உற்சாக சுற்றுலாத் தொடர் 8
உலக வியப்பு! உள்ளத்தின் ஈர்ப்பு!
-மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்
காதல் என்றால் களிப்புறாத மனமே இருக்காது. காதலித்து மணம் புரிந்தவர்களும் சரி, மணம் புரிந்து காதலித்தவர்களும் சரி, அனைவருக்கும் வாழ்வின் இனிமையை முழுமையாக உணர்த்துவது காதல். அந்தக் காதலுக்குச் சின்னம் என்றால் முதலில் தோன்றுவது தாஜ்மகால் தான். அந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதிலும் பல்வேறு வழிகள், பல்வேறு நிறைவுகள்.
முன்பு பார்த்ததைவிட இந்த முறை உண்மையிலேயே அங்கிருந்த சுற்றுலா உதவியாளர் சொன்ன மாதிரி ராஜ முறையில் கண்டுகளித்தோம். நேசனல் ஜியோகிராபி செய்த அற்புத ஏற்பாடுகளினால் இந்த முறை பார்த்ததே முழுமையாக அமைந்தது.
தங்கியிருந்த விடுதி உலகின் மிக அழகான விடுதிகளில் ஒன்றான ஆக்ரா ஒபேராய் விடுதி. அந்த விடுதியின் தோட்டங்களும், நீச்சல் குளமும், வைத்துள்ள அலங்காரப் பொருட்களும் அரண்மனை போலத்தான் மிளிர்ந்தது. மலர்க் கோலங்கள், வண்ண மாவுக் கோலங்கள், அழகிய சிலைகள் ஆங்காங்கே!
அந்த விடுதியின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் தாஜ்மகால் தெரியும். ஆகவே முதலில் மாலையில் விடுதியிலிருந்து பார்த்த மாலை மயக்கம். இரவு கலை நிகழ்ச்சியுடன் கூடிய விருந்து.
வெளிநாட்டவர்கள் இந்திய உடை அணிந்து கைகளில் மருதாணிக் கோலங்கள் போட்டுக் கொண்டனர். ஆண்களும் போட்டுக் கொண்டனர். எங்கள் குழுவில் நாங்கள் இருவரும், குழுவின் மருத்துவர் ஆக மூவர் மட்டுமே இந்தியர். எனவே, சிறப்பு மரியாதை எங்களுக்கு!
அடுத்த நாள் சிறு சிறு குழுக்களாக நல்ல சுற்றுலா உதவியாளர்கள் விளக்கிச் சொல்ல ஏற்பாடு செய்து, நீண்ட நேரம் நிற்காமல், கும்பல் மிகுதியாக இல்லாத காலை நேரத்தில் விளக்கமாக அவர்கள் எடுத்துச் சொல்ல மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.
தாஜ்மகாலைப் பார்ப்பவர்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது அங்கு நல்ல சுற்றுலா உதவியாளரை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தச் செலவு மிகவும் பயனுள்ளது. இல்லாவிட்டால் நாம் என்ன பார்க்கின்றோம் என்றே தெரியாமல் பார்த்து விட்டு வருவோம்.
எத்தனை வேலைப்பாடுகள். எந்த உயரத்திலும் ஒரே மாதிரியாகத் தெரியக்கூடிய எழுத்துகள். தட்டையான பளிங்குக் கற்கள், ஆனால், பார்ப்பதற்கு நான்கு பக்கம் உள்ளது போன்ற தூண்கள், பளிங்கினால் செய்யப்பட்ட மலர்கள், ஒவ்வொரு இதழாகப் பதிக்கப்பட்ட கைவேலைப்பாடு.
இது எப்படிச் செய்யப் படுகிறது என்பதை அன்று மாலை ஆக்ராவில் உள்ள சிறந்த பளிங்குக் கல் கைவண்ணம் செய்யும் கடைக்குச் சென்று பார்த்தோம். ஒவ்வொரு இதழையும், சிறு சிறு வண்ணக் கல்லையும் சாணை பிடித்து இழைத்து அதை ஒட்ட வைக்கும் திறனைப் பார்த்து வியந்தோம்.
அங்கு பார்த்த பின்னர்தான் தெரிந்தது தாஜ்மகாலின் வேலைப்பாட்டு நுணுக்கம். அக்பரின் மகன் ஷாஜஹான் பெரிய போர்வீரன், கலைஞன், கவிஞன் என்று பல்துறை மன்னன். அவனுடைய மனைவிகளில் பர்சிய நாட்டு இளவரசி மும்தாஜ் அவனுடைய காதல் மனைவி.
போருக்குச் சென்ற போதும் அவனுடனேயே இருந்துள்ளார். படைவீரர்கள் விரைவில் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதற்காகப் பிரியாணியை உண்டாக்கினாராம். 14ஆவது குழந்தை பிறந்தபோது இறந்துவிட்டார். அந்தத் துயரத்திலிருந்து மீளத்தான் அவருக்கு ஓர் அற்புதக் கட்டிடத்தைப் படைக்க விரும்பினார்.
யமுனை நதிக்கரையில் அழகான இடத்தைத் தேர்ந்தெடுத்து அவ்விடத்தின் உரிமையாளரான ஓர் இந்து அரசருக்கு வேறு இடத்தைக் கொடுத்துவிட்டு இப்போது தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தை வாங்கினார். பல நாட்டு வல்லுநர்களையும், பல நாட்டுப் பொருள்களையும் பயன்படுத்தினார்.
சீன, துருக்கிய மற்றும் தென்னிந்தியக் கலைஞர்கள் ராஜஸ்தான் மற்றும் சீனா போன்ற இடங்களிலிருந்து 28 வகை பளிங்குகளும், ஜேடு, மற்ற விலையுயர்நத கற்களும் கொண்டுவரப்பட்டன. 20000க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள், ஆயிரம் யானைகள் 21 ஆண்டுகள் என்று மலைக்க வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விரல்கள் வெட்டப்பட்ட கதைகளெல்லாம் பொய்.
அது எப்படியிருக்க வேண்டும் என்று ஷாஜஹானே அவரது கவிதையில் கூறுகிறார்.
“மாளிகையைப் பார்ப்போர் பெருமூச்சு விடுவர்!
சூரியனும், சந்திரனும் கண்ணீர் சொரிவர்”
ஆம்! பெருமூச்சு விடாதவர்களே இருக்க முடியாது!
அப்போதிருந்த இசுலாமிய கலைக்கூடங்கள், அரண்மனைகள் சிவப்புக் கற்களில் ஆனவை. ஆனால் தாஜ்மகால் வெள்ளைப் பளிங்கில் கட்டப்பட்டது. ஒரு பெரிய தோட்டம். தோட்டத்திறகு நடுவிலே சதுரமான கட்டிடம்.
அந்தச் சதுரக் கட்டிடத்தின் நடுவே சதுரமான வெள்ளைப் பளிங்கில் பல்வேறு வண்ணக் கற்கள் பொதிக்கப்பட்ட தூண்களும், சுவர்களும், கட்டிடத்திலே கற்களினால் படைக்கப்பட்ட காதற் கவிதை! அதன் நடுவே எளிமையான வெள்ளைக் கல் பெட்டியிலே புதைக்கப் படவில்லை, விதைக்கப்பட்டுள்ளாள் மும்தாஜ்.
உலகின் அத்துனைக் காதல் மலர்களுக்கும் பெருமூச்சைத் தரும் காதல் கவிதைகள் அங்கு தினந்தினம் ஆயிரக்கணக்கானோரால் உயிர் பெறுகின்றன. அங்கு வார்த்தைகள் மிகவும் பேசப்படுவதில்லை. கைகோர்த்து நடப்பவர்களுங்கூடக் குறைவே!
ஆனால் கண்களால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும், இந்த மாதிரி மாளிகையை என்னால் கட்ட முடியாவிட்டாலும், என்னுடைய காதல் இதற்கு ஈடானதுதான் என்று சொல்லும் காதல் மொழி பகிர்ந்து கொள்ளப்படுவதை உணரலாம்!
அந்தக் காதல் பாட்டுகளே நம் வாழ்வின், புன்னகையின் அடித்தளம் என்பதை அவ்வப்போதாவது நினைத்துக் கொள்வோம், மகிழ்வுடன் வாழ்வோம் !
புன்னகை தொடரட்டும்…