொழித் திணிப்பு இல்லை இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, இந்தித் திணிப்பில் மிகத் தீவிரம் காட்டிவரும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தக்க தருணத்தில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த இந்தி எதிர்ப்பு மாநாடு 15.8.1978 அன்று காலை பெரியார் திடலில் எழுச்சியோடு கூடியது.
தமிழினத் தலைவர்கள் _ அனைத்துக் கட்சி தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டுக்கான டிக்கெட் வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. காலை எட்டு மணி முதலே திடலை நோக்கி மக்கள் வெள்ளம் புகத் தொடங்கியது. தந்தை பெரியார் பற்றிய இசைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் என்னுடைய தலைமையில் பொருளாளர் கா.மா.குப்புசாமி, விவசாயத் தொழிலாளர் பிரிவுச் செயலாளர் ஜோசப் மற்றும் கழகத் தோழர்கள், மூலக்கொத்தளத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு மாவீரர்களான தாளமுத்து, நடராசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அய்யா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டு மேடையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், குன்றக்குடி அடிகளார், ராஜா சர்.முத்தையா செட்டியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது, காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ்.மாரிசாமி, தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த திருமறவன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இம்மாநாட்டிற்கு ராஜா சர்.முத்தையா செட்டியார் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். குன்றக்குடி அடிகளார் மாநாட்டுச் சிறப்புரையாற்றினார்.
நான் வரவேற்புரை ஆற்றும்போது இந்தி திணிப்புக்கு நியாயம் கற்பிக்கும் எல்லா வாதங்களுக்கும் ஆதாரப்பூர்வமான மறுப்புரைகளை உணர்ச்சிபூர்வமாக எடுத்து விளக்கினேன்.
இந்தியை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தவர் தலைவர் தந்தை பெரியாரவர்கள். முதல் குரல் கொடுத்த பகுதி தமிழ்நாடுதான். 1926லேயே இந்தியின் ரகசியம் என்று ஒரு தலையங்கம் தீட்டி, தமிழுக்கு வரப்போகும் ஆபத்தினைத் தக்க முன்னுணர்வுடன் தெளிவுப்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.
அவர்தம் தானைத் தளபதியாக நின்று வென்று இந்தி அறப்போரில் ஈடுபட்ட பகுத்தறிவுக் குடும்ப தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவும் இன்று உருவத்தால் இல்லை என்றாலும் அவர்கள் இங்கு மட்டுமல்ல, இந்தி எதிர்ப்புக் குரல் கேட்கும் எங்கும் நீக்கமற உணர்வுப்பூர்வமாக வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன்.
1938இல் தமிழன் தொடுத்த போர் இன்னும் முடியாத போராக, முற்றுப் பெறாத போராக -_ தொடர் போராக இருக்கின்ற வேதனையுடன் மக்களின் உரிமை காக்க வேறு வழியின்றி திராவிடர் கழகம் முக்கியமான நேரத்தில், இம்மாநாட்டினைக் கூட்டியிருக்கிறது என்றும், இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி: அதை எதிர்ப்பவர்கள் அத்துணைபேரும் தேசத்துரோகிகள் என்ற வாதங்கள் இனி செல்லாது.
முன்பு இந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்; இப்போது எதிர்ப்பதேன்? எதிர்க்க உங்களுக்கு என்ன உரிமை? என்று கேட்பது போல இருக்கிறது அவரது பேச்சு!
அரசியல் சட்டத்திலேயே இந்திதான் ஆட்சி மொழி என்று ஆகிவிட்டது என்று கூறி, அதை இனிமேல் யாரும் மாற்றிட முடியாது என்று வாதாடும் இந்தி வெறியர்களுக்கு நாம் பல பழைய உண்மைகளை நினைவூட்டுவது இப்போது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.
இந்தி ஆட்சிமொழியானது எப்படி? அரசியல் சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கர் கூறும் ரகசியத்தை எடுத்துக்காட்டினேன். அதில்,
“Can the South tolerate dominence of the North?”
It may now not be a breach of secret if I revealed to the public what happened in the Congress Party meeting when the Draft Constitution of India was being considered, on the issue of adopting Hindi, as the national language. There was no article which proved more controversial than Article 115 which deals with the question. No article produced more opposition, no article more heat. After a prolonged discussion when the question was put the vote was 78 against 78. This tie could not be resolved. After a long time when the question was put to the party meeting the result was 77 against 78 for Hindi. Hindi won its place as a nation language by one vote. I am stating these facts from my personal knowledge. As a chairman of the Drafting Committee. I had naturally entry to the Congress Party enclosure.”
(Chapter 5, Page 14 Thoughts on Linguistic States.” by Dr. B.R. Ambedkar.)
இதே போல், திரு பி.ஜி.கெர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி மொழிக் கமிஷனில் உறுப்பினராக இருந்து, தனது மாறுபட்ட குறிப்பினைத் துணிவோடும், சுயமரியாதையோடும் எடுத்துரைத்த டாக்டர் பி.சுப்பராயன் அவர்களது குறிப்பில்,
“During the ensure of our discussions, I become convineed that Hindi having been accepted in the constitution, as the official
language, its exponents do not like to alter the constitution as if it were a sacrosanct
document. No constitution is immutable in its scope and our constitution cannot stand in the way of being amended as and when necessary in the interest of the country. We have already altered the constitution several times without any compunction. Those who oppose the proposal for the amendment of the constitution do not appreciate that due preparation should be made before Hindi could become the official language of the Union. In their enthusiasm of the present constitutional provisions they overlook the fact that they will be coercising the non-Hindi speaking people to adopt it, “while neither those people nor the Hindi language is ready for the purpose? In a very vital matter like the official language of India, a question which seriously affects the non Hindi speaking areas, the constitution can certainly be amended.”
Page 327, Kher Commission Report
தேசாயின் குறிப்பிலும்
டாக்டர் சுப்பராயன் அவர்களைப் போலவே அக்குழுவின் மற்றொரு உறுப்பினர் திரு. மகன்பாய் பி. தேசாய் எழுதியுள்ள ஒரு தனிக் குறிப்பில், (அக்குழுவின் அறிக்கை பக்கம் 338).
“In this connection I may note a significent
answer that a very important witness of a non-Hindi speaking state gave to a question if the centre decides to use Hindi in its communication with States how would you prepare for it? The answer given was, ‘if it is imposed on me, I would secede from the Union. This emphasises still further not only the need of a policy and a time schedule, but also that it must be such as may be accepted by non-Hindi speaking areas in
particular”
என குறிப்பிட்டிருக்கிறார். இந்தித் திணிப்பு விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்பதை இந்த அடிப்படையில்தான் ஆச்சாரியார், காமராசர் போன்ற தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாகவே பேசினார்கள். எனவே, இந்தியாவின் அய்க்கியத்தை, ஒருமைப்பாட்டினை விரும்புபவர்கள் இந்தியைத் திணிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டினேன்.
இந்தியர் என்று 100 ஆண்டுகளுக்கு முன் இல்லாத ஒரு நாட்டை உண்டாக்கிய பெருமை இங்கிலீசுக்குத்தான் உண்டு என்பதில் இரண்டு கருத்துகளே இருக்க முடியாது! நம் அனைவரையும் மட்டுமல்ல, உலகத்தையே ஒற்றுமைப்படுத்தும் இங்கிலீசை ஏன் விரட்டியடிக்க வேண்டும்? அம்மொழி உலக அறிவின் அறிவு வாயில் அல்லவா? என்று கேள்வியை எழுப்பினேன்.
அனைத்துலகில் எம் மூலையில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும் நாம் அதை அறிந்துகொள்ளுவது ஆங்கிலத்தின் உதவியால் அல்லவா? எனவே அதை ஏன் வெறுத்து விரட்ட வேண்டும்? அதை விரட்டுவது ஏன்? என்றும்,
இங்கிலீஷ் அந்நிய மொழி அல்லவா? சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டில் அயலவர் மொழியா ஆட்சி மொழியாக இருப்பது? என்று ஒருவாதம் வைக்கப்படுகிறது. இதைவிட கீறல் விழுந்த கிராமஃபோன் பாட்டு போன்ற வாதம் வேறு இருக்கவே முடியாது!
இங்கிலீஷ் என்பது வேற்று மொழி; அந்நிய மொழி என்று வெறுத்து ஒதுக்கத் துடிப்போர், வெளி ஆயுதங்களைத் தானே _ தளவாடங்களைத் தானே இன்னமும் நமது படைகளுக்கு உபயோகிக்கிறார்கள்?
வெளிநாட்டு விமானம் மூலம் பறக்கிறோமே! நம்முடையது புராதனமான பாரதீய கலாச்சாரம் பெருமை பொருந்தியது என்பதற்காக, கட்டை வண்டியிலா பயணம் செய்கிறோம்?
வெளிநாட்டின் நாடாளுமன்ற முறைகள், மரபுகளைத்தானே நடைமுறையில் நோக்குகிறோம்!
இந்தி வாலாக்கள் என்ற எழுத்தாளர்கள் எழுத்தாணி மயில் இறகு கொண்டா எழுதுகிறார்கள்? வெளிநாட்டுக்காரர்கள் ரயிலும், ஒலிபெருக்கியும், வானொலியும் வானொளியும், (டி.வி.யும்) இருக்கையில் அதைவிடப் பன்மடங்கு பயன்பட வேண்டிய இங்கிலீஷ் மட்டும் அந்நிய மொழி என்பதால் விரட்டப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? எப்படி தர்க்கரீதியாக சரியாகும்? என்று எல்லாம் அன்று கேள்விகளை எழுப்பினேன்.
ஆங்கிலம் அந்நியமொழி என்று கூறப்படுவதே நடைமுறைப்படிகூட அல்ல; சட்டப்படியேகூட சரியான வாதம் அல்ல.
ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றுதான் என்பதை பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினேன்.
பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் எம்.சி.சாக்ளா அவர்களும், ஜஸ்டிஸ் கே.டிக்சிட் அவர்களும் பம்பாய் அரசுக்கும், பம்பாய் கல்வி சொசைட்டி ஒன்றுக்கும் நடைபெற்ற ஒரு வழக்கில் (AIR 1945 Page 468) தீர்ப்பு எழுதியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டினேன்.
ஆங்கிலம் சிறுபான்மையோர் மொழி என்றும், அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் எல்லோர்க்கும் அந்நிய மொழி. இந்தி ஆட்சிமொழி என்றால், ஒரு சிலருக்குத் தாய்மொழியாக, இருப்பதால் அவர்கள் முதற்குடிமக்களாகவும் இந்தி பேசாத ஏனையோர் இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்படும் பேரபாயமும் தலைவிரித்தாட-வில்லையா?
நாகாலாந்தில் இங்கிலீஷ்தானே அம்மக்கள் மொழி? ஆங்கிலோ_இந்தியர்கள் என்று ஒரு பிரிவே அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ, பிரதிநிதித்துவ நியமனம் மூலம் தருகையில் ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியாகும்?
மெஜாரிட்டி_மைனாரிட்டி வாதம் கூறப்படுகிறது. நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 35 சதவிகிதம்தான். எஞ்சிய 65சதவிகிதத்தினர் தற்குறிகள் என்பதாக, அவர்களைப் பின்பற்றி பள்ளிகளை, கல்லூரிகளை மூடிவிடலாம் என்பதா முறை? நெறி?
எனவே, இங்கிலீஷ் என்பது நமக்கு அந்நிய மொழி அல்ல; காலம் நமக்களித்த அழியாத அறிவுச் செல்வமாகிய அதனைத் தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் லம்பாடி மொழி அமர்வது நமக்கு அறிவுச் சூனியத்தை, அருமையான பல வாய்ப்புகளையும் அடைக்கும் அடாத செயல்களே ஆகும் என்று குறிப்பிட்டு பல்வேறு, வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்து வரவேற்புரையை நிறைவு செய்தேன்.
(நினைவுகள் நீளூம்)