நேபாளத்தில் நிலநடுக்கம்! ஆயிரக்கணக்கான மனிதர்கள் மண்ணுக்குள், இடிபாட்டிற்குள் சிக்கி மடிந்தனர். மனித நேயத்தோடு கவலை கொள்ளும், கண்ணீர் கசியும், இரங்கல் கொள்ளும் நிகழ்வு.
சுனாமியில் இறந்தாலும், சாலை விபத்தில் இறந்தாலும், நிலநடுக்கத்தில் அழிந்தாலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் நேயமுள்ள மனிதர்கள் நெஞ்சு நெகிழவே செய்வர். இறந்தவர் குடும்பத்தாருக்கு நம் கவலையைச் சொல்வோம், ஆறுதல் சொல்வோம், அவர்கள் துயரத்தில் பங்கு கொள்வோம்!
ஆனால், மனிதம் தொலைக்கும் மதவாதக் கூட்டம், எரியும் வீட்டில்கூட சுருட்டுப் பற்ற வைக்க முயற்சி செய்கிறது!
அறிவோடு, நடுநிலையோடு நோக்கின், நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளம் இவற்றில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகிறார்கள் என்றால் அவை, கடவுள் இல்லை என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள்.
கடவுள் கோட்பாடுபடி அனைத்தும் கடவுள் செயல். அப்படியென்றால் இவையும் கடவுள் செயல்களே!
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், அன்றைக்குப் பிறந்த அப்பாவிக் குழந்தைகள் உட்பட அனைவரும் துடிதுடித்து மடிகிறார்கள் என்றால், கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படிச் செய்யுமா? இவை கடவுள் செயலாக இருக்க முடியுமா? இயற்கை நிகழ்வாய் இருந்தால் மட்டுமே இப்படி நிகழ முடியும். எனவே, இந்த அழிவுகள் கூறுவது கடவுள் இல்லை என்பதைத்தானே!
அதிலும்கூட சிந்திக்காத பாமர மக்களுக்குக்கூட இச்சிந்தனை, இக்கேள்விதானே வரும். இப்படிச் சிந்தனை வந்து அவர்கள் கடவுள் இல்லையென்று முடிவுக்கு வந்துவிட்டால் என்னாவது என்று மதவாதிகளுக்குப் பதபதைப்பு! உடனே என்னென்ன சப்பைக் கட்டு கட்ட முடியுமோ அத்தனைச் சப்பைக் கட்டும் கட்டுகிறார்கள்.
ராகுல் காந்தி மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு நேதர்நாத் போனதால் நிலநடுக்கம் வந்ததாம்! கடவுள் சீற்றமாம்!
மாட்டுக்கறி சாப்பிட்டதால் கடவுளுக்குக் கோபம் என்றால், அப்பாவி மக்கள் 10 ஆயிரம் பேரை ஏன் அழிக்க வேண்டும்? அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனமல்லவா?
நேபாளத்துக்கு அப்பாலும் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதே, பல நூறுபேர் மாண்டனரே, அங்கு யார் மாட்டுக்கறி சாப்பிட்டது? இதற்கு முன் நேபாளத்தில் யாரும் மாட்டுக்கறி சாப்பிடவில்லையா? அப்போது ஏன் நிலநடுக்கம் வரவில்லை?
குஜராத்தில் பூகம்பம் வந்ததே, அப்போது யார் மாட்டுக்கறி சாப்பிட்டது? சுனாமி வந்து இலட்சக்கணக்கில் இறந்தார்களே! அதற்கு எது காரணம்?
விபத்தில் தப்பினால் கடவுள் செயலா?
நிலநடுக்கத்தில் சிலர் தப்பிப் பிழைத்தாலும், ஆகா! கடவுள் கருணையே கருணை என்கிறார்கள்! இது அயோக்கியத் தனமல்லவா! ஆயிரக்கணக்கில் செத்தார்களே, அவர்களுக்குக் கருணைக் காட்டாத கடவுள் இவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கருணை எப்படிக் காட்டிற்று. கடவுள் கையூட்டுப் பெறுகிறதா?
அய்யப்பன் கோவிலுக்குப் போகிற பலர் விபத்தில் இறக்கின்றனர். கடவுளை நம்பிச் சென்றவர்களுக்கு இப்படி நடக்கலாமா? கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா என்றால், அவர்கள் விரதம் சரியாக இல்லை, அவர்கள் தெய்வ குத்தம் செய்தவர்கள் என்று சமாளிக்கின்றனர்.
நாட்டில் கொலை செய்கிறவன், குண்டு வைக்கிறவன், கற்பழிக்கிறவன், சாமி சிலையையே கடத்துகிறவன், கோவிலுக்குள்ளே காம லீலை செய்கிறவனெல்லாம் நன்றாக இருக்கும்போது, அவர்களைத் தண்டிக்காத கடவுள், அப்பாவிகளைத் தண்டிப்பது எப்படி நியாயம்? அப்படியொரு கடவுள் செய்தால் அதைவிட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இருந்தால், கடவுள் கருணை வடிவுடையதாய் இருந்தால், கடவுள் இயக்கத்தில்தான் இவ்வுலகம் நடந்தால், கொடியவர்கள் வாழ்வும், கொடிய நோய்கள், கொள்ளை நோய்கள் தாக்குவதும், சுனாமியும், நிலநடுக்கமும் எப்படி வரமுடியும்.
ஆனால், இப்படியெல்லாம் நிகழ்கின்றன என்றால், எல்லாம் இயற்கையே, கடவுள் என்பது இல்லை; இயற்கையை அறிவின் துணைகொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்பதுதானே புரிந்துகொள்ளப்பட வேண்டும்!
கடவுள் சக்தி எங்கே?
1. 3 பிப்ரவரி 1954 அலகாபாத் உத்திரப்பிரதேசத்தில் நடந்த கும்ப மேளாவிழாவில் ஆயிரத்திற்கு-மேற்பட்டோர் மரண மடைந்தனர்.
2. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவில் 1992 இல் நடைபெற்ற மகாமக திருவிழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலின் போது மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 60 நபர்கள் பலியானார்கள்
3. 30 மார்ச் 2002 ஜம்மு ரகுநாத் கோவிலில் நடந்த விபத்து 40 பேர் மரணம்
4. 27 ஆகஸ்ட் 2003 நாசிக் நகரில் நடந்த கும்பமேளாவின் போது நடந்த விபத்தின் போது 40 பேர் மரணமடைந்தனர். 100 பேர் காயம்
5. 25 ஜனவரி 2005 மகராஷ்டிர மாநிலம் மந்திரா தேவி கோவிலில் நடந்த விபத்தில் 380 பேர் மரணமடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
6. 12 ஜூலை 2005 ஒரிசா பூரி தேர்த்திருவிழாவில் 13 பேர் மரணம்
7. 30 செப்டம்பர் 2006 ராஜஸ்தான் சாமூண்டீ தேவி கோவிலில் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 220 பேர் மரணமடைந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
8. 7 மார்ச் 2008 மத்தியப்பிரதேசம் இந்தூர் கர்லியா பகுதி கோவில் விபத்து 30 பேர் மரணம்
9. 3 ஆகஸ்ட் 2008 ஹிமாச்சலப்பிரதேசம் நைனா தேவி கோவில் நடந்த விபத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 40 குழந்தைகள் 88 பெண்கள்
10. 14 ஜனவரி 2010 கங்காசாகர் மகர சங்கராந்தி விழா விபத்து 20 பேர் மரணம்
11. 4 மார்ச் 2010 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் பிரதாப்கரில் உள்ள மடம் ஒன்றில் இலவச உடை கொடுப்பதாக கூறி நடந்த கூட்டம் ஒன்றில் குறுகிய கதவுகளில் நடந்த நெரிசலில் 60 பெண்கள் மரணமடைந்தனர்.
12. 16 அக்டோபர் 2010 பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம் தேவி கோவில் விழாவில் நடந்த விபத்து 20 பேர் மரணம்
13. 14 ஜனவரி 2011,சபரிமலையில் மகரஜோதியின் போது ஏற்பட்ட நெரிசலில் 120 பேர் மரணம் 200 பேர் படுகாயம்
14. 8 நவம்பர் 2011 ஹரித்துவாரில் நடந்த கங்கை ஆராத்தியின் போது கூட்ட பாலம் உடைந்து விட்டதாக கிளம்பிய வதந்தியால் ஏறப்ட்ட நெரிசலில் 22 பேர் மரண-மடைந்தனர். 70 பேர் காயமடைந்தனர்
15. 26 செப்டம்பர் 2012 ஜார்கண்ட் கோவில் விபத்து 13 பேர் மரணம்
16. 10 பிப்ரவரி 2013 அலகாபாத்தில் நடந்த கும்பமேளா விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்
17. ஜூன் 2013 கேதார்நாத் (உத்தரகண்ட் பகுதியில் யாத்திரையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் நடந்த விபத்தில் 7000 பக்தர்கள் பலி, 1713 பக்தர்களை காணவில்லை, 10000 மேற்பட்டோர் காயம்.
18. 14 அக்டோபர் 2013 நவராத்திரி திருவிழா கொண்டாடியபோது குறுகலான பாதையில் கனரக வாகனம் கட்டுப்பாடிழந்து வருவதாக பரவிய வதந்தியால் 115 பக்தர்கள் மரணம் 200 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
19. 10 பிப்ரவரி 2012 ஜூனாகட் (குஜராத்) பாவ்னாத் கோவில் விபத்து 10 பேர் மரணம்
20. 25 ஆகஸ்ட் 2014 மத்தியபிரதேசம் சத்னா மாவட்டம் உள்ள சோமாவதேஷ்வர் கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 25 பேர் மரணம்
21. 3 அக்டோபர் 2014 பீகார் மாநிலம் பாட்னா நகரில் தசரா விழாவின் இறுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோவில் மரணங்கள் என்ற தலைப்பில் இந்துஸ்தான் டைம்ஸ், ஆசிய மனித உரிமைகள் கழகம் மற்றும் இந்திய பத்திரிகையாளர் (அரசு சாரா) அமைப்புகள் வெளியிட்ட ஆய்வுகளின் குறிப்பில் இருந்து.
1980-முதல் இறுதியாக 2014 பீகார் மாநிலம் பாட்னா நகரில் தசராவிழாவின் போது நடந்த விபத்து என இந்தியா முழுவதும் நடந்த கோவில் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000 ஆயிரத்தை தாண்டும். சுமார் அரை லட்சம் பேர் நிரந்தரமாக உடல் ஊனமுற்றனர். இவ்விபத்துக்களால் அரசுக்கு 70 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி விபத்து நடக்கும் மாநிலங்களில் முதலிடம் மத்தியப்பிரதேசம், இரண்டாமிடம் ராஜஸ்தான், மூன்றாமிடம் இமாச்சலப் பிரதேசம், நான்காமிடம் உத்திரபிரதேசம், அய்ந்தாமிடம் குஜராத், தமிழகம் 13-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோவிலுக்கு செல்லும் போது ஏற்படும் சாலை விபத்து, கோவில் விழாக்களின் போது ஏற்படும் விபத்து, கோவில் திருவிழாவின் போது சுகாதாரக்குறை-பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு என 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கடவுள் சக்தியை நம்பி பக்தி செலுத்தியவர்கள் பரிதாபமாக மரணமடைந்தோர் பட்டியல் இன்னும் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டுக்கு ஒரு துளி இது!!!